Published On: Tuesday, October 11, 2011
கல்முனை மேயர் பதவியில் முறுகல்நிலை

நடந்துமுடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் கல்முனை மாநகரில் அமோக வெற்றியீட்டியது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்.
அடுத்து கல்முனை மாநகர சபை மேயர் யார் என்பது பற்றி இன்று தீர்மானிக்கப்படும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்திருந்தது. அதற்கினங்க நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் 2ஆவதாக விருப்பு வாக்குகளைப் பெற்ற நிஸாம் காரியப்பரை தெரிவுசெய்ய கட்சி எத்தனித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் சர்ச்சையி்ல் முடிந்த கட்சிக் கூட்டத்தில் யார் கல்முனை மேயர் என்று அறிவிக்கப்படவில்லை. இதையடுத்து நாளை (12.10.2011) மீண்டும் கட்சியின் உயர்பீடம் கூடி யார் மேயர் என்று அறிவிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கல்முனை, சாய்ந்தமருது, மாளிகைக்காடு ஆகிய பிரதேசங்களில் நேற்றிரவு வீதிகளில் மக்கள் போக்குவரத்துத் தடைகளை ஏற்படுத்தியுள்ளதுடன் வீதியில் டயர்களைப் போட்டும் எரித்துள்ளனர். அத்துடன் பஸ்களின் கண்ணாடிகளுக்கும் கல்லெறிந்துள்ளனர். இதனால் கல்முனை மாநகரம் அமளிதுமளிக்குள்ளாக்கப்பட்டுள்ளது.
கடந்த கல்முனை மாநகர சபைக்கான தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி 11 ஆசனங்களைக் கைப்பற்றி ஆட்சியையைக் கைப்பற்றியிருந்தது. இந்நிலையில் அதிகூடிய வாக்குகளைப் பெற்ற முஹம்மட் ஸிராஸ் என்பவரை மேயராக பரிந்துரை செய்யவேண்டும். ஸிராஸுக்கே அதிகளவான ஆதரவு கல்முனையில் இருக்கின்றது. சிராஸ் 16,457 வாக்குகளையும், நிஸாம் காரியப்பர் 13,948 வாக்குளையும் பெற்றிருந்தனர். ஆனால், சில உட்பூசல்கள் காரணமாக அதற்கு அடுத்த நிலையிலுள்ள நிஸாம் காரியப்பரை மேயராக நியமிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் பெரிய குழப்ப நிலையொன்று ஏற்பட்டுள்ளது.
கல்முனையில் ஸிராஸுக்கு மேயர் பதவி வழங்கப்படாவிட்டால், இன்று கல்முனையில் பாரிய ஆர்ப்பாட்டம் நடைபெறுமென எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பள்ளிவாசல்களில் இன்று மக்களை அமைதியாக இருக்குமாறு அறிவித்தல் கொடுக்கப்பட்டுள்ளது. நாளை யார் கல்முனையின் மேயர் என்று தெரியவரும்.







