Published On: Monday, March 05, 2012
தனியார் மருத்துவமனை தாதிகள் போராட்டம்
(இந்தியாவிலிருந்து சாஹுல் ஹமீது)
சென்னை அப்பலோ ஆஸ்பத்திரியில் பணியாற்றும் நர்சிங் படித்த மாணவிகள் சுமார் 800 பேர் சம்பள உயர்வு கேட்டு 3 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். 7 ஆயிரம் ரூபாய் சம்பளத்தை ரூ.15 ஆயிரமாக உயர்த்தக்கோரி ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் இவர்கள் முறையிட்டனர். ஆனால் சம்பளத்தை அதிகரித்துதர இயலாது என்று ஆஸ்பத்திரி நிர்வாகம் அறிவித்து விட்டது. இதனால் நேற்று முன்தினம் முதல் தாதிகள் வேலைக்கு செல்லாமல் போராட்டம் நடத்துகின்றனர். முதல்நாள் முற்றுகை போராட்டம் நடத்தினர். போலீசார் இவர்களை கைது செய்ய முயன்றபோது மறியலில் ஈடுபட்டதால் அவர்களை கலைந்து செல்லுமாறு கூறினர். அதன்படி தாதிகள் கலைந்து சென்றனர்.

நேற்று தாதிகள் வேலைக்கு செல்லாமல் விடுதியில் தங்கியிருந்தனர். அவர்களை அங்கிருந்து வெளியேற்ற ஆஸ்பத்திரி நிர்வாகம் முயற்சி செய்தது. குடிநீர் இணைப்பையும் துண்டிக்க முயன்றனர். ஆனால் மாதர் சங்கத்தினர், சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தாதிகளை விடுதியில் தங்க அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் இன்று 3ஆவது நாளாக தாதிகள் வேலைக்கு செல்லாமல் ஆஸ்பத்திரி அருகே உள்ள கார் பார்க்கிங் பகுதியில் திரண்டு தர்ணா நடத்தினர்.
அப்போது நர்சுகள் கூறும்போது, ரூ.5 இலட்சம் செலவு செய்து நர்சிங் படிப்பு முடித்து வேலைக்கு வந்துள்ளோம். எங்களுக்கு 6,500 முதல் 7 ஆயிரம் வரைதான் சம்பளம் தருகிறார்கள். ஆண்டுக்கு 100 ரூபாய், 150 ரூபாய்தான் சம்பள உயர்வு என்றால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். அதனால்தான் போராடுகிறோம் என்றனர். அப்பலோ ஆஸ்பத்திரியை தொடர்ந்து மியாட் ஆஸ்பத்திரி, குளோபல் ஆஸ்பத்திரி, எம்.எம்.எம். ஆஸ்பத்திரி உள்பட சென்னையில் உள்ள பிரபல தனியார் ஆஸ்பத்திரியில் பணியாற்றும் தாதிகளும் வேலைக்கு செல்லாமல் தொடர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இதனால் தனியார் ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு சேவை செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. சீனியர் தாதிகள் ஒரு சிலர் மட்டும் வேலைக்கு சென்றுள்ளனர். தாதிகள் ஒன்றுசேர்ந்து போராட்டத்தில் குதித்துள்ளதால் தனியார் ஆஸ்பத்திரி நிர்வாகத்தினரும் ஒன்று சேர்ந்து போராட்டத்தை சந்திக்க தயார் என்று அறிவித்துள்ளனர். இதனால் போராட்டம் மேலும் தீவிரம் அடைந்துள்ளது.

