Published On: Thursday, November 24, 2011
கடாபியின் மகன் சிக்கியது எப்படி?
லிபியாவின் தென்மேற்கு பாலைவனப் பகுதியில் உள்ள மறைவிடம் ஒன்றில் கடாபியின் மகன் ஸையிப் அல் இஸ்லாம் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் மேலதிக விபரங்கள் ஏதும் உடனடியாக தெரிவிக்கப் பட்டிருக்கவில்லை. கடாபியின் மகன் சிக்கிக் கொண்டது எப்படி என்ற தகவல் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே தெரியவருகிறது
கைது செய்யப்பட்டவரை பார்வையிட யாரும் அனுமதிக்கப்படவில்லை. எப்படிச் சிக்கிக் கொண்டார் என்ற தகவலையும் லிபிய இடைக்கால அரசு வெளியிடவில்லை.
தற்போது கசிந்துள்ள கதையின்படி ஸையிப் அல் இஸ்லாம், பிரிட்டிஷ் உளவுத்துறை MI6 இன் பெயர் குறிப்பிடப்படாத ஒபரேஷன் ஒன்றின் மூலமே சிக்கியதாக தெரியவருகின்றது. ஜேம்ஸ் பாண்ட் ஸ்டைலில், 25 மில்லியன் பவுன்ட்ஸ் மதிப்புள்ள உளவு பார்த்தல் கருவி ஒன்றே கடாபியின் மகனின் மறைவிடத்தைக் காட்டிக் கொடுத்துள்ளது.
ஸையிப் அல் இஸ்லாம் அகப்படுவதற்கு முன் சுமார் ஒரு மாத காலமாக பாலைவன மறைவிடம் ஒன்றிலேயே பதுங்கி இருந்திருக்கிறார். ELINT உளவு பார்க்கும் கருவி ஒன்றின் உதவியுடன், அவரை எப்போது மடக்கலாம் என்று காத்திருந்திருக்கிறது பிரிட்டிஷ் உளவுத்துறை. ஆனால், அவரது நடமாட்டம் பற்றிய எந்தத் தகவலும் இவர்களுக்கு கிடைக்கவில்லை.
இந்த உளவு பார்த்தல் விளையாட்டின் பிரேக்-பாயின்ட் எப்போது வந்தது என்றால், பாலைவனத்தில் இருந்து ஸையிப் அல் இஸ்லாம் தனது சட்டலைட் போன் மூலமாக இரு தொலைபேசி அழைப்புகளை அடுத்தடுத்து செய்திருக்கிறார். “நான் பாதுகாப்பாக இருக்கிறேன்” என்ற ஒற்றை வாக்கியத்தைக் கூறியதுடன் தொலைபேசி இணைப்பை துண்டித்தும் இருக்கிறார்.
குறுகிய நேரத்தில் செய்யப்பட்ட தொலைபேசி அழைப்பு என்பதால், அதை ட்ரேஸ் பண்ண முடியாது என அவர் நினைத்திருக்கலாம். ஆனால், MI6 இன் உளவு பார்க்கும் கருவி அதை துல்லியமாக ட்ரேஸ் பண்ணி விட்டது. அதிலிருந்து அவரது இருப்பிடத்தை தெரிந்துகொண்ட MI6, அவரது இருப்பிடம் பற்றி லிபிய உளவுத்துறைக்கு தகவல் கொடுக்கவே, கடாபியின் மகனின் பாலைவன மறைவிடத்தை சுற்றி வளைத்து விட்டர்கள்.
பெயர் குறிப்பிட விரும்பாத பிரிட்டிஷ் உளவுப்பிரிவு அதிகாரி ஒருவர், “அவர் (கடாபியின் மகன்) செய்தது முட்டாள்தனமான காரியம். பாலைவனத்தில் வைத்து தனது சட்டலைட் போனை அவர் உபயோகித்திருக்க கூடாது” என்றார்.
“ஒரு மாத காலமாக போனையே அவர் தொடவில்லை. அவர் எப்போதாவது தவறு செய்வார் என்பதற்காக நாங்கள் பொறுமையாகக் காத்திருந்தோம். இது ஒரு சிறிய மனோதத்துவம்தான். ஒருவர் மறைவிடம் ஒன்றுக்குள் சென்றவுடன் மிகவும் அவதானமாக இருப்பார். ஆனால் நாளடைவில் அவர் இயல்பாக இருக்கத் தொடங்குவார்.
அந்தக் கட்டத்தில்தான், தான் பாதுகாப்பாக இருக்கிறேன் என்பதை தனக்கு நெருக்கமானவர்களுக்கு சொல்ல வேண்டும் என்ற ஆசை ஏற்படும். சிலரால் அந்த ஆசையை அடக்கிக் கொள்ள முடியும். சிலரால் முடியாது. கடாபியின் மகனால் ஆசையை அடக்க முடியவில்லை. குறுகிய நேர போன்கால்தானே என்று தன்னை சமாதானம் செய்துகொண்டு போனை எடுத்து விட்டார்.
எமக்கு (MI6) அவரிடம் என்ன உபகரணங்கள் இருக்கின்றன என்பதும் தெரியும், அவர் உபயோகிக்கும் சகல போன் நம்பர்களும் தெரியும். அவர் யாருக்கு போன் பண்ணுவார் என்பதும் தெரியும். அவரது போனை ஆன் பண்ணி டயல் பண்ணி முடிந்த 5 விநாடிகளிலேயே அவரது இருப்பிடத்தை ட்ரேஸ் பண்ணிவிடும் தொழில்நுட்பம் எம்மிடம் இருப்பது அவருக்கு தெரியாது என்று நினைக்கிறேன்” என்றும் தெரிவித்தார் பிரிட்டிஷ் உளவுத்துறை அதிகாரி.
ஒருவகையில் சொல்லப் போனால், கடாபியின் மகனைப் பிடித்தது லிபிய போராளிப் படைகளும் அல்ல. பிரிட்டிஷ் உளவுத்துறையும் அல்ல. தொழில்நுட்பம்தான்.