Published On: Sunday, February 12, 2012
இலங்கை - பாகிஸ்தான் ஜனாதிபதிகள் பேச்சுவார்த்தை

பாகிஸ்தானுக்கான இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்டு அங்கு சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரியை சந்தித்து இருதரப்பு விவகாரங்கள் குறித்துக் கலந்துரையாடியுள்ளார். இஸ்லாமாபாத்திலுள்ள ஜனாதிபதி மாளிகையில் வெள்ளி இரவு நடைபெற்ற இச்சந்திப்பில் கடந்த 3 தசாப்த கால யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வருவதற்கு பங்களிப்பு செலுத்திய பாகிஸ்தான் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இலங்கை ஜனாதிபதி நன்றிகளை தெரிவித்துள்ளார்.
அதேவேளை சீனி உற்பத்தி மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கான பாகிஸ்தான் பயன்படுத்தும் தொழில்நுட்பங்களை வழங்க முடியும் என பாகிஸ்தான் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அத்துடன் வீதி அபிவிருத்தி உள்ளிட்ட மேலும் சில மேம்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பான சில உடன்படிக்கைகளும் இருதரப்பிற்கும் இடையில் கைச்சாத்தாகியுள்ளமை குறிப்பிடத் தக்கது.
பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரியின் அழைப்பை ஏற்று மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜக்ஷ வெள்ளியன்று பாகிஸ்தான் சென்றார். அங்கு ஜனாதிபதிக்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது. இருநாட்டு ஜனாதிபதிகளின் சந்திப்பின்போது இலங்கைக்கு சகலவிதமான ஒத்துழைப்பும் வழங்க பாகிஸ்தான் ஜனாதிபதி இணக்கம் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன முதலானோரும் ஜனாதிபதியின் பாகிஸ் தான் விஜயத்தில் இணைந்து கொண்டுள்ளனர். இஸ்லாமாபாத் சென்றடைந்த ஜனாதிபதிக்கு இராணுவ அணி வகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது. தனது விஜயத்தை முடித்துக்கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று நாடு திரும்புகிறார்.
இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ராஜதந்திர உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாகவும், இரு நாடுகளுக்கு இடையிலும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தமொன்றை ஏற்படுத்திக்கொள்வது பற்றியும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி வெள்ளியன்று பேச்சு நடத்தினார். இரு நாடுகளினதும் வர்த்தக நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் நிதி உடன்படிக்கைகளை செய்து கொள்வது பற்றியும் பாகிஸ்தான் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இருநாட்டு ஜனாதிபதிகளுக்குமான இந்த தூதுக்குழு மட்ட சந்திப்பில் பாகிஸ்தான் வெளிவிவவாரங்களுக்கான அமைச்சர் ஹினா ரபானிகார், உள்துறை அமைச்சர் செனட்டர் ஏ. ரஹ்மான் மாலிக், பிரதமரின் நிதி ஆலோசகர் டொக்டர் அப்துல் ஹபிஸ் சைக், ஜனாதிபதியின் செயலாளர் நாயகம் எம். சல்மான் பருக்கி, வெளியுறவுச் செயலர் சலீம் எச். மன்விவல, சல்மான் பஸிர், விசேட செயலாளர் மேஜர் ஹரூன் ரkத், இலங்கைக்கான பாகிஸ் தான் தூதுவர் சீமா இலாஹி பலோச் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இலங்கை ஜனாதிபதியுடன் வெளியுறவு அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், பிரதியமைச்சர் துமிந்த திசாநாயக்க, சஜின் டி வாஸ் குணவர்தன எம்.பி. ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளியுறவு செயலாளர் கருணாதிலக்க அமுனுகம, பாகிஸ்தானிலுள்ள இலங்கைத் தூதுவர் ஏ.சி.எம். வீரக்கொடி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இச்சந்திப்பின்போது இலங்கைக்கும் பாகிஸ்தானுக்குமிடையிலான ராஜதந்திர உறவுகள் பிராந்திய, சர்வதேச ரீதியிலான வர்த்தக நடவடிக்கைகளில் சுமுகமான ஒத்துழைப்பு கொடுப்பது பற்றி பேசப்பட்டதாக ஜனாதிபதிக்கான ஊடகத்துறை தொடர்பாளர் பர்ஹத்துல்லா பாபர் கூறினார். பாகிஸ்தான் ஜனாதிபதி இரு நாடுகளுக்குமிடையில் நேரடி கப்பல் சேவையொன்றை ஆரம்பிப்பது பற்றியும் அது இருநாட்டு உறவுகளை மேம் படுத்த உதவி புரியுமென்றும் கருத்து தெரிவித்தார்.
அடுத்த மூன்று ஆண்டுகளில் இரு நாட்டு வர்த்தக தொடர்பின் மூலம் 375 டொலர் பில்லியனில் இருந்து 2 பில்லியன் டொலர் இலக்கை நோக்கி அதிகரிப்பது பற்றியும் பாகிஸ்தான் ஜனாதிபதி வலியுறுத்தினார்.