Published On: Wednesday, February 22, 2012
இந்தியாவிலும் பெற்றோல், டீசல், கேஸ் விலை உயர்கிறது

(இந்தியாவிலிருந்து ஹமீது)
ஈரான் பிரச்சினையால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் அடுத்த மாதம் முதல் வாரத்தில் பெற்றோல் விலையுடன் டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையையும் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டு ஈரானை தனிமைப்படுத்த வேண்டும் என அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இங்கிலாந்து பிரான்ஸ் நாடுகளுக்கு கச்சா எண்ணெய் சப்ளையை ஈரான் அதிரடியாக நிறுத்தியது. ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் சப்ளை தடைபட்டுள்ள நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 120 அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. ஏற்கனவே கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெற்றோல் மீது லீற்றருக்கு ரூ.5 வரை இழப்பு ஏற்படுவதாக இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்தன.
உ.பி. உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தலுக்குப்பின் மார்ச் முதல் வாரத்தில் பெற்றோல் விலை லீற்றருக்கு ரூ. 3 உயரும் என தகவல் வெளியானது. தற்போது கச்சா எண்ணெய் விலை மேலும் உயர்ந்திருப்பதால் லீற்றருக்கு ரூ.5 வரை அதிகரிக்க கூடும் என எண்ணெய் நிறுவன உயர் அதிகாரிகள் சிலர் நேற்று தெரிவித்தனர்.
அதேசமயம் டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையையும் உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. தற்போது எண்ணெய் நிறுவனங்களுக்கு டீசல் விற்பனையில் லீ்ற்றருக்கு ரூ.14உம் எரிவாயு சிலிண்டர் விற்பனையில் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.390உம் இழப்பு ஏற்படுகிறது. இதை ஓரளவு சரிகட்டும் வகையில் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.3உம், எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.50 உயர்த்தவும் மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.