Published On: Tuesday, September 27, 2011
கொன்று, கொள்ளைடித்த டில்லி பொலிஸ்

டில்லி ராணிபக் பகுதியைச் சேர்ந்தவர் அமர்ஜீத் சிங்சத்தா (60) தொழில் அதிபர். காரி பயோலி என்ற இடத்தில் உலர் பழங்கள் மொத்த வியாபாரம் நிறுவனம் நடத்தி வந்தார். இவர் தனது ஊழியர் மொஹித் என்பவருடன் காரில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டு இருந்தார். அப்போது மோட்டர் சைக்கிளில் ரோந்து சுற்றி வந்த பொலிஸ் அஜய் குமார் தோமார், அந்த காரை பின்தொடர்ந்து சென்றார்.
ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அந்த காரை முந்திச்சென்று குறுக்காக மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். அப்போது இரவு 8.45 மணி. மோஹிந்தை காரைவிட்டு இறங்குமாறு எச்சரித்த ஏட்டு அஜய்குமார், பின்னர் சத்தாவிடம் கழுத்தில் அணிந்துள்ள செயினையும், கைப்பையில் வைத்திருக்கும் பணத்தையும் தன்னிடம் தருமாறு பொலிஸ் கேட்டார்.
சத்தா கொடுக்க மறுக்கவே, அவற்றை வலுக்கட்டாயமாக கைப்பற்ற பொலிஸ் முயற்சி செய்தார். அது பலிக்காததால், தன்னிடம் இருந்த துப்பாக்கியால் சத்தாவை சுட்டார். மூன்று குண்டுகள் அவரது உடலில் பாய்ந்தது. காருக்குள்ளேயே துடி துடித்து செத்தார். இதுபற்றி அவருடன் மோஹித் சத்தாவின் உறவினர் குர்தீப்சிங் லம்பாவுக்கு தகவல் தெரிவித்தார்.
அவர் பொலிஸில் சென்று முறைப்பாடு செய்தார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொலிஸ் அதிகாரிகள் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்ற அஜய்குமார் தோமாரை விரட்டிப்பிடித்து கைதுசெய்தனர். அவரிடம் இருந்து துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். அவரிடம் இருந்த வெடிக்காத தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டன.
பொலிஸ் வைத்திருந்தது போலியான துப்பாக்கி என்று விசாரணையில் தெரியவந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது. சட்டம்-ஒழுங்கை பராமரிக்க வேண்டிய பொலிஸ் ஒருவரே, தொழில் அதிபரை கொன்று கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.