Published On: Tuesday, November 22, 2011
நாற்காலி ஆசை
(எஸ்.எல். மன்சூர், அட்டாளைச்சேனை)
றியாழ் சேர்.. நான் கொஞ்சம் வெளியே போக இருக்கிறதால பாடசாலையின் பொறுப்பை உங்கள் பெயரில் லொக் போட்டுவிட்டு போறன். உரிய நேரத்திற்கு பாடசாலய கலைங்க என்று கூறிவிட்டு பாடசாலையை விட்டு வெளியேறினார் பாடசாலையின் அதிபர் மீராசாகி. திறப்பை கையில் எடுத்த றியாழுக்கு தன்மனக்கண்முன்னே கடந்தகால நினைவுகள் அப்படியே படம்போல் காட்சியளித்தன. இந்தப்பாடசாலையில இருந்துதானே என்ன துரத்தினார்கள். அதே பாடசாலையிலதான் நான் இப்ப பிரதியதிபராக இருக்கன். என்னை யாரும் அசைக்க முடியாது. சக ஆசிரியர்கள் அனைவரும் நான் சொல்வதைத்தான் செய்வார்கள். ஒருசில ஆசிரியர்கள் இருந்தார்கள் அவர்களையும் பிரச்சினைக்காரர்கள் என்று கூறி பாடசாலையின் அபிவிருத்தி சபையினரின் ஒத்துழைப்புடன் வெளியேற்றி விட்டன். நான் எப்படியும் இப்ப இருக்கிற அதிபரையும் துரத்திட்டன் என்றால் நான்தான் அதிபர் என மனதுக்குள் பூட்டிவைத்த கனவைப்பற்றியும் அது நனவாகும் நாளைப்பற்றியும் சிந்திக்கலானார் றியாழ் ஆசிரியர்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் றியாழ் இதே பாடசாலைக்கு சாதாரண ஆசிரியராகத்தான் வந்தார். அப்போது இருந்த அதிபர் றியாழுக்கு நிருவாகத்தில் எந்தவிதமான இடமும் வழங்கவில்லை. அதனால் உயர்தரம் கற்கின்ற மாணவர்களை தன்கைக்குள் போட்டுக்கொண்டு பாடசாலை சுவர்களில் இல்லாத பொல்லாததை எல்லாம் எழுதவைத்து இறுதியில் மொட்டைக் கடிதங்களும் அதிபருக்கு எதிராக போடுவதற்கு தூண்டினார். இப்பிரச்சினை அம்பலத்திற்குவர இவற்றுக்கெல்லாம் சூர்த்;திரதாரி றியாழ் ஆசிரியர்தான் என்ற காரணம் என்றும், மாணவர்களை விசாரித்தபோது ஏற்கனவே செய்த சில விடயங்களும் அம்பலத்துக்குவர உடன் இடமாற்றலாகி தூரபிரதேசத்திலுள்ள ஒரு சிறிய பாடசாலைக்கு இடமாற்றப்பட்டார். அப்போது பலத்த அவமானத்தினால் மிகவும் கவலையடைந்தார் றியாழ். இருந்தாலும் தனது வைராக்கியம் காரணமாக மீண்டும் அதே பாடசாலைக்கு வந்து அதிபருடைய கதிரையில் உற்கார வேண்டும் என்கிற வெறி இப்போதுதான் நிறைவேறியுள்ளது. கடந்தகால நிலைமைகளை சற்று அசைபோட்டபோது தானாகவே மனதுக்குள் எழுந்த சந்தோசத்தினால் தன்னையறியாமலே சிறித்துக் கொண்டார்.
இதனை அடுத்த அறையிலிருந்து கவனித்த பசீர் ஆசிரியர் இதுதான் சந்தர்ப்பம் டி.பி. கனவுகாண்கிறார். இதப்பயன்படுத்தி வெளியேறுவம் என்று நினைத்தவராக சேர் கடும் சந்தோஷமா இருக்கிறாப்போல என்று கூறியவராக அதிபர் காரியாலயத்தினுள் இருந்த பிரதியதிபரைப் பார்த்து ஒரு போடுபோட்டார் அப்பாடசாலையின் விஞ்ஞான ஆசிரியரான பசீர். ஆ... அது வந்து.. ஒன்றுமில்லை பழைய ஞாபகமொன்டுவந்தது. அதைப்பத்தித்தான் யோசிச்சனான். வேறொன்றுமில்ல” என்றார் றியாழ் ஆசிரியர்.
