Published On: Tuesday, March 06, 2012
5 மாநில தேர்தல்களில் பாரதீய ஜனதா வெற்றி

(இந்தியாவிலிருந்து சாஹுல் ஹமீது)
ஐந்து மாநிலங்களில் நடந்த தேர்தலில் பாரதீய ஜனதா ஆளும் மாநிலங்களை தக்க வைத்ததோடு கோவாவிலும் பா.ஜனதா ஆட்சி மலர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தேர்தல் முடிவுகள் வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக அமைந்துள்ளது. பா.ஜனதாவிற்கு வாக்களித்த மக்களுக்கு தமிழக பா.ஜனதா சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று தமிழக பாரதீய ஜனதா தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் சென்னையில் நிருபர்களிடம் கூறினார்.
கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வடிவத்தில் பிரச்சினைகள் வந்து கொண்டிருக்கிறது. தமிழக அரசு இன்னும் முடிவு செய்யாமல் இருப்பது மேலும் பிரச்சினைகளை பெரிதாக்கும். எனவே உடனே முடிவு எடுக்க வேண்டும். நீண்ட காலமாக இந்த பிரச்சினையில் கருத்து சொல்லாமல் இருந்த தி.மு.க. இப்போது அணுமின் நிலையத்தை திறப்பதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எதிர்ப்பாளர்களை உடனடியாக கைது செய்துவிட்டு அணுமின் நிலையத்தை திறப்பதற்கு நடவடிக்கை எடுங்கள். ஜெர்மன் நாட்டு விஞ்ஞானி நாகர்கோவிலில் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தியதில் என்னென்ன தகவல்கள் கிடைத்தன. வேறு என்னென்ன சதி செயல்களில் ஈடுபட்டார் என்பது பற்றி மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். ஜெர்மன் நாட்டு உளவாளியை கவுரமாக திருப்பி அனுப்பியதுடன் நாட்டிற்கு மிகப்பெரிய துரோகத்தையும், தலைகுனிவையும் மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. டேங்கர் லாரி வேலை நிறுத்தம் தொடர்பாக தமிழக அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணவேண்டும்.
மதுரையில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 28, 29ஆம் தேதிகளில் தாமரை சங்கமம் பா.ஜனதா மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் அகில இந்திய தலைவர் நிதின் கட்காரி, மூத்த தலைவர்கள் அத்வானி, குஜராத் முதல், மந்திரி நரேந்திர மோடி ஆகியோர் பங்கேற்கிறார்கள். கூடங்குளம் பிரச்சினையில் சங்கரன்கோவில் இடைத்தேர்தலுக்கு பிறகு ஏதாவது முடிவுகளை அறிவித்தால் அது மிகப்பெரிய ஏமாற்று வேலையாகும். கூடங்குளம் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக வெளி மாநிலங்களில் இருந்து போராட வருபவர்களை அனுமதிக்ககூடாது. 5 மாநில தேர்தல்களில் காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ள படுதோல்வி அந்த கட்சிக்கு ஒரு நல்ல இந்திய தலைமை வேண்டும் என்பதை சுட்டி காட்டி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.