Published On: Wednesday, February 29, 2012
கூடங்குளத்தில் ஜெர்மான் நாட்டவர் நாடு கடத்தல்

(இந்தியாவிலிருந்து சாஹுல் ஹமீது)
கூடங்குளத்தில் நடந்து வரும் போராட்டம் வெளிநாட்டு நிதி உதவியுடன் நடந்து வருகிறது என்று பிரதமர் முதல் ரஷ்யா தூதர் வரை சொல்லிக்கொண்டிருந்தாலும் போராட்ட களத்தின் முக்கிய பிரமுகரான உதயக்குமார் இதனை மறுத்து வந்தார். ஆனால் இதனை உண்மையாக்கும் வகையில் குமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஒரு விடுதியில் தங்கி இருந்த ஜெர்மன் நாட்டை சேர்ந்தவரை கண்டுபிடித்து அவரை நாடு கடத்தினர்.
14 ஆயிரம் கோடி செலவில் நாட்டின் மின் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் கூடங்குளம் அணு மின் நிலையம் துவக்கும் பணி துரிதமாக நடந்தது. திறக்கவிருந்த நேரத்தில் இதனை சுற்றியுள்ள பகுதி மக்களை திரட்டி உதயக்குமார் என்பவர் தலைமையில் போராட்டம் நடந்து துவக்கப்பட்டது.
பலக்கட்ட போராட்டங்களை அடுத்து மக்கள் சந்தேகங்களை நீக்கிட மத்திய , மாநில அரசு சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக்குழுக்கள் அணு மின் உலையில் எவ்வித ஆபத்தும் இல்லை என்று சொன்ன போதிலும் இதனை ஏற்க மறுத்து வருகின்றனர். இதனால் மின் உற்பத்தி பாதிக்கப்படுவதோடு மாதம்தோறும் ரூ 750 கோடி இழப்பு ஏற்பட்டது.
இந்த போராட்டம் நடத்த வெளிநாடுகளில் இருந்து தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு நிதி வருகிறது என பல முறை சொல்லி வந்தது. குறிப்பாக ஜெர்மனி என்றும் சொல்லியிருக்கிறது. இது தொடர்பாக மத்திய புலனாய்வு, வருமான வரித்துறையினர் ரகசிய ஆய்வு நடத்தினர். இதன் அறிக்கையும் தாக்கல் செய்ப்பட்டுள்ளது.
இந்நிலையில் குமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரியில் தங்கி இருந்த ஜெர்மான் நாட்டை சேர்ந்த சான்டெங்ரெய்னர் ஹெர்மான் என்பவர் தங்கி இருப்பதாக மத்திய உளவு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கியூ பிரிவு போலீசார் விடுதிக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். இவரிடம் இருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. இவரிடம் முழு அளவில் விசாரணை நடத்தப்பட்டது.
எப்படி சிக்கினார் இந்த எஜமானர் ? : நாகர்கோவில் விடுதி ஒன்றில் தங்கிஇருப்பதாக மத்திய உளவு பிரிவு படையினர் சென்னையில் உள்ள கியூ., பிரிவு போலீஸ் உயர் அதிகாரிக்கு தெரிவித்தனர் . இதனை தொடர்ந்து அவரது நடவடிக்கை ரகசியமாக கண்காணிக்கப்பட்டது. இவர் கூடங்குளம் போராட்டக்காரர்களை சந்திப்பதும், இவர்களுடன் தொலை பேசியில் பல மணி நேரம் பேசுவதுமாக இருந்துள்ளார். இந்த விடுதியில் கடந்த 12 ம் தேதி முதல் தங்கியிருந்துள்ளார். பல நாட்கள் கண்காணித்து தொடர்பை உறுதி செய்தனர். இதனையடுத்து விடுதிக்கு சென்று சோதனை நடத்தினர். பின்னர் அங்கிருந்து ஜெர்மனிக்கு செல்லுமாறு நாடு கடத்தினர். இனிமேல் இந்தியாவில் தங்க கூடாது என எச்சரித்து அனுப்பினர்.
போராட்டக்காரர்களுக்கு நிதி வழங்கியதற்கான சில ஆதாரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. குறிப்பாக உதயக்குமார் மற்றும் லால்மோகன் ஆகியோருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார் என்றும் தெரிய வந்திருக்கிறது.