Published On: Friday, February 17, 2012
சஹாராவிடம் பணிந்தது பி.சி.சி.ஐ

சகாரா நிறுவனத்தின் அனைத்து கோரிக்கைகளையும் ஏற்றுக் கொண்ட பி.சி.சி.ஐ., அப்படியே "சரண்டர்' ஆனது. இதையடுத்து இந்திய அணியின் "ஸ்பான்சராக' நீடிக்க சகாரா சம்மதித்தது. ஐந்தாவது ஐ.பி.எல்., தொடரில் சகாரா புனே வாரியர்ஸ் அணியும் பங்கேற்கிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் "ஸ்பான்சராக' 11 ஆண்டுகளும், ஐ.பி.எல்., "புனே வாரியர்ஸ்' அணியின் உரிமையாளராகவும் சகாரா நிறுவனம் இருந்தது. புனே அணி கேப்டனாக இருந்த யுவராஜ் சிங், "கேன்சர்' பாதிப்பிற்காக சிகிச்சை பெற திடீரென அமெரிக்கா சென்றார்.
இவருக்குப் பதிலாக வேறு வீரரை சேர்க்க, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,), அனுமதி மறுக்க, இந்திய அணியின் "ஸ்பான்சர்' நிலையில் இருந்து சகாரா திடீரென விலகியது. இதனால், பி.சி.சி.ஐ.,க்கு ரூ. 2,234 கோடி வரை இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டது.
இதையடுத்து நடந்த சமரச பேச்சுவார்த்தையில், சகாராவின் கோரிக்கை ஏற்கப்படாததால், மீண்டும் முட்டுக்கட்டை ஏற்பட்டது. பின் இப்பிரச்னையில் பி.சி.சி.ஐ., முன்னாள் தலைவர் சஷாங்க் மனோகர் தலையிட்டார். இதையடுத்து நேற்று நடந்த பேச்சுவார்த்தையில், 12 நாட்கள் இழுபறிக்குப் பின், சமரசம் ஏற்பட்டது.
இதன் படி, எடுக்கப்பட்ட முடிவுகள்:
* நேற்றுடன் முடிந்த ஐ.பி.எல்., வீரர்கள் ஏலம், வரும் பிப்., 29ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
* யுவராஜுக்கு பதிலாக புதிய வீரரை சேர்க்க அனுமதி அளிக்கப்பட்டது.
* யுவராஜ் சிங்கிற்கு கொடுக்கப்பட்ட தொகையை கொண்டு, மற்ற வீரர்களை ஏலத்தில் எடுக்கலாம்.
* மற்ற ஐ.பி.எல்., அணிகளின் ஒப்புதலுடன், விளையாடும் லெவனில் 4 வீரர்களுக்குப் பதில், 5 வெளிநாட்டு வீரர்களை சேர்க்கலாம்.
* ஐ.பி.எல்., போட்டிகளின் எண்ணிக்கையை குறைத்ததால் (94ல் இருந்து 74), பங்குத் தொகையை குறைக்க வேண்டும் என்பது குறித்த பேச்சு வார்த்தை நடத்தவும் பி.சி.சி.ஐ., முன்வந்துள்ளது.
* சகாரா புனே அணியில் மற்றொரு நிறுவனத்தை பங்குதாரராக சேர்த்துக் கொள்ள பி.சி.சி.ஐ., சம்மதித்தது.
* முதல் ஏலத்தில் பங்கேற்காத வீரர்களை, மற்ற அணி உரிமையாளர்கள் சம்மதத்துடன் எடுத்துக்கொள்ளலாம்.
* வங்கி உத்தரவாதம் தொகையை இரு தவணைகளில் சகாரா நிறுவனம் செலுத்த, பி.சி.சி.ஐ., சம்மதித்தது.