Published On: Friday, February 24, 2012
கெடுபிடிகளுக்கு மத்தியில் மானியம் என்பது முறையான தீர்வல்ல
(பஹமுன அஸாம்)
பல கெடுபிடிகளுக்குள் இருந்து மீண்டும் அமைதியான ஒரு நிலையில் மக்கள் தமது வாழ்க்கையை நடாத்த எத்தனித்துக் கொண்டிருக்கும் இத்தருணத்தில், ஜனாதிபதி எடுத்துள்ள திடீர் முடிவுகள் மக்கள் மத்தியில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில் அரச தரப்பினர் மானியம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மானியம் என்பது அனைத்துத் தரப்பினருக்கும் சாதகமான தீர்வாகாது.
காரணம், மானிய அட்டைகளைப் பெற்றுக் கொள்வதில் மக்களுக்குள்ள பிரச்சினைகள். சாதாரணமாக அன்றைய நாள் கூலிக்காக வெயிலிலும் மழையிலும் போராடும் மக்களுக்கு இந்த மானிய அட்டைகள் தேவைப்படும். மக்கள் இந்த மானிய அட்டையைப் பெறுவதற்காக ஒருநாளை செலவிட வேண்டியிருக்கும். ஏகப்பட்ட பத்திரங்களை நிரப்ப வேண்டியிருக்கும். பிரதேசசபை அங்கு, இங்கு என்று செல்ல வேண்டியிருக்கும்.
இவற்றைத் தான்டி மானிய அட்டையைப் பெற்றுக் கொண்டாலும், எல்லா எரிபொருள் நிலையங்களிலும் அவர்கள் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியாது. குறிப்பிட்ட சில எரிபொருள் நிலையங்களுக்கே அரசு மானிய அட்டைக்கு எரிபொருள் வழங்குவற்கான சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளது. சில சமயங்களில் எரிபொருள் தீர்ந்துவிட்டது என்ற பதாகைகள் கூட அங்கு காணக்கிடைக்கும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் மக்கள் எங்கு சென்று எரிபொருளைப் பெற்றுக் கொள்வது.
அது ஒருபுறமிருக்க ஒரு சாராருக்கு மாத்திரம் மானியம் வழங்கினால், ஏனைய மக்களின் நிலை என்ன? எனவே, மானியம் என்பது அனைத்துத் தரப்பினருக்கும் சாதகமான ஒரு தீர்வல்ல. பொருட்களின் விலையிறக்கமே ஒழுங்கான ஒரு தீர்வாகும்.