Published On: Monday, March 05, 2012
கச்சத்தீவில் நடந்த இலங்கை - இந்திய மீனவர்கள் பேச்சுவார்த்தை தோல்வி

(சாஹுல் ஹமீது)
கச்சத்தீவில் நடந்த இந்திய - இலங்கை மீனவர்களின் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. கச்சத்தீவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இந்தியா மற்றும் இலங்கையை சேர்ந்த மீனவர்களின் கூட்டம் நடந்தது. ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த மீனவ பிரதிநிதிகள் சேசு, ஞானசீலன், சிப்பிசேசு, ஞானசீலன், இலங்கையை சேர்ந்த அருள்தாஸ், தவரத்தினம், ராஜசந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர். ராமேஸ்வரம், தலைமன்னார் கடல் பகுதியில் இருநாட்டு மீனவர்களும் தொடர்ந்து இணக்கமாக மீன்பிடித் தொழில் செய்வது குறித்து கூட்டத்தில் பேசப்பட்டது.
ராமேஸ்வரம் மீனவர்கள் கடலில் தடை செய்யப்பட்ட வலைகளால் மீன்பிடிப்பதால் இலங்கை கடல் பகுதியில் மீன்வளம் அழிவதோடு, மீன்பிடி வலைகளும் சேதமடைவதாக இலங்கை மீனவர்கள் குற்றம் சுமத்தினர். தொடர்ந்து இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கூட்டம் முடிவுக்கு வந்ததால் மீனவர்களின் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
பின்னர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியதாவது; மீனவர்கள் பிரச்சனையில் இருநாட்டு அரசுகளும் முடிவு செய்து தீர்வு காண வேண்டும். இந்திய அரசு ஒதுக்கீடு செய்த வீடுகள் இந்திய அரசின் நேரடிக் கண்காணிப்பில் தமிழர்களுக்கு முறையாக வழங்கப்படுகிறது. ஒரு சில காரணங்களில் ஏற்படும் காலதாமதத்தை தவிர வீடுகள் ஒதுக்குவதில் பிரச்சினை எதுவும் இல்லை. சென்னை சூளைமேட்டில் நடந்த சம்பவத்திற்கும் எனக்கும் சம்பந்தமில்லை. புகழேந்தி என்பவர் அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கு தொடுத்து உள்ளார். தேடப்படும் குற்றவாளி என்பதை கோர்ட் ரத்து செய்து விட்டது. ஆனால், என்னை குற்றவாளியாக தொடர்ந்து சித்தரித்து வருகின்றனர் என்றார்.