பரவாயில்ல பரவாயில்ல நீங்க யோசிச்சா அதுல ஒரு அர்த்தம் இருக்கும். சும்மாவெல்லாம் யோசிக்க மாட்டிங்க என்று கூறியவராக நான் கொஞ்சம் வங்கிக்கு போகணும் போய்வரட்டா சேர், போய்வாங்க. அதிபரும் இல்ல என்றார் டி.பி. உடனே வாரன்சர் என்று விடைபெற்ற பசீர் வெளியே போகும் போது அதிபர் இருந்தால் இப்படியெல்லாம் போகவிடமாட்டார். படிவம் நிறப்பி, பதிலாள்போட்டு இது எதுவுமில்லாம வெளியே போவதன்டா டிபிசேர் றியாழ் இருக்கக்கொளதான் போகலாம். டிபி சேர் நல்லவர். என்னகேட்டாலும் உதவி செய்வார். குறுகியகால லீவெல்லாம் எழுதுறதேயில்லை. இந்தாலுக்கும் நெடுநாள் ஆசைபோல அதிபராக வரோணுமெண்டு. நாம என்ன செய்கிற என மனதுக்குள் நினைத்தவராக வெளியேறினார் பசீர் ஆசிரியர்.
மீண்டும் தனது பழைய ஞாபத்தில் மிதந்தார் றியாழ் ஆசிரியர். தனக்குப் போட்டியாக வந்த பலரை வீழ்த்தியதை மீட்டி ஞாபகப்படுத்திக்கொண்டார். இப்பயெல்லாம் படிபிக்க ஏலாது. சும்மா இப்படித்தான் சட்டம்பி வேல பார்க்கிறத்த உட்டுட்டு வகுப்புக்களுக்கு சென்று படிப்பிக்கிறத்தப்போல ஆத்தாதவேல ஒன்றுமில்ல. அதனாலதான் எப்பவும் இப்படியேயிருக்க வேணுமெண்டால் அதிபரை வேறு பாடசாலைக்கு அனுப்பினால் நான் காண்கிற கனவு நிறைவேறிறும். இந்தநிலைமைக்குவர சுமார் முணுவருசம் கழிஞ்சிருக்கு. இப்பயிருக்கிற ஆசிரியர்கள் எல்லாருக்கும் நான் உதவுகிறேன் எதற்காக? நாளைக்கு அதிபர் கதிரையில நான் இருக்கிறத்துக்காகத்தான். மாணவர்களையும் என்னுடைய பக்கம் வைச்சிருக்கன். பாடசாலை அபிவிருத்தி சங்கத்தையும இன்னும் கலைக்காம காலம் முடிஞ்சபொறகும் வைச்சிருக்கிறது இதுக்குத்தான்
“சேர்.. சேர்” என்கிற குரல் கேட்டு திடுக்கிட்டவராக ஆ...வாங்க! வாங்க..! இருங்க சேர் இருங்க என்று காரியாலயத்திற்குள் வந்த ஆசிரியரை வரவேற்றார் டி.பி. றியாழ். வந்தவர் அண்மையில் அதிபர் நியமனம் கிடைத்தவர். ஒருவேளை இங்குதான் கடமையேற்க வந்துள்ளாரோ? என்று நினைத்தவராக எப்படிசேர் சுகமா? அதிபரும் வெளியே போய்விட்டார். என்று ஒருவாறு ஓரப்பார்வையுடன் தொடர்ந்த பேச்சை இடைமறித்த வந்தவர் நான் இந்தப்பாடசாலைக்கு பிரதியதிபராக நியமிக்கப் பட்டுள்ளதாகவும், மாகாண கல்வியமைச்சின் கடிதத்துடன் வந்துள்ள செய்தியை கூறி தமது நியமனக் கடிதத்தை நீட்டியபோதுதான் முகம்வெழுத்துப்போய் உடம்பு முழுவதும் வியர்க்கத் தொடங்கியது றியாழ் ஆசிரியருக்கு. இருந்தாலும் உள்ளுரக் கோபத்துடன் இங்க பிரதியதிபர் வெற்றிடம் இரண்டிருக்கி. பரவாயில்லை நானும் இருக்கன். நீங்களும் வந்தது நல்லதுதான் இருவரும் சேர்ந்து பள்ளிக்கூடத்தை ஒழுங்காக செய்யலாம். என்னால தனிய செய்யேலாது. அதிபரும் இருக்கிறதுமில்ல என்று பேசிச் சமாளித்தார் டிபி றியாழ்.
