Published On: Tuesday, March 06, 2012
துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட மாணவர் மீட்பு

(இந்தியாவிலிருந்து சாஹுல் ஹமீது)
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் தாளிக்குடி மஞ்சப்பாறா பகுதியை சேர்ந்தவர் ஷாஜி. இவரது மனைவி ரகிலா. இவர்களுக்கு அப்துல்ஷாஜி என்ற மகனும் அபியா என்ற மகளும் உள்ளனர். ஷாஜி தற்போது சவுதி அரேபியாவில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். இவரது மகன் அப்துல்ஷாஜி திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் விடுதியில் தங்கி 2ஆம் ஆண்டு படித்து வருகிறார்.
கடந்த சனிக்கிழமை விடுமுறையில் திருவனந்தபுரத்தில் உள்ள மாமா வீட்டிற்கு அப்துல் ஷாஜி வந்தார். பின்னர் அவர் விடுமுறை முடிந்ததும் நேற்று காலை மாமா மகன் அல்டாப் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்களை பின் தொடர்ந்து வந்த ஒரு கார் மோட்டார் சைக்கிளை வழிமறித்து நிறுத்தியது.
அப்போது காரில் இருந்து துப்பாக்கியுடன் இறங்கிய 2 வாலிபர்கள் அப்துல்ஷாஜியையும் அல்டாப்பையும் காருக்குள் ஏற்றி கடத்தி சென்றனர். சிறிது தூரம் சென்றதும் அல்டாப்பை அடித்து காரில் இருந்து கீழே தள்ளி விட்டனர். பின்னர் அந்த கும்பல் அப்துல் ஷாஜியை கை, கால்களை கட்டி வாயில் துணியால் கட்டியது. திருவனந்தபுரத்தில் இருந்து அந்த கார் கொடைக்கானல்நோக்கி சென்றது.
போகும் வழியிலேயே காரில் இருந்த கடத்தல் கும்பலை சேர்ந்த ஒரு வாலிபர் இறங்கி விட்டார். இரவு 7 மணி அளவில் கொடைக்கானல் மெயின் ரோட்டில் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் போஸ் வாகன சோதனை செய்து கொண்டிருந்தார். கடத்தல் கும்பல் கார் வாகன சோதனை மையத்தில் நின்று கொண்டிருந்தது.
அந்த சமயத்தில் காரில் கட்டப்பட்டிருந்த நிலையில் இருந்த அப்துல் ஷாஜி லாவகமாக கார் கதவை திறந்து கீழே உருண்டு விழுந்தார். இதை பார்த்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் போஸ் விரைந்து சென்று அப்துல் ஷாஜியின் வாயில் கட்டப்பட்டிருந்த கட்டுகளை அவிழ்த்து விட்டு காரில் இருந்தவர்களை பிடிக்க முயன்றார். ஆனால் அவர்கள் 2 பேரும் தப்ப ஓடினர். போலீசார் விரைந்து சென்று 2 பேரையும் மடக்கி பிடித்தனர்.
அப்போது அப்துல் ஷாஜி போலீசாரிடம் நடந்த சம்பவங்கள் குறித்து கூறினார். பிடிபட்ட 2 பேரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் சடையமங்கலம் முகமது மகன் சந்திர் (23), தாதா (23) என்பதும் ரூ.1 கோடி பணத்துக்காக கல்லூரி மாணவனை கடத்த முயன்றதும் விசாரணையில் தெரிய வந்தது.
போலீசார் 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 2 கைத்துப்பாக்கிகள், கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தினர். கைது செய்யப்பட்ட 2 பேரிடமும் இன்று காலை திண்டுக்கல் தெற்கு போலீஸ் நிலையத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயசந்திரன் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.