Published On: Saturday, February 18, 2012
ஒருதலைக்காதல் சென்னை மாணவி குத்திக் கொலை

சென்னையில் ஒருதலைக் காதல் விவகாரத்தால் சென்னை கல்லூரி மாணவியை இளைஞர் ஒருவர் குத்திக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனாம்பேட்டை கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் வசித்து வந்தவர் சங்கீதா (வயது 19). இவர் காயிதே மில்லத் கல்லூரியில் படித்து வந்தார். அதே பகுதியில் வசித்து வந்த மணிகண்டன் என்பவர் சங்கீதாவை ஒருதலையாக காதலித்து வந்தார்.
ஆனால், மணிகண்டனின் காதலை சங்கீதா ஏற்றுக் கொள்ளவில்லை. இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு வீட்டு அருகே சங்கீதா சென்று கொண்டிருந்தபோது மணிகண்டன் அவரை வழிமறித்து பேசினார். என்னைத்தவிர வேறு யாரும் உன்னை திருமணம் செய்தால் நான் சும்மாவிட மாட்டேன் என மிரட்டினார். ஆனால், சங்கீதா இதனை காதில் வாங்கிக் கொள்ளாமல் நடந்து சென்று கொண்டே இருந்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக குத்தினார். இதில் உடலின் பல்வேறு இடங்களில் கத்திக்குத்து விழுந்தது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் சங்கீதாவின் உயிர் பிரிந்தது.
கூட்டத்தை பார்த்ததும் மணிகண்டன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். அங்கிருந்தவர்கள் அவரை விரட்டிச்சென்று பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் தேனாம்பேட்டை போலீசார் மணிகண்டனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.