லிபியாவின் சர்வாதிகாரியாக கடந்த 32 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த கடாபி புரட்சிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டமை யாவரும் அறிந்ததேஇந்த நிலையில் அவரது குடும்பமே வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளது.
தற்போது லிபியாவை ஆட்சி செய்து வரும் புதிய அரசு கடாபியின் குடும்பத்தினர் மீது ஊழல் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றது.
அரசாங்க பணத்தில் குடும்ப உறுப்பினர்கள் வெளிநாடுகளில் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு அது லிபிய உயர் நீதிமன்றில் விசாரிக்கப்பட்டு வருகின்றது.
கடாபியின் கால்பந்து வீரரான இளையமகன் Saadi Gaddafi வடமேற்கு லண்டனின் Hampstead என்ற பிரதேசத்தில் 10 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்கள் பெறுமதியான ஆடம்பர பங்களாவை வாங்கி இருப்பது லிபியாவின் இடைகால அரசுக்கு உத்தியோக பூர்வமாகத் தெரிய வந்துள்ளது
எட்டு படுக்கை அறைகள், நீச்சல் குளம், தியேட்டர், பெறுமதிமிக்க மரத்தளபாடங்கள் கொண்ட அந்த வீட்டை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என நீதிபதி Popplewell உத்தரவிட்டுள்ளார்.
இந்தச் செய்தியானது கடாபி மகனுக்கு பலத்த் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பலஸ்தீன் மக்கள் நடத்தும் போராட்டத்தை நான் மதிக்கிறேன் என்று உலகப்புகழ் பெற்ற முன்னாள் அர்ஜெண்டினா கால்பந்து விளையாட்டு வீரர் மரடோனா கூறியுள்ளார். பலஸ்தீன் மக்களின் மிகப்பெரிய ரசிகன் தான் என்று மரடோனா துபாயில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பலஸ்தீன் விவகாரத்தில் மரடோனா முதன் முறையாக தனது கருத்தை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் மரடோனா கூறியதாவது, பலஸ்தீன் போராட்டத்தை மதிப்பது எனது கருத்தாகும். இக்கருத்து எவருக்கேனும் கோபத்தை ஏற்படுத்தும் என்பதால் அதனை நான் வாபஸ் பெறமுடியாது. ஃபலஸ்தீன் மக்களுக்கு அனைவரின் ஆதரவும் தேவை. அவர்களிடம் எனக்கு மதிப்பும், அனுதாபமும் உண்டு. எனது இரண்டு வயது பேரனைப் போலவே ஃபலஸ்தீன் மக்களுக்கும் எப்பொழுதும் ஆதரவு தேவை. அநீதிக்கு எதிராக பலஸ்தீன் மக்கள் நடத்தும் போராட்டம் குறித்து எனக்கு முழுமையாக தெரியும்’ என்று மரடோனா கூறினார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் பலஸ்தீனைச் சார்ந்த ஒரு ரசிகரிடம் இருந்து கறுப்பு, வெள்ளை நிறத்திலான ஸ்கார்பை மரடோனா பெற்றுக்கொண்டார். அப்பொழுது அவர் வெற்றிச் சின்னத்தை உயர்த்தி காண்பித்து ‘விவா பலஸ்தீனா’ என காமெராவுக்கு முன்னிலையில் கூறினார். பலஸ்தீனுக்கு வருவதாக அந்நாட்டின் கால்பந்து குழுவிற்கு மரடோனா உறுதி அளித்துள்ளார்.
சூரிய காந்த புயல் தாக்குதல் தொடரும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். நேற்று முன்தினம் நடந்த காந்த புயல் தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக பூமிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. சூரியனில் ஏற்படும் வேதியியல் மாற்றங்களால் காந்த புயல்கள் உருவாகின்றன. சூரியனின் மேற்பகுதியில் கொந்தளிப்பாக காணப்படும் பகுதி, சில நேரங்களில் அதிக வெப்பத்தால் அதில் இருந்து பிய்த்துக் கொண்டு காந்த புயலாக வெளியேறும். இது பல லட்சம் மைல் வேகத்தில் பூமியை நோக்கி பாயும்.
இதனால் செயற்கைக் கோள், மின்சாரம், விமானப் போக்குவரத்து பாதிக்கப்படலாம் என்று அஞ்சப்படுகிறது. இதுபோல் அவ்வப்போது நடந்தாலும் இதுவரை பூமிக்கு எந்த ஆபத்தும் நிகழவில்லை. இந்நிலையில் மிகப்பெரிய சூரிய புயல் ஒன்று நேற்று முன்தினம் பூமியை தாக்கியது. இது கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப் பெரியது. வழக்கமான சூரிய புயலில் இருந்து இது 10 மடங்கு பெரியது என்று நாசா விஞ்ஞானிகள் கூறினர்.
