Published On: Tuesday, March 06, 2012
இரு வாரங்களுக்குள் மீ்ண்டும் எரிபொருள் விலை அதிகரிப்பு?

இரு வாரங்களுக்குள் மீ்ண்டுமொரு தடவை எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படும் அபாயம் தென்படுவதாக மக்களை எச்சரித்திருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி அத்தோடு இணைந்ததாக அத்தியாவசியப் பொருட்கள் பெரும்பாலானவையும் விலை அதிகரிக்குமெனவும் சுட்டிக்காட்டியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஐக்கிய தேசியக் கட்சி ஊடகப் பேச்சாளரும் காலி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான கயந்த கருணாதிலக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சமையல் எரிவாயுவின் விலையை 300 ரூபாவால் அதிகரிக்க இடமளிக்குமாறு அந்நிறுவனம் அரசிடம் கோரியுள்ளது. பால்மாவின் விலையையும் அதிகரிக்க அனுமதிக்குமாறு கேட்டுள்ள இறக்குமதியாளர்கள் தவறினால் இறக்குமதியை நிறுத்தப்போவதாகவும் எச்சரித்துள்ளது.
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு 6500 கோடி ரூபா கடன் செலுத்த வேண்டிய மின்சாரசபை அதனைத் திரும்பிச் செலுத்தாமல் எரிபொருள் விலை அதிகரித்ததும் 40 சதவீதம் மின்கட்டண அதிகரிப்பைச் செய்தது. 40 சதவீத கட்டண அதிகரிப்பைச் செய்த பின்னரும் கூட மின்சாரசபை நட்டத்திலியங்குவதாக கூறப்படுவதன் மூலம் மீண்டும் மின் கட்டண அதிரிப்புக்கு சிவப்புச் சமிக்ஞை காட்டப்படுவதையே உணர்த்துகின்றது.