Published On: Friday, February 24, 2012
முத்தரப்பு தொடர்; இன்று அவுஸ்திரேலியா- இலங்கை மோதல்

இந்தியா, அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் தொடர் அவுஸ்திரேலியாவில் நடக்கிறது.
இதுவரை நடந்த போட்டிகளின் முடிவில் 8 போட்டிகளின் முடிவில் புள்ளிப்பட்டியலில் அவுஸ்திரேலியா(14 புள்ளி), இலங்கை(11) மற்றும் இந்தியா(10) அணிகள் முதல் மூன்று இடங்களில் உள்ளன.
இன்று ஹோபர்ட்டில் நடக்கும் 9வது லீக் போட்டியில் அவுஸ்திரேலியா, இலங்கை அணிகள் மூன்றாவது முறையாக மோதுகின்றன.
கடந்த 17 ஆண்டுகளில் சொந்த மண்ணில் பொண்டிங் இல்லாமல், அவுஸ்திரேலிய அணி முதன் முறையாக ஒருநாள் தொடரில் இன்று விளையாடுகிறது. இது மீண்டும் அணிக்கு திரும்பியுள்ள அணித்தலைவர் கிளார்க்கை எவ்விதத்திலும் பாதிக்காது.
ஆல் ரவுண்டர் வாட்சன் மீண்டும் அணியில் இடம் பெற்றுள்ளது பெரிய பலமாக உள்ளது. இவருடன் வார்னர் இணைந்து தொடக்கம் தருவதால், வேட் பின்வரிசையில் தான் களமிறங்க முடியும்.
மற்றபடி கிறிஸ்டியன், பாரஸ்ட், மைக்கேல் ஹசி, டேவிட் ஹசி ஆகியோர் சொந்தமண்ணில் திறமை வெளிப்படுத்த காத்திருக்கின்றனர். பந்துவீச்சில் ஹாரிஸ், பிரட் லீ, மெக்கே மற்றும் தோகர்டி கூட்டணி சாதிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்கள், பந்துவீச்சாளர்கள் என அனைவருமே மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். அவுஸ்திரேலியாவிற்கு எதிரான கடந்த போட்டியில் அசத்திய தில்ஷன், ஜெயவர்தனா, சங்ககரா, திரிமான்னே மற்றும் சண்டிமால் ஆகியோர் இன்றும் அதிரடி காட்ட முயற்சிக்கலாம்.
ஆல் ரவுண்டர்கள் மாத்யூஸ், பெரேராவும் அணியின் வெற்றிக்கு கைகொடுக்கலாம். பந்துவீச்சில் மலிங்கா, குலசேகரா, பெரேரா மற்றும் மகரூப் கூட்டணி அவுஸ்திரேலிய அணிக்கு மீண்டும் தொல்லை தர காத்திருக்கிறது.
இரு அணிகள் மோதிய கடந்த இரு போட்டிகளில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றன. இதில் அவுஸ்திரேலிய அணி, இலங்கையை அவ்வளவு எளிதில் வீழ்த்த முடியவில்லை. இதனால் இன்று வெற்றிக்கு கிளார்க் கடுமையாக போராட வேண்டியது இருக்கும்.