Published On: Wednesday, February 29, 2012
செல்போனில் ‘கோல்’ செய்தால் மோட்டார் ஓடும்
(இந்தியாவிலிருந்து சாஹுல் ஹமீது)
செல்போன் அழைப்பு மூலம் மின் மோட்டார் இயக்கும் கருவி, குமரி மாவட்டம் கடுக்கரை ஊராட்சியில் பொருத்தப்பட்டுள்ளது. ஊராட்சி தலைவர் உள்பட 4 பேரின் செல்போனில் இருந்து ‘கோல்’ கொடுத்தால் மோட்டார் இயங்கும். குமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ளது கடுக்கரை ஊராட்சி குடிநீர் வினியோகத்துக்காக இங்கு மொத்தம் 4 இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இருக்கிறது. போர்வெல் மூலம் தண்ணீர் நிரப்பி, பின்னர் வினியோகம் செய்யப்படும். இந்த பணியையும் பாதித்தது தொடர் மின்வெட்டு. ஊழியர்களின் டூட்டி நேரத்தில் கரன்ட் இருக்காது. எல்லாரும் வேலை முடித்து போன பிறகு கரன்ட் வரும். இதனால், போர்வெல் போட முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த சிரமத்தை போக்கும் வகையில் செல்போன் உதவியுடன் செயல்படும் மோட்டார் ஆட்டோமேடிக் கன்ட்ரோல் கருவியை தற்போது பொருத்தியுள்ளனர். மோட்டார் சுவிட்சுடன் செல்போன் சிம்கார்டு ஒன்று பிரத்யேக சர்க்யூட் உதவியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 10 இலக்க எண் கொண்ட வழக்கமான சிம்கார்டுதான். இந்த எண்ணுடன் ஊராட்சி தலைவர், துணை தலைவர், ஊராட்சி செயலர், குடிநீர் விடுனர் ஆகியோரது செல்போன் எண்கள் இணைக்கப்பட்டுள்ளன. அவர்களது செல்போனில் இருந்து இந்த சிம் எண்ணுக்கு அழைப்பு வந்தால், உடனே மோட்டார் ஆன் ஆகிவிடும். அவர்கள் எங்கு இருந்தாலும் இருந்த இடத்தில் இருந்தே, இதன்மூலம் மோட்டாரை இயக்க முடியும்.
‘மோட்டார் ஆன் ஆகிவிட்டது’ என்று உடனடியாக அவர்களுக்கு எஸ்.எம்.எஸ். உடனே வந்துவிடும். தொட்டி நிரம்பிய பிறகு, ‘டேங்க் ஃபுல்’ என்று மெசேஜ் வரும். இன்னொரு ‘கோல்’ கொடுத்தால், மோட்டார் ஆப் ஆகிவிடும். மோட்டார் ஓடும்போது கரன்ட் போனாலும் மெசேஜ் வரும். திரும்ப கரன்ட் வந்த பிறகு, மோட்டார் தானாகவே இயங்கத் தொடங்கி, அதற்கும் ஒரு மெசேஜ் அனுப்பிவிடும். கடுக்கரை ஊராட்சியின் 4 மோட்டார்களிலும் 2 நாட்களாக இக்கருவி வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. விருதுநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் இதுபோல செல்போன் உதவியுடன் மோட்டார் இயக்குவதை கேள்விப்பட்டு கடுக்கரை ஊராட்சியில் செயல்படுத்தியதாக ஊராட்சி தலைவர் வள்ளிநாயகம் தெரிவித்தார்.