நியமனக் கடிதத்தைப் பெற்ற றியாழ் அதனை விரித்துப் படித்தவருக்கு வியர்வையும் புழுக்கமும் அந்த மேல்விசிறியின் காற்றையும் தாண்டி உடம்பெல்லாம் சூடேற்றியது. சரி. பரவாயில்லை முன்னர் படிப்பித்த பாடசாலைக்கே அல்லாஹ் ஒங்கள பிரதியதிபராக அனுப்பியிருக்கான். தினவரவுபுத்தகத்தில் ஒப்பமிட்டுவிட்டு காரியாலத்திற்கான கடிதப்பிரதிகள கணனியில அடிங்க அதிபர் வந்ததும் கொடுத்து ஒப்பம் வாங்குவம் என்றார் வேண்டாவெறுப்புடன் டிபி றியாழ் ஆசிரியர். தனது கதிரைக்கு வேட்டுவைக்க வந்திருக்கும் புதிய பிரதியதிபருக்கு நாம விரைவில் வேட்டுவைத்து இவரை எப்படியும் பாடசாலையவிட்டு வெளியேத்திற வேலையைத்தான் இன்றையில இருந்து செய்யவேண்டும். என்று மனக்கோட்டை கட்டியவராக காரியாலயத்தை விட்டு வெளியேறினார் றியாழ் ஆசிரியர்.
நேராகவே தனது நெருங்கிய நண்பனான உவைஸ் ஆசிரியரிடம் சென்று நடந்திருக்கும் விடயத்தைக் கூறினார். சகலவற்றையும் கேட்டுவிட்டு அப்படியா? என்றார் உவைஸ். “இதுக்கு ஏதாவது செய்தாகனுமே? என்றாரர் டிபி. “நாம ஒன்றும் செய்யிறல்ல. எல்லாத்துக்கும் ஆள் இருக்கி. பாடசாலை அபிவிருத்தி சபையில இருக்கிற ஒமர்காக்காக்கிட்டப் போய் பள்ளிக்கூடத்தில் இருக்கிற டிபிபோதும். புதிய டிபிஎல்லாம் தேவையில்ல என்று காரியாலயத்தில போய் சொல்லுங்க அப்படி நீங்க அனுப்பாதுவிட்டா நாங்க கனக்கப்பேர் வெளியேறப்போறம். அதனால உடனடியாக சபையைக் கூட்டி எப்படியும் வந்திருக்கிற பிரதியதிபரை வெளியேத்துற வேலையைப் பாருங்க என்று ஐடியாக கொடுப்பம் என்னசேர்”. என்றார் உவைஸ் ஆசிரியர்.
நல்ல ஐடியா! இன்றைக்கே பின்நேரம் இது சம்பந்தமாக கூறவேண்டும் என்ற தீர்மானத்தை உள்ளுர சபதம் எடுத்தனர். இந்தாங்க பிளேன்டி என்று தேநீர் கிளாசை நீட்டினான் வாச்சர் பிச்சைத்தம்பி. சேர் நான் சொல்றன் என்று கோவிக்காதங்க ஒங்கள கிளப்புற ஐடியாவுலதானாம் புதிய பிரதியதிபர் நியமிக்கப்பட்டிருக்காராம் என்று இரவு ஊருக்குள்ள கதை என்ட காதுல விழுந்திச்சி. நான் ஒத்தர்கிட்டயும் சொல்லல்ல. இப்ப நீங்க பேசினத்த வைச்சிப்பார்த்தா ராவு கேள்விப்பட்டதுள உண்மை இருக்கி. என்றான் ஒரே மூச்சில் புவாத். அப்ப ஏன் நீ இவ்வளவு நேரத்துக்கும் சொல்லவில்லை என்று கேள்வி கேட்டார் டிபி. றியாழ் ஆசிரியர். அது நான் எப்படி சொல்ற சில வேளைகளில அது பொய்யென்டா நான் சொல்ல அது பிரச்சினையாக வர எனக்கு ஏன்சார் வீண்வம்பு என்று சமாளித்தான் பிச்சைத்தம்பி. “சரி! சரி! நீ.. போய் வந்திருக்கிற புதிய டிபி. என்ன செய்கிறார் என்று பார்த்துவா என்று கட்டளையிட்டார் றியாழ் ஆசிரியர். அப்போது பாடசாலை எங்கும் புதிய பிரதியதிபரின் வருகையை பரவலாகவே பேசப்பட்டது.
