Published On: Wednesday, February 29, 2012
இலங்கைக்கு எதிரான பிரேரணை தேவையில்லை - ஜெனீவாவில் மகிந்த சமரசிங்க

முழுமையான மறுசீரமைப்பினை எட்டும் வகையிலான சிறந்த உள்ள திட்டமொன்றை நடைமுறைப்படுத்த முயல்கின்ற நிலையில், சர்வதேச மனித உரிமைகள் பேரவையில் பிரேரணைகள் கொண்டுவரப்படத் தேவையில்லை என்று இலங்கை அமைச்சரும் மனித உரிமை பேரவையின் மாநாட்டுக்கான இலங்கையின் தலைமைப் பிரதிநிதியுமான மகிந்த சமரசிங்க கூறியுள்ளார்.
மனித உரிமை பேரவையில் உரையாற்றிய அவர், கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டு இரண்டு மாதங்கள் செல்வதற்கு முன்னர் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு கோரும் எந்தவிதமான தீர்மானமும் மனித உரிமைக் பேரவையில் கொண்டுவரப்படுவதற்கான அவசரமும்- நியாயமும் கிடையாது என்று அவர் குறிப்பிட்டார்.
அதுவும் இந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இலங்கை ஏற்கனவே அமல்படுத்தத் தொடங்கிவிட்டது என்றும் அவர் தெரிவித்தார். நல்லிணக்க ஆணைக்குழு பல ஆக்கபூர்வமான பரிந்துரைகளை செய்திருப்பதாக கூறியுள்ள அவர், அதனடிப்படையில் இறந்தவர்கள் பற்றியும் அதில் இராணுவத்துக்கு பங்கிருக்கிறதா என்பது குறித்து ஆராயவும் அதற்கான பதில் நடவடிக்கைகளுக்காகவும் சிவிலியன் மற்றும் இராணுவ நடைமுறறைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இந்த விடயங்களில் எந்தவொரு உள்ளூர் வழிமுறையும், கலாசாரம், பாரம்பரியம் மற்றும் சரித்திரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும் என்றும் அவர் கூறினார். ஆகவே இந்த விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கைக்கு உரிய காலக்கெடு வழங்கப்பட வேண்டும் என்றும் அதில் வெளியார் தலையீடு எதுவும் இருக்கக் கூடாது என்றும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க குறிப்பிட்டார்

