Published On: Thursday, October 06, 2011
மீண்டும் வெள்ளைக்கொடி வழக்கு

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு எதிரான வெள்ளைக்கொடி விவகார வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழு முன்னிலையில் வியாழக்கிழமை மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மேல் நீதிமன்ற நீதிபதிகளை தீபாலி விஜேசுந்தர, டபிள்யூ.எம்.பி.வாராவௌ, ஏ.இஸெட்.ரஸீன் ஆகியோர் முன்னிலையில் வெள்ளைக்கொடி விவகார வழக்கு விசாரணை இடம்பெற்றது. இதன்போது முறைப்பாட்டாளர் தரப்பு சாட்சியங்களை பிரதி சொலிஸ்டர் நாயகம் புவனகே அலுவிஹாரே, பிரதிவாதி தரப்பு சாட்சியாளர்கள் பக்கச்சார்புடன் சாட்சியம் அளித்துள்ளதால் அவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் குறிப்பிட்டார்.
பிரதிவாதி தரப்பில் சாட்சியமளித்த 2 பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இலங்கை பத்திரிகை முறைப்பாடு ஆணைக்குழுவின் சுகுமார் ரொக்வூட் ஆகியோர் பக்கச்சார்பான, சுயமின்றிய சாட்சியாளர்களாகும் என பிரதி சொலிஸ்டர் நாயகம் புவனகே அலுவிகார தெரிவித்துள்ளார். 2 பாராளுமன்ற உறுப்பினர்களும் சரத் பொன்சேகா வேட்பாளராக இருந்தபோது ஆதரவு வழங்கியவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சுகுமார் ரொக்வூட் என்பவரின் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக விருது வழங்கும் நிகழ்வின்போது இந்த வழக்கின் பிரதான சாட்சியாளரான சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் பிரெட்ரிகா ஜோன்ஸ் குறித்தும் கடும் விமர்சனம் தெரிவிக்கப்பட்டதால் இந்த சாட்சியாளர்கள் அவர்மீது கருத்து முரண்பாடு கொண்டிருந்ததாக பிரதி சொலிஸ்டர் நாயகம் தெரிவித்தார்.
எனினும் சரத் பொன்சேகா, சண்டே லீடர் பத்திரிகைக்கு தெரிவித்ததாக கூறப்படும் கருத்து சர்வதேச ரீதியில் சர்ச்சையை ஏற்படுத்தியமை பிரதிவாதிகள் தரப்பினரால் அழைக்கப்பட்ட சாட்சியாளரான ரஜீவ விஜேசிங்கவின் சாட்சியம் மூலம் உறுதியாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சரத் பொன்சேகாவினால் தெரிவிக்கப்படாத கருத்தொன்றை பொறுப்பற்ற வகையில் பிரசுரிப்பதன் மூலம் வாசகர்களிடம் இருந்து தூரவிலகும் அளவிற்கு சண்டே லீடர் பத்திரிகை நடந்துகொள்ளாது என்றும் பிரதி சொலிஸ்டர் தெரிவித்தார். வழக்கு விசாரணை மீண்டும் தொடரும்.