Published On: Tuesday, March 06, 2012
பெட்ரோல் பங்கில் தீ; மூடக்கோரி மக்கள் மறியல்
(இந்தியாவிலிருந்து சாஹுல் ஹமீது)
வியாசர்பாடி பெட்ரோல் பங்கில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பங்க்கை மூடக்கோரி அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டதால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சென்னை வியாசர்பாடி, எம்கேபி நகர் அம்பேத்கர் கல்லூரி அருகே இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் இணைந்த பெட்ரோல் பங்க் உள்ளது. இது திமுக முன்னாள் எம்எல்ஏ செங்கை சிவத்திற்கு சொந்தமானது. இங்கு 10க்கு அதிகமான ஊழியர்கள் வேலை பார்க்கிறார்கள். இந்த பங்க் வளாகத்தில் கனரா பேங்க், ஐசிஐசிஐ பேங்க் ஏடிஎம் சென்டர்கள் உள்ளது. இதனால் எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும். பங்க் அருகே மாநகராட்சி பள்ளி, வங்கி உள்ளது.

இன்று காலை 7.30 மணியளவில் பங்க் ஊழியர்கள் வாகனங்களுக்கு பெட்ரோல் போட்டு கொண்டிருந்தனர். பங்க்கில் 10க்கும் அதிகமானோர் வாகனங்களில் காத்திருந்தனர். மற்றொரு இடத்தில் ஆட்டோவுக்கு கேஸ் நிரப்பும் பணியும் நடந்தது. அப்போது திடீரென்று மீட்டர் ரீடிங் பெட்டி தீ பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனால் பங்கில் இருந்த ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பெட்ரோல் போட வந்தவர்களும் பங்க்கை விட்டு அவசரமாக வெளியேறினர். இது குறித்து தகவல் அறிந்ததும் பெரம்பூர், வியாசர்பாடியில் இருந்து 2 தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்தது. தீயணைப்பு படை வீரர்கள் நீண்டநேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் பங்க்கில் உள்ள மீட்டர் ரீடிங் பெட்டி இருந்த பகுதி முழுவதும் எரிந்து சேதமானது. தீயணைப்பு படைவீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்ததால் பெரும் அசம்பாவித சம்பவம் தவிர்க்கப்பட்டது.
இந்த பெட்ரோல் பங்க்கிற்கு பின்புறம் புதுநகர், சாலைமாநகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதி உள்ளது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் இந்த பகுதியை சேர்ந்த மக்கள் ஏராளமானோர் பெட்ரோல் பங்க்கை முற்றுகையிட்டனர். இந்த பங்க்கில் இது போன்று அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது. பங்க்கிற்கு பின்புறம் எங்கள் வீடுகள் உள்ளன. ஓலை கொட்டகை வீடுகளில் வசிக்கிறோம். இதனால் பங்க்கை மூட வேண்டும் என அப்பகுதியினர் கூறினர். பின்னர் அங்கிருந்து அம்பேத்கர் கல்லூரி சாலைக்கு சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் எம்கேபி நகர் உதவி கமிஷனர் கோவி மனோகரன் தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதில் சமாதானம் அடைந்த மக்கள் 1 மணி நேரத்திற்கு பிறகு கலைந்து சென்றனர்.