Published On: Saturday, February 25, 2012
இலங்கைக்கு ஆதரவாகப் பிரார்த்திக்குமாறு மக்களுக்கு வேண்டுகோள்

ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக ஏதாவது பிரேரணை சமர்ப்பிக்கப்படுமாயின் அப்பிரேரணைகள் அனைத்தும் முழுமையான தோல்வி அடைய வேண்டும் என்று இந்நாட்டில் வாழும் சகல மக்களும் பிரார்த்தனை புரியவேண்டும் என்று சுற்றாடல்துறை பதிலமைச்சர் ஏ.ஆர்.எம். அப்துல் காதர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இப்பிரார்த்தனையை நாளை மறுதினம் திங்கட்கிழமை தங்கள் மதவழிபாட்டுத் தலங்களில் கூடி மேற்கொள்ளுமாறும் அவர் கேட்டுள்ளார்.
இத தொடர்பாக பதிலமைச்சர் காதர் மேலும் குறிப்பிடுகையில், ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமை கவுன்ஸில் மாநாட்டில் இலங்கைக்கு எதிராக தீர்மானங்களைக் கொண்டுவரவென பல்வேறு முயற்சிகளும், சதித் திட்டங்களும் இடம்பெறுகின்றன. இது கவலைக்குரிய விடயமாகும்.
இந்த நாட்டில் முப்பது வருடகாலம் இடம்பெற்ற பயங்கரவாதம் காரணமாக மக்கள் அச்சம், பீதியுடனேயே வாழ்நாட்களைக் கழித்தனர். நாட்டில் இரத்த ஆறு ஓடியது. அந்த நிலையிலிருந்த நாட்டை பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து மீட்டெடுத்து அச்சம், பீதியின்றி சந்தோஷமாக வாழக்கூடிய சூழலை எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஏற்படுத்தித் தந்து இருக்கின்றார். அவரது தலைமையில் நாட்டின் பொருளாதாரம் துரித வளர்ச்சிகண்டு வருகின்றது. நாட்டில் அரசியல், பொருளாதார ஸ்திரப்பாட்டை எமது ஜனாதிபதி ஏற்படுத்தி இருக்கின்றார்.
இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத சக்திகள்தான் இலங்கைக்கு எதிரான சதி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. இந்நாட்டில் அமைதி, சமாதானம், ஒற்றுமை நிலவுவதை அவர்கள் விரும்புகிறார்கள் இல்லை போலும். இந்த நடவடிக்கையின் ஊடாக எமது ஜனாதிபதியை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதற்கு இவர்கள் எதிர்பார்க்கின்றார்கள். அது ஒரு போதும் சரிவராது. அதற்கு நாம் இடமளிக்கவும் முடியாது.
ஆகவே ஜெனீவா மனித உரிமை கவுன்ஸில் மாநாட்டில் இலங்கைக்கு எதிராக ஏதாவது பிரேரணைகள், தீர்மானங்கள் கொண்டு வரப்படுமாயின் அவை அனைத்தும் முழுமையாகத் தோல்வி அடைய வேண்டும் என்று இந்த மண்ணில் பிறந்த ஒவ்வொருவரும் பிரார்த்தனை செய்ய வேண்டும். இதனை ஒவ்வொருவரும் தம் பொறுப்பாகக் கருதி செயற்பட வேண்டும்.
இந்நாட்டில் வாழுகின்ற பெளத்தர்கள், இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் இப்பிரார்த்தனையை தங்கள் தங்கள் வழிபாட்டுத்தலங்களில் 27ஆம் திகதி காலையிலோ மாலையிலோ மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.