Published On: Sunday, March 04, 2012
ஜெனீவா சென்ற அரச பிரதிநிதிகள் ஜனாதிபதியைச் சந்தித்து விளக்கம்
ஜெனீவாவிலிருந்து நேற்று காலை நாடு திரும்பிய இலங்கைத் தூதுக்குழு நேற்று நண்பகலளவில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை தியத்தலாவையில் சந்தித்து நிலைமைகளை விளக்கியது. ஆளுங்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தியத்தலாவையில் இடம்பெற்ற பயிற்சிப் பட்டறையில் பிரதம விருந்தினராகப் பங்கேற்றிருந்த ஜனாதிபதியை அங்கு சென்று சந்தித்த அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, ரிசாத் பதியுதீன், அநுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோர் மனித உரிமைப் பேரவை உறுப்பு நாடுகளுடன் தமது பேச்சுக்கள் குறித்து விரிவாக விளக்கினர்.
புலம்பெயர் தமிழர்களின் செயற்பாடுகள் அமெரிக்க, பிரிட்டன் மற்றும் அவர்களின் சகபாடிகள் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளும் முயற்சிகள், மனித உரிமை ஆர்வலர்கள் என்ற பெயரில் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பிரசாரங்கள் குறித்து தெளிவுபடுத்திய அவர்கள் இலங்கையின் நேசநாடுகள் இந்தப் பிரேரணையை தோற்கடிக்க தமக்கு கைகொடுத்து உதவுவதாகவும் குறிப்பிட்டனர்.
ஜெனீவாவில் தாம் தங்கியிருந்த காலங்களில் மேற்கொண்ட பிரசாரங்கள், உலகத் தலைவர்களுடனும் முக்கியஸ்தர் களுடனான சந்திப்புகள் குறித்து அவர்கள் விபரித்தனர். ஜெனீவா சென்றிருந்த அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், டக்ளஸ் தேவானந்தா, ரிஷாட் பதியுதீன், பிரதிய அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் உட்பட தூதுக் குழுவின் தலைவர் அமைச்சர் மகிந்த சமரசிங்க மற்றும் உயர் அதிகாரிகள் நேற்று நாடு திரும்பியமை குறிப்பிடத்தக்கது. இவர்கள் தமது பயணம் குறித்தும் மேற்கோண்ட சந்திப்புகள் குறித்தும் திருப்தி வெளியிட்டனர்.