ஆசிய கிண்ணம்; இன்று பாகிஸ்தான்-பங்களாதேஷ் மோதல்

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேசம் என நான்கு நாடுகள் பங்கேற்கும், 11வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று மிர்புரில் துவங்குகிறது. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன், தலா ஒரு லீக் போட்டியில் மோதுகிறது. முடிவில், புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்கள் பெறும் அணிகள், வரும் 22ம் தேதி நடக்கும் பைனலில் பங்கேற்கும்.
சாதிக்குமா இந்தியா:
ஆசிய கோப்பை தொடரை பொறுத்தவரையில் கடந்த 1994-95 வரை, இந்திய அணி நான்கு முறை கோப்பை வென்றது. இதன் பின், 15 ஆண்டுகள் கழித்து கடந்த 2010ல் தான் சாம்பியன் பட்டம் வென்றது. சமீபத்திய முத்தரப்பு தொடர் தோல்வியை மறந்து, இம்முறை கோப்பை வெல்லும் நோக்கத்துடன் தோனி தலைமையிலான அணி களமிறங்கியுள்ளது.
துவக்க வீரர் சேவக் ஓய்வில் உள்ளதால், காம்பிருடன் சச்சின் களமிறங்கலாம். 100வது சதம் அடிக்கும் சச்சினின் முயற்சி கைகூடும் என்று நம்புவோம். துணைக் கேப்டன் விராத் கோஹ்லி எதிர்பார்ப்பை நிறைவு செய்ய வேண்டும்.
பவுலிங்கை பொறுத்தவரை பிரவீண் குமார், வினய் குமார், டின்டா வேகப்பந்திலும், சுழலில் அஷ்வினும் நம்பிக்கையுடன் உள்ளனர். "ஆல் ரவுண்டர்' சகோதரர்கள் இர்பான், யூசுப் பதான் இருப்பது கூடுதல் பலம் தான்.
வலிமையான இலங்கை:
கடந்த ஒரு வாரத்தில் மட்டும், நான்கு போட்டிகளில் பங்கேற்று, நல்ல பயிற்சியுடன் வந்துள்ளது இலங்கை. அணியின் கேப்டன் ஜெயவர்தனா, முன்னணி வீரர்கள் சங்ககரா, தில்ஷன், சண்டிமால், திரிமான்னே மற்றும் தரங்கா நல்ல பார்மில் உள்ளனர்.
பவுலிங்கில் மலிங்கா, குலசேகரா மீண்டும் எழுச்சி காணலாம். இருப்பினும், முத்தரப்பு தொடரில் ஆஸ்திரேலியாவிடம் கோப்பை பறிகொடுத்த சோகம், இத்தொடரில் பிரதிபலிக்குமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
பாக்., எப்படி:
சமீபத்திய இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை முழுமையாக இழந்த இந்த அணி, புதிய பயிற்சியாளர் வாட்மோர் தலைமையில் வந்துள்ளது. கேப்டன் மிஸ்பா உல் ஹக், ஆசாத் அலி, அசார் அலி, உமர் அக்மல், முகமது ஹபீஸ் ஆகியோருடன், அனுபவ யூனிஸ் கான் பேட்டிங்கில் கைகொடுக்கலாம்.
பவுலிங்கில் உமர் குல், வகாப் ரியாசுடன், சுழல் மும்மூர்த்திகள் அப்ரிதி, சயீத் அஜ்மல், அப்துர் ரெஹ்மான் எதிரணிக்கு தொல்லை தரலாம்.
குழப்ப அணி:
தொடரை நடத்தும் நாடு என்ற முறையில், வங்கதேசம் எழுச்சி பெறலாம். தமிம் இக்பாலை அணியில் சேர்க்க ஏற்பட்ட குழப்பம், வெற்றியை பாதிக்கும் என்று தெரிகிறது. இருப்பினும், கேப்டன் முஷ்பிகுர், சாகிப் அல் ஹசன், இம்ருல் கைய்ஸ் அணியை மீட்க காத்திருக்கின்றனர். பவுலிங்கில் ஒரு ஆண்டுக்குப் பின் வந்துள்ள மொர்டசா, ஷபியுல் இஸ்லாம், அப்துர் ரஜாக் அணியின் வெற்றிக்கு கைகொடுப்பர் என நம்பலாம்.
முதல் மோதல்:
இன்று நடக்கும் முதல் லீக் போட்டியில் வங்கதேசம், பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. 12 ஆண்டுகளுக்கு முன் கோப்பை வென்ற பாகிஸ்தான் அணி, மீண்டும் சாதிக்கும் உத்வேகத்துடன் வந்துள்ளது. அதேநேரம் சொந்த மண்ணில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் வங்கதேசம் உள்ளது.
