Published On: Sunday, March 04, 2012
தாய்ப்பால் கொடுக்க வெட்கப்படாதீங்க - பெயான்ஸ்

உலக புகழ் பெற்ற பாப் பாடகி பெயான்ஸ் நோலஸ் (30). பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக பாடி வருகிறார். 16 கிராமி விருதுகள் பெற்றவர். 2012ம் ஆண்டின் சூப்பர்ஹிட் பாடகர்கள் வரிசையில் 3வது இடம் பிடித்திருப்பவர். சக பாடகர் ஜேஇசட் இவரது கணவர். நியூயார்க்கில் உள்ள லெனாக்ஸ் ஹில் ஆஸ்பத்திரியில் பெயான்சுக்கு கடந்த ஜனவரி 7ம் தேதி பெண் குழந்தை பிறந்தது.
‘ப்ளூ ஐவி’ என்று அதற்கு பெயரிட்டனர். குழந்தையை பாராட்டும் விதமாக ‘குளோரி’ என்ற பாடலை ஜேஇசட் வெளியிட்டார். தனக்கும் பெயான்சுக்கும் திருமணம் நடந்த விதம், அதன் பிறகு எதிர்கொண்ட தடைகள், சிரமங்கள், தடங்கல்கள், பெயான்ஸ் கருவுற்றது, நடுவே கருகலைந்த சோகம் உள்பட பல விஷயங்களை அந்த பாடலில் ஜேஇசட் குறிப்பிட்டிருந்தார்.
பெயான்ஸ் மற்றும் ஜேஇசட் ரசிகர்கள் மத்தியில் இப்பாடல் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தனது 2 மாத குழந்தை ப்ளூ ஐவிக்கு தாய்ப்பால் கொடுப்பதற்காக அவளை மடியில் வைத்திருப்பது போன்ற படத்தை பெயான்ஸ் பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.
‘தாய்ப்பால் கொடுப்பதால் அழகு குறைகிறது என்ற தவறான கருத்து பெண்கள் மத்தியில் நிலவுகிறது. உண்மையிலேயே, தாய்ப்பால் கொடுப்பதால் அழகு அதிகரிக்கவே செய்கிறது. மேலும், தாய்மை என்ற பெருமிதத்தையும் குழந்தை மீதான பாசத்தையும் இது அதிகரிக்கிறது. வெளியிடங்களில்கூட தாய்ப்பால் கொடுக்க யோசிக்காதீர்கள். தாய்ப்பால் கொடுப்பது வெட்கப்பட வேண்டிய விஷயம் அல்ல. பெருமைக்குரிய விஷயம்’ என்று அட்வைசும் கூறியிருக்கிறார் பெயான்ஸ்.

