Published On: Saturday, February 25, 2012
ஜெயலலிதா உருவத்தை பச்சை குத்திய தொண்டர்கள்
(இந்தியாவிலிருந்து சாஹுல் ஹமீது)
அதிமுக பொதுச்செயலாளர் முதல்வர் ஜெயலலிதாவின் 64வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரையில் மாநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் உருவத்தை பச்சை குத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், கூட்டுறவு துறை அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ கலந்து கொண்டு முதல்வர் ஜெயலலிதாவின் உருவத்தை தனது கையில் பச்சை குத்தி துவக்கி வைத்தார். அவரை தொடர்ந்து ஏ.கே.போஸ் எம்எல்ஏ, மண்டல தலைவர்கள் பெ.சாலைமுத்து, கே.ஜெயவேல், மகளிரணி செயலாளர் பெ.இந்திராணி மற்றும் ஏராளமான அதிமுக தொண்டர்கள் தங்களது கைகளில் முதல்வர் ஜெயலலிதாவின் உருவத்தை பச்சைக்குத்தி கொண்டார்கள்.

இது குறித்து அமைச்சர் செல்லூர் ராஜு கூறியதாவது, இன்றைக்கு தமிழகத்தில் உள்ள 10 கோடி மக்களையும் ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களையும் பாதுகாத்து கொண்டிருக்கின்ற 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் ஓயாது உழைத்துக்கொண்டிருக்கின்ற தன்னலத்தை பாராது மக்கள் நலத்தை பேணி காத்து வருகின்ற எங்களது தாய் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளாகும்.
அப்படிப்பட்ட உன்னத தலைவியின் பிறந்தநாளில் எங்களது உடலில் அவரது உருவத்தை பச்சைக்குத்தி கொண்டுள்ளோம். இதனால் முதல்வர் ஜெயலலிதாவை போல நாங்களும் நேர்மையோடு எந்த தவறும் செய்யாமல் வாழ்வதற்கு வழி வகை செய்ய வேண்டுமென்பதற்காகவே ஜெயலலிதாவின் உருவத்தை எங்கள் கைகளில் பச்சைக்குத்திக்கொண்டோம். எங்களது தாய் எங்கள் உடலில் உருவமாக காட்சியளிப்பதால் நாங்கள் தவறான எந்த செயலிலும் ஈடுபட மாட்டோம். முதல்வர் ஜெயலலிதாவை போல தூய நெறிமுறையுடன் செயல்படுவோம் என்றார்.