இந்தியா ஆதிக்கம்:
கடந்த 1983-84 முதல் இதுவரை 10 ஆசிய கோப்பை தொடர் நடந்துள்ளது. இதில் அதிகபட்சமாக இந்திய அணி 5 முறை (1983-84, 1988-89, 1990-91, 1994-95 மற்றும் 2010) கோப்பை வென்றது. இரண்டாவதாக இலங்கை அணி நான்கு முறை (1985-86, 1997, 2004, 2008) சாம்பியன் பட்டம் வென்றது. 2000ல் நடந்த தொடரில் மட்டும் பாகிஸ்தான் சாதித்தது.
* இந்திய அணி ஹாங்காங்கிற்கு எதிரான போட்டியில், 256 ரன்கள் (2008) வித்தியாசத்தில் வென்றதே, இத்தொடரில் பெற்ற பெரிய வெற்றி.
* இந்திய அணி இத்தொடரில் இதுவரை பங்கேற்ற 36 போட்டிகளில், 22 ல் வெற்றி பெற்றுள்ளது. இலங்கை அணி பங்கேற்ற 40 போட்டியில் 29 முறை வென்றது.
* பாகிஸ்தான் அணி 31ல் 12 வெற்றியும், வங்கதேசம் விளையாடிய 29 போட்டியில், 2ல் மட்டும் தான் வென்றது.
அதிகபட்ச ஸ்கோர்:
2010ல் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில், பாகிஸ்தான் அணி எடுத்த 385/7 ரன்களே ஆசிய கோப்பை தொடரில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள்.
* இந்திய அணியை பொறுத்தவரையில், அதிகபட்சமாக 374/4 ரன்கள் (எதிர்-ஹாங்காங், 2008) எடுத்தது.
* இலங்கை தனது அதிகபட்ச ஸ்கோரை (357/9), வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் (2008) பெற்றது.
வங்கதேசம் மோசம்:
ஆசிய கோப்பை தொடரில் வங்கதேச அணி குறைந்த அளவாக, 87 ரன்னுக்கு (பாகிஸ்தான், 2000) சுருண்டது. இத்தொடரில் எடுக்கப்பட்ட குறைந்தபட்ச ஸ்கோர் இது தான்.
பவுலிங்கில் சச்சின் முதலிடம்:
பவுலிங்கை பொறுத்தவரையில் இலங்கை அணி தான் ஆதிக்கம் செலுத்தியுள்ளது. இத்தொடரில் இதுவரை அதிக விக்கெட் வீழ்த்தி "டாப்-3' வீரர்களாக இலங்கையின் முரளிதரன் (30 விக்.,), வாஸ் (23), ஜெயசூர்யா (22) உள்ளனர். நான்காவது இடத்தையும் இலங்கையின் மெண்டிஸ் (5 போட்டி, 17 விக்.,) தான் பிடித்துள்ளார்.
* எல்லோரும் வியக்கும் வகையில், இந்தியாவின் சச்சின், 20 போட்டியில் 17 விக்கெட் வீழ்த்தி முதலிடத்தை பெற்றுள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் இர்பான் பதான் (17) வருகிறார்.
ஜெயசூர்யா அபாரம்:
ஆசியகோப்பை தொடரில் இலங்கையின் ஜெயசூர்யா, அதிக ரன்கள் (25 போட்டி, 1220 ரன்கள்) குவித்த வீரர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார். அடுத்த மூன்று இடங்களில் இந்தியாவின் சச்சின் (799), இலங்கையின் ரணதுங்கா (741), சங்ககரா (685) ஆகியோர் உள்ளனர்.
தாகா சென்றது இந்திய அணி:
ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி, தனது முதல் போட்டியில் இலங்கையை வரும் 13ம் தேதி சந்திக்கிறது. கிரிக்கெட் உலகமே எதிர்பார்க்கும், "பரம எதிரிகள்' இந்தியா-பாகிஸ்தான் அணிகள் வரும் 18ம் தேதி மோதுகின்றன. இதில் பங்கேற்கும் தோனி தலைமையிலான இந்திய அணி, நேற்று காலை புறப்பட்டு தாகா சென்றனர்.
அட்டவணை
அணிகள திகதி
வங்கதேசம்-பாக்., இன்று
இந்தியா-இலங்கை மார்ச் 13
இலங்கை-பாக்., மார்ச் 15
இந்தியா-வங்கதேசம் மார்ச் 16
இந்தியா-பாக்., மார்ச் 18
இலங்கை-வங்கதேசம் மார்ச் 20
பைனல் மார்ச் 22
* போட்டிகள் அனைத்தும் மிர்புரில், பகலிரவு போட்டியாக மதியம் 2 மணிக்கு துவங்கும்.