Published On: Wednesday, February 29, 2012
'நான் ஈ' யில் மதன் கார்க்கியின் வித்தியாசமான பாடல்

சமீபகாலமாக தமிழ் படங்களில் மற்ற கவிஞர்களிடமிருந்து வேறுபட்டு, புதுப்புது வார்த்தைகளோடும், புதுப்புது வரிகளோடும் தனக்கென ஒரு ஸ்டைலில் பாடல் வரிகளை எழுதி வருபவர் மதன் கார்க்கி. பொதுவாக கவிஞர்கள் யோசித்து யோசித்து படத்தின் வெற்றிக்கு, பாடலின் பங்கு குறித்து மிகுந்த சிரத்தை எடுத்து கெண்டு வார்த்தைகளை கோர்த்து கோர்த்து, ரசிகர்கள் ரசிக்கும் விதமாக படைப்பை கொடுத்து வருவது வழக்கம். அந்தவகையில் கார்க்கி ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசமான பாடல்களை கொடுத்து வருகிறார். தற்போது ராஜ மவுலி இயக்கும் "நான் ஈ" படத்தில் மரகதமணி இசையில், ரொம்பவே வித்தியாசமான வரிகளில் பாடல் எழுதி, பலரின் பாராட்டை பெற்று இருக்கிறார். படத்தின் கதைப்படி நுண் சிற்பவியல் படிக்கும் சமந்தா, ஒரு ஓவியம் வரையும் போது வெளிச்சம் மறைந்து இருள் சூழ்கிறது. இதைகண்ட கதாநாயகன், தன் வீட்டில் இருந்து ஒளியை பாய்ச்சுகிறான். அப்போது ஒரு பாடல் பிறக்கிறது. அதன் வரிகள்...
வீசும் வெளிச்சத்தில் துகளாய் நான் வருவேன்
பேசும் வெண்ணிலவே உனக்கே ஒளி தருவேன்
நுண் சிலை செய்திடும் பொன் சிலையே
பென்சிலை சீவிடும் பெண் சிலையே
என் நிலை கொஞ்சம் பார்ப்பாயா...
என்று அறிவியலும், அழகு தமிழும் கலந்து ரொம்பவே வரிகளை செதுக்கி செதுக்கி எழுதியுள்ளார் கார்கி. நான் ஈ படத்தில் அனைத்து பாடல்களையும் எழுதியுள்ள கார்க்கி, இந்த படத்திற்கு பாட்டு எழுதும் போது ரொம்பவே சவாலாக இருந்தது என்கிறார். இப்போது ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மணிரத்னத்தின் கடல், முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் துப்பாக்கி, கே.வி.ஆனந்த் இயக்கும் மாற்றான் உள்ளிட்ட இன்னும் பல படங்களுக்கு பாடல்களை எழுதி வருகிறார்.
அப்படின்னா தொடர்ந்து இனி நிறைய தமிழ் படங்களில் கார்க்கியின் அழகான பாடல் வரிகளை பார்க்கலாம், ரசிக்கலாம் என்று சொல்லுங்கள்...!!