Published On: Wednesday, February 29, 2012
மனிஷா கொய்ராலா வாழ்க்கை படமாகிறது

சிலுக்கை தொடர்ந்து மனிஷா கொய்ராலா கதை படமாகிறது. இதற்கு மனிஷா அனுமதி அளிக்கமாட்டார் என்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சில்க் ஸ்மிதா வாழ்க்கையை மையமாக வைத்து பாலிவுட்டில் ‘தி டர்ட்டி பிக்சர்ஸ்’ என்ற படம் உருவானது. இதற்கு வரவேற்பு கிடைத்ததையடுத்து பரபரப்பாக பேசப்பட்ட ஹீரோயின்களை மையமாக வைத்து கதைகள் உருவாக்கப்படுகிறது. இந்நிலையில் பாலிவுட் மற்றும் கோலிவுட்டில் நடித்துள்ள மனிஷா கொய்ராலா வாழ்க்கையை மையமாக வைத்து இந்தியில் ‘ஹீரோயின்’ என்ற பெயரில் படம் உருவாக்கப்படுகிறது. மனிஷா கொய்ராலா வாழ்க்கையில் பல்வேறு திருப்பங்கள் நிகழ்ந்துள்ளன.
இந்தியில் டாப் ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து புகழ்பெற்று டாப் அந்தஸ்த்துக்கு சென்றார். தமிழிலும் ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தார். கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு திடீரென்று நேபாளத்தை சேர்ந்த தொழில் அதிபரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் அவரது வாழ்க்கை இனிக்கவில்லை. ‘என் கணவரை விவாகரத்து செய்யப்போகிறேன்’ என்று தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்த மனிஷா திடீரென்று அதை திரும்ப பெற்றார். சமீபகாலமாக நள்ளிரவு பார்ட்டிகளில் கலந்துகொள்ளும் அவர் குடித்துவிட்டு போதை அதிகமாகி தள்ளாடும் சூழலுக்கு சென்றுவிடுகிறார். இதனால் அவரது நடவடிக்கையை பாலிவுட் பத்திரிகைகள் பரபரப்பாக வெளியிட்டு வருகின்றன.
இந்நிலையில் இயக்குனர் மதுர் பண்டர்கர் ‘ஹீரோயின்’ என்ற படத்தை இயக்குகிறார். கரீனா கபூர் ஹீரோயின். இப்படம் மனிஷா கொய்ராலாவின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாவதாக கூறப்படுகிறது. ஆனால் இதை இயக்குனர் மறுத்திருக்கிறார். ‘நடிகையின் வாழ்க்கை பற்றிய கதையைத்தான் எடுக்கிறேன். ஆனால் தனிப்பட்ட முறையில் எந்த நடிகையின் வாழ்க்கையையும் சித்தரிக்கவில்லை’ என்றார். மனிஷாவின் கதையை படமாக்கினால் அதை அவர் அனுமதிக்க மாட்டார் என்று மனிஷா தரப்பில் கூறப்படுகிறது.