மறுநாள் விசேடகாலைக்கூட்டம் நடைபெறுவதற்கான ஆயத்தங்கள் நடைபெற்றன. அனைத்து மாணவர்களும் வருகைதந்தனர். ஆசிரியர்களும் காலைக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். அதிபர்; ஒலிவாங்கியின் முன்னால் நின்றவாறு பேசினார். “இப்போது உங்களை விசேடமாக அழைத்தது யாதெனில் எமது பாடசாலைக்கு புதிய பிரதியதிபராக அமீன் சேர் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். அவர்கள் ஏற்கனவே இப்பாடசாலையில் இருந்து இடமாற்றம் பெற்றுச் சென்றவர். இருந்தாலும் தன்னுடைய திறமை காரணமாக அதிபர் பரீட்சையில் கூடிய புள்ளிகளைப் பெற்று அதிபராக நியமனம் பெற்று தற்போது இப்பாடசாலையில் பிரதியதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். இனிமேல் இப்பாடசாலையின் பிரதியதிபராக அமீன் சேர்தான் செயற்படுவார்கள். றியாழ் அவர்கள் உதவியதிபராக இருப்பார். மாணவர்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் புதிய டிபிசேர் கவனிப்பார் என்று பகிரங்கமாகவே அறிவித்தார் அதிபர்.
இவையனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த றியாழ் ஆசிரியருக்கு தூக்கிவாரிப்போட்டது. நேற்றுவரை நானே கதி என்றிருந்த அதிபர் இன்று புதியவருக்கு பாடுகிறாரே என்ன நன்றிகெட்ட அதிபர் என்று தனக்குள்ளே மனம்புழுகியவராக தனது இருப்பிடத்தை நோக்கி நடந்தார் றியாழ். இன்று ஆசிரியர் கூட்டம் மதியம் 12.30க்கு மணிக்கு என்று சுற்றுநிருபத்த எழுதி தாங்க என்றார் அதிபர் காரியாலய கிளாக்கிடம். சரி.. சேர் என்றுகூறிவிட்டு அவர் அந்தவேலையில் ஈடுபடலானார். கைக்கு எட்டியதும் வாய்க்கு எட்டவில்லை என்கிற நிலையில் றியாழ் ஆசிரியர் சோகத்துடன் காரியாலயத்திற்கும் வரவில்லை மரநிழலின் கீழ் சில ஆசிரியர்;களுடன் பேசிக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிந்தது.
கடித்தில வந்திருக்கம் ஒரு கடிதம் வந்தா நாம உடனே வெளியேற இதுதான் நமது தொழில் இந்தத் தொழில் செய்யிறத்துக்கு இந்த இடம்தான் நமது இடம் என்று யாரும் சொல்ல முடியாது. அரசின் கட்டளைப்படி நாட்டின் எப்பாகத்திலும் சேவை செய்வேன் என்று ஒப்பந்தம் செய்திருக்கிறம். அதனால இதைப்பத்தியெல்லாம் யோசிக்கவே கூடாது. இன்று ஒருபாடசாலை நாளைக்கு வேறொரு பாடசாலை இதுக்குள்ள எதுக்கு பிரச்சினை. நாம இருக்கும்வரை நல்லாச் செய்துவிட்டு எம்மால் ஒரு மாணவனாவது பிரயோசனம் பட்டான் என்றால் அதுவே போதும் என்று பாடசாலையின் சிரேஷ்ட ஆசிரியரிடம் பேச்சைக் கொடுத்தார் அதிபர். “உண்மைதான் சேர். இதுக்குப் போய் றியாழ் சேர் மிகவும் கவலைப்பட்டமாதிரி இருக்கிறார். அவரையும் நீங்க கழிக்கயில்லதானே. அவரும் உதவியதிபர் என்றுதான் கூறியிருக்கிறியள். பெரிய விசம்தானேயது” என்று அதிபரின் பேச்சுக்கு ஒத்துப்போகும் வித்தில் பேசினார் சிரேஷ்ட ஆசிரியர்.
