Published On: Friday, March 09, 2012
ஜனாதிபதியுடன் அமெரிக்கத் தூதுவர் இரகசிய சந்திப்பு

இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் பட்ரீசியா புட்டீனிஸ் நேற்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் இலங்கைக்கெதிரான தீர்மானம் ஒன்றை அமெரிக்கா, முன்வைத்துள்ள நிலையிலேயே இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பில் அமெரிக்கத் தூதுவருடன் வேறு அதிகாரிகள் எவரும் பங்கு கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இச்சந்திப்பின்போது, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன், வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், வெளி விவகார செயலாளர் கருணாதிலக அமுனுகம, வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளர் சேனுகா செனவிரத்ன மற்றும் மத்திய மாகாண முதல்வர் சரத் எக்கநாயக்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இலங்கைக்கெதிரான அமெரிக்காவின் தீர்மானம் தொடர்பாகவே இச்சந்திப்பில் பேசப்பட்டதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த சந்திப்பு நடந்த இடம் கூட இரகசியமாகவே வைக்கப்பட்டது. தகவல்கள் வெளியே கசியாமல் தவிர்க்கும் பொருட்டு, கண்டியில் உள்ள அதிபர் மாளிகையில் இந்த பேச்சுகள் நடந்ததாக தெரிகிறது.
கடைசி நேரத்தில் எப்படியும் காப்பாற்றப்பட்டுவிடுவோம் என்ற நம்பிக்கையில் அரசாங்கம் முயற்சிகளை தீவிரமாக மேற்கொண்டுவருகிறது. இதற்காக இலங்கையின் பல பாகங்களில் சமய வழிபாடுகளும் இடம்பெறுகின்றன.