Published On: Wednesday, February 29, 2012
ஓடும் ரயிலில் பாலியல் வல்லுறவு புரிந்த இராணுவ சிப்பாய் கைது

கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கிச் செல்லும் ரயிலில் பயணம் செய்த இளம் பெண் ஒருவர் பாலியல் வல்லுறவு செய்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு 11.15 மணியளவில் நடைபெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
பத்தரமுல்லை படைத்தளத்தில் கடமையை முடித்துக் கொண்டு ஒரு அதிகாரி அடங்கலாக 32 இராணுவ வீரர்கள் ரயிலில் மட்டக்களப்பிற்கு திரும்பிச் சென்றுள்ளனர். இதில் ஒரு இராணுவ வீரர் ரயில் கட்டுப்பாட்டுப் பெட்டிக்கு அடுத்த பெட்டியில் வைத்து குறித்த பெண்ணை பாலியல் வல்லுறவு செய்துள்ளதாக பொலிஸார் கூறினர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ரயில் பிரதான கட்டுப்பாட்டாளர் சம்பவம் குறித்து விசாரணை நடத்தியுள்ளார். சந்தேக நபர் உப கட்டுப்பாளரை தாக்கிய பின் இந்த குற்றத்தை மேற்கொண்டுள்ளது தெரிய வந்துள்ளது.
உடனடியாக சந்தேக நபர் கைது செய்யப்பட்டு ராகம பொலிஸில் ஒப்படைக்கப்பட்டார். காயமடைந்த ரயில் உப கட்டுப்பாட்டு அதிகாரி ராகம ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு குறித்த சம்பவத்தினால் ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக சென்றதாகவும் அறிவிக்கப்படுகிறது.