புதிய பிரதியதிபரை பாராட்டி நடைபெற்ற ஆசிரியர் குழுக்கூட்டத்தில் இங்குள்ள நிலைமைகளை சற்று விரிவாக விளக்கினார் அதிபர். புதிய நிருவாகத்தில் நுழைந்துள்ள பிரதியதிபரின் செயற்பாடுகளை விலாவாரியாக பேசிய அதிபர் “பாடசாலையின் சகல விடயங்களிலும் என்னுடன் தோளோடு தோள் சேர வந்திருக்கும் புதிய பிரதியதிபர் இனிமேல் இப்பாடசாலையின் ஒரு அங்கம்” என்றவாறெல்லாம் உரையாற்றினார் அதிபர். அதனைத் தொடர்ந்து நன்றியுரையில் பேசிய புதிய பிரதியதிபர் அமீன் “எனது வருகை நான் விரும்பி நடைபெறவில்லை. இக்கடிதம் கல்விச் சேவை ஆணைக்குழுவிடமிருந்து மாகாணக் கல்வியமைச்சிலுருந்து வந்துள்ளது. எனவே நானும் நீங்களும் இணைந்து இந்த மாணவர்களின் நலனில் அக்கரையாக இருந்து இப்பாடசாலையின் உயர்வில் ஒத்துழைப்போம் என்று தனது பணியின் மேண்மை குறித்து உரையாற்றி நன்றியும் தெரிவித்து விடைபெற்றார். பிரதியதிபர்.
அடுத்தநாள் காலையி;ல் பாடசாலையின் முன்னாள் அதிகமான மாணவர்கள் குவிந்து நிற்கின்றார்கள் அப்போது அதிபர் வந்தார் “என்ன நீங்க எல்லாறும் கூடிக்கி நிற்கிறது. வகுப்பறைகளை சுத்தம் செய்யவில்லையா? என்று கேள்விக்குமேல் கேள்விகளைத் தொடுத்தார் அதிபர். அது வந்து சேர் துண்டுப்பிரசுரம் கேத்தில் ஒட்டியிருக்கு அதத்தான் எல்லோரும் பார்த்துக் கொண்டிருந்தாங்க. நேற்று வந்த புதிய பிரதியதிபரைப்பற்றி மிகவும் கேவலமாக அதில் எழுதப்பட்டிருந்தது. என்று கூறினான் சிரேஷ்ட மாணவன் ஒருவன். இப்ப எல்லாரும் வகுப்புக்களுக்குப் போய் ஒங்கட ஒங்கட வேலைகளைப் பாருங்க? என்று கட்டையிட்டார் அதிபர்.
சில நிமிடங்களின் பின்னர் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. என்னசார் முன்வாசல் கதவுல பங்கர நேட்டிஸ் ஒட்டியிருந்ததாம். அதுல புதிய பிரதியதிபரைப்பற்றித்தானாம் ஒரே எழுதியிருந்ததாம். நீங்க பார்க்கயில்லையா? என்று கேட்டார் சக ஆசிரியரிடம். ஒருஆசிரியர். “நானும் பார்க்க இல்லசேர். அதுக்கிடயில அதிபர் கிழிச்சிட்டாராம் என்று மாணவர்கள் கூறினார்கள். தேவையில்லாத பிரச்சினைகளை போட்டு இப்படி கதவுல வழியில, சுவரில மொட்டக் கடிதம் ஒட்டுறதால ஒன்றும் நடக்கப்போறதில்ல. இதுக்கெல்லாம் காரணம் நாற்காலி ஆசைதான். இந்த கதிரைக்கு இப்படியெல்லாம் எழுதி ஆசைப்பர்றதால எதைச் சாதிக்கப் போகிறார்கள். இதுகலாள பாதிக்கப்படுவது நமது மாணவர்கள்தான் நல்ல விடயங்களை கற்பிக்கவந்த ஆசிரியர்கள் பிழையான வழிகாட்டுதல்கள செய்யிறத்தால பிள்ளைகள் கெட்டுப் போய்விடுவார்கள்”. என்றார் மற்ற ஆசிரியர்.
