Published On: Saturday, March 03, 2012
கடந்த வருடத்தில் 1 இலட்சத்து 50 ஆயிரம் கிலோ கஞ்சா, 30 கிலோ ஹெரோயின் மீட்பு

கடந்த வருடத்தில் மாத்திரம் பொலிஸ் திணைக்களம் 1 இலட்சத்து 50 ஆயிரம் கிலோ எடையுள்ள கஞ்சாவையும், 30 கிலோ எடையுள்ள ஹெரோயின் போதைவஸ்தையும் கைப்பற்றியுள்ளனர். அத்துடன் 2010ஆம் ஆண்டில் மாத்திரம் 29796 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
போதைப்பொருள் கட்டுப்பாட்டுக்காக கடல் வழி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் விமான நிலையத்தின் ஊடாக கொண்டுவர முற்படும் நடவடிக்கைகளும் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை போதைவஸ்து விற்பனையில் ஈடுபடுபவர்களை சமூகத்தில் அந்தஸ்து கொடுக்க வேண்டாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
இதேவேளை போதை வஸ்து குற்றங்கள் தொடர்பில் 58 வெளிநாட்டு பிரஜைகள் இலங்கையிலும் இலங்கையைச் சேர்ந்த 69 பேர் வெளிநாடுகளிலும் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையினால் வெளியிடப்பட்டுள்ள 2011ஆம் ஆண்டின் தகவல் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.