Published On: Wednesday, February 29, 2012
ஜெயலலிதா வழக்கிலிருந்து விடுதலைபெற சிறப்பு பூஜை

(இந்தியாவிலிருந்து சாஹுல் ஹமீது)
முதல்வர் ஜெயலலிதா, அவரது முன்னாள் தோழி சசிகலா வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கு, பெங்களூர் சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. முதல்வர் ஜெயலலிதா, நேரில் ஆஜராகி பதில் அளித்தார். சசிகலாவும் கடந்த வாரம் 4 நாட்கள் கோர்ட்டில் ஆஜராகி நீதிபதியின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். வழக்கு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.
இந்நிலையில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், வருவாய்த்துறை அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் ஆகியோர் காஞ்சிபுரம் காந்தி ரோட்டில் உள்ள வழக்கறுத்தீஸ்வரர் கோயிலுக்கு வந்தனர். சொத்து குவிப்பு வழக்கில் இருந்து முதல்வர் விடுதலையாக வேண்டும் என்று பிரார்த்தித்து சிறப்பு பூஜை நடத்தினர். பின்னர் கோயிலை வலம் வந்தனர்.
இந்த பூஜையில் எம்எல்ஏக்கள் சோமசுந்தரம், வாலாஜாபாத் கணேசன், ஒன்றியக்குழு தலைவர் தும்பவனம் ஜீவானந்தம், நகர செயலாளர் ஸ்டாலின் மற்றும் அதிமுக முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்த கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபட்டால், வழக்கில் சிக்கியவர்கள் விடுதலையாகி விடுவார்கள் என்பது ஐதீகம். இதனால்தான், முதல்வர் ஜெயலலிதாவுக்காக இந்த கோயிலில் சிறப்பு பூஜை நடத்தியுள்ளனர்.