அடுத்தநாள் காலையில் பாடசாலையில் ஒரே பரப்பு. மாணவனத் தலைவனை அழைத்தார் ஆசிரியர் ஒருவர். என்ன இரவு நடந்தவிடயம் என்று கேட்டபோது மாணவன் கூறிய விடயத்தைக் கேட்டு மலைத்துப் போனார் அந்த சிரேஷ்ட ஆசிரியர். “நேற்றிரவு பெயின்ட எடுத்துகிட்டு றியாழ் சேரும், ஒரு மாணவனும் பாடசாலைக்குள்ள வந்திருக்கிறார்கள். பாடசாலையில ஒரே இருட்டு. அப்போது சுவரில ஏதோ எழுத முற்பட்டவேளை இவர்களுக்கு தெரியாமல் ஏதோ கொத்திச்சாம். அங்கே என்னவென்று பார்த்தால் புடையன் பாம்பு தீண்டிவிட்டது. உடனனே றியாழ் சேர் மயக்கம் போட்டு விழுந்திட்டார் பையனும் பயத்தில ஓடிவிட்டான். சில மணிநேரத்திற்குப்பிறகு அந்தவழியால் வந்த பொதுமக்கள் சிலர் முணுமுணுக்கும் சத்தம் கேட்டு வந்தபோது வாயல நுரைகக்கியவாறு றியாழ் ஆசிரியர் வீழ்ந்து கிடந்தார். அப்போதுதான் பாம்பு கடிச்ச விடயம் தெரியவந்தது.
உடனே பக்கத்தில் இருக்கிற வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு இப்போது அவசர சிகிச்சைப் பிரிவில் வைத்திருக்கிறார்கள்” என்று ஒரேமூச்சில் படபடக்க கூறினான் மாணவன். இந்தச் செய்தி கேட்ட ஆசிரியரருக்கு வெட்கம் ஒருபக்கம் கேவலம ஒருபக்கம். ஒரு நாட்காலி ஆசைக்கு ஆசைப்பட்டு இரவில் வந்து யாருக்கும் தெரியாம மொட்டக்கடிதம் எழுதி மாணவர்களையும் குழப்பி, பாடசாலையையும் குழப்பி, சமுதாயத்தையும் குழப்புற குழப்படிக் காரர்களுக்கு அல்லாஹ்விட்ட தண்டனை சரியானதுதான் என்று தனக்குள்ளே நினைத்துக் கொண்டார் முப்பது வருடம் சேவையாற்றிய அந்த சிரேஷ்ட ஆசிரியர்.
அதுமட்டுமல்ல சேர் என்றான் இன்னொரு மாணவன் என்னசொல்லு என்றார் ஆசிரியர் “சேர் நம்முடைய டிபிசேர் ஒவ்வொரு ராவையிலயும் ஊறுக்குள்ள பெரிய மாணவர்களோட உலாத்துவார். அபிவிருத்தி சபையாக்கள்ள வீட்டுக்கெல்லாம் ஒரே போறது. என்நேரம் பார்த்தாலும் இந்தப்குதியிலதான் சேர் அவர் ஒரே சுத்துற. நாங்க எத்தனைநாள் கண்டிருக்கம்.” என்று கூறினான் மற்றொரு மாணவன். பதிவிக்காக தன்னைச்சுற்றி பெரிய வட்டத்தைப் போட்டுக் கொண்டு அவர்கள் எல்லோரும் உதவுவார்கள் என்ற நப்பாசையின் காரணமாக பிழையான வழியில் செல்ல முற்பட்ட வேளையில் அல்லாஹ்தான் சரியான பரிசினை வழங்கியிருக்கான் இதுல நாம கவலைப்படுவதில் என்ன இருக்கு. என்று நினைத்துக் கொண்டார் சிரேஷ்ட ஆசிரியர்.
உள்ளத்தில் நினைவலைகள் முட்டி மோதிக் கொண்டன. தேநீர் கடையைநோக்கி நடந்தார் சிரேஷ்ட ஆசிரியர். “ஆசையும் அளவோடத்தான் இருக்கவேண்டும். தகுதியும் இல்லை தராதரமும் இல்லை. சில அரசியல்வாதிகளின் காழில் விழுந்து தொழில் எடுப்பது. எடுத்த அடுத்தகணம் பெரிய பதவியில் ஆசைப்படுவது. உண்மையிலே பட்டம் பதவிகள் எல்லாம் எம்மைத் தேடிவரவேண்டும். நாம் அவற்றை தேடிப்போகக்கூடாது. அவ்வாறு தேடிப்போனால் இறைவன் எம்மைக் கேவலப்படுத்துவான் என்பதற்கு உதாரணம் றியாழ் ஆசிரியருக்கு நடந்த சம்பவம். கேடு நினைப்பவன் கெட்டே அழிவான் என்ற முதுமொழி சரியாகத்தான் இருக்கு. பிழையான வழியில் கதிரைக்கு ஆசைப்பட்டவரின் நிலைமையை பார்த்தீங்களா? என்று பலரும் பேசிக்கொண்டது என்காதுகளில் பட்டுத் தெறித்தது.
(யாவும் கற்பனை)