புயல் தாக்கும் போது, செயற்கை கோள், ஜிபிஎஸ், தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்புகள் பாதிக்கப்படலாம் என்று எச்சரித்திருந்தனர். ஆனால், நேற்று காலை தாக்கிய சூரிய காந்த புயலால் பூமிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று நாசா விஞ்ஞானிகள் கூறினர். சூரிய புயல் தாக்குதலால், பூமியின் காந்த புலத்துக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்று அவர்கள் உறுதிப்படுத்தினர். அதேநேரம், வெப்பம் பூமி நோக்கில் பாய்ந்ததால் அடுத்த சில நாட்களுக்கு சுட்டெரிக்கும் வெயில் இருக்கும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து நாசா விஞ்ஞானிகள் கூறுகையில், ''கடந்த செவ்வாய்க்கிழமை மாலை, சூரியனில் இருந்து பிரகாசமான ஒளி பிய்த்து கொண்டு பூமி நோக்கி அதிவேகமாக புறப்பட்டது. பின்னர் படிப்படியாக சோப்பு நுரையில் இருந்து உருவாகும் உருண்டை போல பெரிதானது. இதுபோன்ற சூரிய புயல் தாக்குதலால் மனிதர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால், காந்த புயல், ரேடியோ அலை புயல், கதிர்வீச்சு புயல் என்ற 3 வகை புயல்களால் தகவல் தொழில்நுட்பங்கள் பாதிக்கப்படும். இதுபோன்ற காந்த புயல் தாக்குதல் தொடரும்'' என்றனர்.
பாகிஸ்தானில் சட்ட விரோதமாக வசித்ததாக வழக்கு பதிவு செய்யப் பட்டு பின்லேடனின் 3 மனைவிகள் நேற்று கைது செய்யப்பட்டனர். பாகிஸ்தானின் அபோட்டாபாத் நகரில் ராணுவ பயிற்சி மையம் அருகில் உள்ள வீட்டில் ஒசாமா பின்லேடன் வசித்து வந்தார். கடந்த ஆண்டு மே 2ம் தேதி அமெரிக்க அதிரடி படையினர் அந்த கட்டிடத்தை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர். பின்லேடனை சுட்டுக் கொன்றனர். பிறகு அவரது உடல் ஹெலிகாப்டரில் எடுத்து செல்லப்பட்டு கடலுக்கு அடியில் புதைக்கப்பட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்தது.
பின்லேடனுடன் தங்கியிருந்த 3 மனைவிகள், குழந்தைகள், பேரக் குழந்தைகளை அமெரிக்க வீரர்கள் பிடித்து பாகிஸ்தான் போலீசிடம் ஒப்படைத்தனர். அவர்களை ரகசிய இடத்தில் வைத்து, கடந்த 6 மாதங்களுக்கு மேலாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணை முடிந்து 3 பெண்களும் குழந்தைகளுடன் துபாய், ஏமன் செல்ல திட்டமிட்டுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.
இந்நிலையில், பாகிஸ்தானில் சட்ட விரோதமாக நுழைந்து குடியிருந்ததாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் ரகுமான் மாலிக் நேற்று தெரிவித்தார். ‘‘சட்ட விரோதமாக பாகிஸ்தானில் தங்கியிருந்த குற்றத்துக்கு பின்லேடன் மனைவிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்ட நிபுணர்கள், புலனாய்வு அமைப்பினர் முடிவு செய்தனர். அதன்படி, 3 பேரும் குழந்தைகளுடன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். நீதிமன்ற உத்தரவின்பேரில் விசாரணை காவலில் வைக்கப்பட்டுள்ளனர்’’ என்றார் அவர்.
பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்ட அல்-கொய்தா தலைவர் பின்லேட னின் உடல் கடலில் புதைக்கப்பட வில்லை என்றும், உடல் அமெரிக்காவுக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் வீக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது. உலகெங்கும் உள்ள அமெரிக்கத் தூதரகங்களுக்கும், வெள்ளை மாளிகையில் உள்ள வெளியுறவுத்துறை தலைமை அலுவலகத்துக்கும் இடையே நிகழ்ந்த லட்சக்கணக்கான ரகசிய கேபிள் செய்தி பரிமாற்றங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது விக்கிலீக்ஸ். இதையடுத்து பல்வேறு ஐரோப்பிய நாடுகளுடன் இணைத்து அதை முடக்கியது அமெரிக்க அரசு. இதையடுத்து அனானிமஸ், விக்கிலீக்ஸ் என்ற பெயரில் புதிதாக ஒரு இணையத்தளத்தை உருவாக்கி தன்னிடம் உள்ள ரகசிய தகவல்களை வெளியிட்டு வருகிறது விக்கிலீக்ஸ்.
சமீபகாலமாக அமெரிக்க அரசுக்காகவும் இராணுவத்துக்காகவும் உளவுப் பிரிவுக்காகவும் அமெரிக்க நிறுவனங்களுக்காகவும் பல்வேறு நாடுகளில் உளவு பார்த்து வரும் தனியார் அமைப்பான ஸ்ட்ராட்போர் நிறுவனத்தின் ரகசிய ஈமெயில் பரிமாற்றங்களை வெளியிட ஆரம்பித்துள்ளது விக்கிலீக்ஸ். ஸ்ட்ராட்போர் நிறுவனத்தின் இரகசிய பிரிவின் துணைத் தலைவர் பிரட் பர்ட்டன் தனது அதிகாரிக்கு எழுதியுள்ள இமெயிலை இன்று வெளியிட்டுள்ளது விக்கிலீக்ஸ். அதில் பர்ட்டன் எழுதியுள்ளதாவது:
பாகிஸ்தானின் அபோடாபாத் நகரில் கடந்த 2011ம் ஆண்டு மே மாதம் 2ஆம் திகதி சுட்டுக் கொல்லப்பட்ட ஒசாமா பின் லேடனின் உடல் அமெரிக்க அரசு கூறியபடி கடலில் புதைக்கப்படவில்லை. மாறாக அந்த உடல் சிஐஏவின் விமானத்தில் அமெரிக்காவுக்குக் கொண்டு வரப்பட்டது. அந்த உடலை பரிசோதனை செய்ய சிஐஏ முடிவு செய்தது.
இதனால் முதலில் டெல்வேர் மாகாணத்தின் டோவர் நகருக்கு சிஐஏவின் விமானத்தில் அந்த உடல் கொண்டு வரப்பட்டது. பின்னர் மேரிலாண்டின் பெதெஸ்டா பகுதியில் உள்ள ராணுவத்தின் நோய் தடுப்பியல் ஆராய்ச்சி மையத்துக்குக் (Armed Forces Institute of Pathology) கொண்டு செல்லப்பட்டது என்று கூறியுள்ளார். அந்த உடல் இப்போதாவது புதைக்கப்பட்டுவிட்டதா அல்லது இன்னும் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை.
முன்னதாக ஒசாமாவின் உடலை இஸ்லாமிய முறைப்படி இறுதிச் சடங்குகள் செய்து அரபிக் கடலில் புதைத்தாக அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்திருந்தார். ஆனால், அது பொய் என்பது இப்போது உறுதியாகிவிட்டது. ஒசாமாவின் உடல் புதைக்கப்பட்ட இடம் தெரிந்தால் அதை தீவிரவாதிகள் னைவுச் சின்னமாக்கிவிடுவர் என்பதாலும், ஒசாமா இறந்தாலும் அவரது கொள்கைகளைப் பரப்ப அது ஒரு மையமாகமும் அடையாளமாகவும் ஆகிவிடும் என்பதாலும் ஒசாமாவை கடலில் புதைத்ததாக அமெரிக்கா சொல்லி வருவதாகத் தெரிகிறது.
ஒசாமா பின்லேடனின் மனைவிகள், குழந்தைகள் பாகிஸ்தானில் இருந்து வெளியேறி ஏமன், துபாய்க்கு செல்ல தயாராகி வருகின்றனர். அல்&கய்தா அமைப்பை சேர்ந்த சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடன், பாகிஸ்தானின் அபோட்டாபாத் பகுதியில் வசித்து வந்தார். இதை கண்டுபிடித்த அமெரிக்க படையினர், கடந்த ஆண்டு மே 2ம் தேதி திடீர் தாக்குதல் நடத்தி பின்லேடனை கொன்றனர். அவரது உடல் கடலுக்கு அடியில் புதைக்கப்பட்டது.
