Published On: Monday, February 13, 2012
தனியார் பேரூந்து சேவைகள் நாளைமுதல் வழமைக்கு
தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் அரச அதிகாரிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் இன்று மாலை 5 மணிக்கு இடம்பெற்றது. இப்பேச்சுவார்த்தையின் பின்னர், பணி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பேருந்துக்கள் நாளை திங்கட்கிழமை முதல் வழமைபோல சேவையில் ஈடுபடுமென கெமுனு விஜயரத்ன தெரிவித்தார்.
பேருந்து உரிமையாளர்களின் 20 சதவீத கட்டண அதிகரிப்பிற்கு அரசாங்கம் இணங்கியதனை அடுத்தே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக கெமுனு விஜயரத்ன குறிப்பிட்டார். இதன்படி, தற்போது, 7 ரூபாவாக அறவிடப்படும் ஆகக்குறைந்த பேருந்து கட்டணம் 9 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது. குறித்த கட்டண மாற்றங்கள் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பெரியமுல்ல புகையிரத கடவையில் நடத்தப்பட்டு வரும் மீனவர்களின் போராட்டம் காரணமாக கொழும்பு கோட்டை மற்றும் புத்தளத்திற்கு இடையேயான புகையிரத சேவை நீர்கொழும்பு வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
இருந்த போதிலும், ஏனைய பாதைகளில் வழமையான சேவைகளுக்கு மேலதிகமாக புகையிர சேவைகள் இடம்பெற்று வருவதாக திணைக்களத்தின் போக்குவரத்து அதிகாரி எல்.ஏ.ஆர். ரட்நாயக்க தெரிவித்துள்ளார். நாரஹேன்பிட்டி பிரதேசத்தில் தனியார் பேரூந்து சாரதி மற்றும் நடந்துனர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 29 பேரில் 25 பேர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றில் அவர்கள் இன்று முன்னிலைப் படுத்தப்பட்டிருந்தார்கள். ஏனைய நான்கு பேரையும் நாளை வரை விளக்க மறியலில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதவிர அனைத்து சந்தேக நபர்களும் நாளைய விசாரணையின் போது நீதிமன்றத்தில் சமூகம் அளிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.