Published On: Wednesday, September 14, 2011
தினக்குரல் ஆசிரியர்கள் வெளியேற்றம்

இலங்கையின் முன்னணி செய்தித்தாள்களில் ஒன்றான தினக்குரல் பத்திரிகையின் ஆசிரியர்பீட பணியாளர்கள் புதன்கிழமை வெளியேற்றப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. புதிய நிர்வாகத்தினர் (ஏசியன் மீடியா பப்ளிகேசன் நிறுவனம்) குறித்த பணியாளர்களை இன்று புதன்கிழமை காலை வெளியேற்றியதாகக் குறிப்பிடப்படுகிறது. இதனால் தினக்குரலை இவ்வளவு காலமும் வழிநடாத்திச் சென்ற ஆசிரியர்பீட பணியாளர்கள் வீதியில் நின்றதாகத் தெரியவருகின்றது.
இந்நிலையில் நிர்வாகம் மாறுகின்றதே தவிர ஆசிரியர் பீடத்தில் மாற்றமில்லை என ஆசிரியர் பீடத்தினர் முதலில் தெரிவித்திருந்தனர். ஆசிரியபீட பணியாளர்களை இராஜினாமா செய்வதற்கு புதிய நிர்வாகம் செவ்வாய்க்கிழமை வரை காலக்கெடு விதித்திருந்தது. குறித்த காலக்கெடுவிற்குள் தினக்குரல் பப்ளிகேசன் பிரைவேற் லிமிட்டெட்டிலிருந்து பதவி விலகாத காரணத்தினால் குறித்த ஆசிரியர்பீட பணியாளர் 25 பேரையும் இன்று புதிய நிர்வாகம் நிறுவனத்திற்குள் பிரவேசிக்க அனுமதிக்கவில்லை.
இதனால் கொதிப்படைந்துள்ள உத்தியோகத்தர்கள் தொழில் திணைக்களத்தில் முறைப்பாடு செய்ய உத்தேசித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். தற்போது தினக்குரல் தினசரி மற்றும் ஞாயிறு வார இதழ் ஆகியவற்றில் பணியாற்றுபவர்களை இவ்வாறான நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர். தற்போது தினக்குரல் பத்திரிகை வீரகேசரியின் ஆசிரியர்களால் வழிநாடாத்தப்பட்டு அங்கேயே அச்சிடப்பட்டு விநியோகம் செய்யப்படுகின்றது. வீரகேசரிக்குப் போட்டியாக இருந்த பத்திரிகையை அந்நிறுவனமே பொறுப்பேற்று அதன் ஆசிரியர்களை இவ்வாறு நடுத்தெருவில் விட்டுவிட்டுச் செல்வது வாசகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
இவ்வாறான செய்திகளை இணையத்தளங்களில் பிரசுரித்தால் தினக்குரல் நிர்வாகம் "தினக்குரலின் வளர்ச்சிப் போக்கை சகிக்கமுடியாத பிரகிருதிகள்தான் இவ்வாறான விசமத்தனமான பிரசாரங்களில் ஈடுபடுகின்றனர். இதனை வாசகர்கள் நம்பவேண்டாம்" என்றுதான் அறிக்கை விடுகிறார்களே தவிர அதன் வெளிப்படைத்தன்மை பற்றி விளக்கமளிப்பதாகத் தெரியவில்லை.
ஆசிரியர்களின் வெளியேற்றம் சம்பந்தமாக துருவம் இணையத்தளத்துக்காக தினக்குரல் உதவி ஆசிரியர் ஒருவரைத் தொடர்புகொண்டு கேட்டபோது, தற்போது பிரதம ஆசிரியருடன் தற்போது இரு ஆசிரியர்கள் மட்டுமே நிறுவனத்துக்குள் இருப்பதாகவும், ஏனையவர்கள் வீதியில் நிற்பதாகவும் தெரிவித்தார் ஏமாற்றப்பட்ட தொனியில்....