தாக்குதலின்போது அவருடன் தங்கியிருந்த 5 மனைவிகள், குழந்தைகள், பேரக் குழந்தைகளை பாகிஸ்தான் போலீசிடம் அமெரிக்க வீரர்கள் ஒப்படைத்தனர். ரகசிய இடத்தில் அவர்களை தங்க வைத்து கடந்த சில மாதங்களாக தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
பின்லேடன் குடும்பத்தினரிடம் விசாரணை முடிந்ததாக பாகிஸ்தான் போலீசார் தெரிவித்ததையடுத்து, ஏமன், துபாய்க்கு அவர்கள் ஓரிரு நாளில் புறப்படுவதாக பாகிஸ்தான் நாளேடு நேற்று செய்தி வெளியிட்டது. பின்லேடன் மனைவிகளில் சிலர் ஏமன் நாட்டை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் தாயகம் திரும்புகின்றனர். பின்லேடனுடன் ரகசிய வீட்டில் 5 ஆண்டுகள் வசித்த கடைசி மனைவி துபாயை சேர்ந்தவர். எனவே, அவர் துபாய் செல்வதாக நாளேடு தெரிவித்துள்ளது.
ரஷ்ய அதிபர் தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. அதில் பதிவான ஓட்டு எண்ணிக்கை முடிவில் பிரதமர் விளாடிமிர் புடின் 63 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதையடுத்து, அவர் 3வது முறையாக ரஷ்ய அதிபராகிறார். கடந்த டிசம்பரில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் சொற்ப ஓட்டுகள் வித்தியாசத்தில் புடின் கட்சி வெற்றி பெற்றது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. தேர்தல் முறைகேடுகள் மூலம் வெற்றி பறிக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. புடினுக்கு எதிராக மாஸ்கோவில் பிரம்மாண்ட பேரணிகள் நடத்தப்பட்டன.
இந்த சூழ்நிலையில், அதிபர் தேர்தலை உன்னிப்பாக கவனிக்க ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்புக்கான அமைப்பின் சார்பில் சர்வதேச பார்வையாளர்கள் ரஷ்யா வந்திருந்தனர். அதிபர் தேர்தலை அவர்கள் கண்காணித்தனர். புடினுக்கு எதிராக அதிபர் தேர்தலில் போட்டியிட மிகைல் கோடர்காவ்ஸ்கி என்பவர் திட்டமிட்டிருந்தார். முன்னாள் எண்ணெய் வர்த்தக தொழிலதிபரான அவருக்கு ரஷ்யாவில் கடந்த சில ஆண்டுகளாக செல்வாக்கு அதிகரித்து வந்தது. பல்வேறு குற்றச்சாட்டுகள் அடிப்படையில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
அரசியல் கைதியான அவரது தண்டனையை மறுபரிசீலனை செய்வதாக தேர்தலுக்கு முன் அதிபர் மெத்ததேவ் உறுதி அளித்திருந்தார். எனவே, மிகைல் வெளியே வந்து போட்டியிடுவார் என்ற நம்பிக்கையில் விடுதலை கட்சியினர் புடினுக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தவில்லை. ஆனால், தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகும் மிகைலை ரஷ்ய அரசு விடுதலை செய்யவில்லை.
எனவே, எதிர்த்து போட்டியிட வலுவான தலைவர் இல்லாத நிலையில் புடினின் வெற்றி எளிதானதாக சர்வதேச பார்வையாளர்கள் புகார் கூறியுள்ளனர். இது மக்கள் மீது திணிக்கப்பட்ட வெற்றி என்று அவர்கள் வர்ணித்துள்ளனர். இதையடுத்து, ரஷ்யாவில் எதிர்க்கட்சிகள், புடின் எதிர்ப்பாளர்கள் மீண்டும் போராட்டத்தில் குதிக்கலாம் என்ற சூழ்நிலை நிலவுகிறது.
ரஷ்யாவில் மூன்றாவது முறையாக விளாடிமிர் புடின் அதிபராக தேர்வாகும் சூழல் உள்ளது. ரஷ்யாவில் நேற்று அதிபர் தேர்தல் நடந்தது. ஐக்கிய ரஷ்ய கட்சி சார்பில் பிரதமர் புடின் மூன்றாவது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிட்டுள்ளார். கடந்த 2000 முதல் 2008ம் ஆண்டு வரை இரண்டு முறை புடின் அதிபராக பதவி வகித்துள்ளார்.
மூன்றாவது முறை அவர் அதிபராக முடியாது என்பதால், தன் ஆதரவாளர் திமித்ரி மெத்வதேவை அதிபராக்கினார். இவர், பிரதமராக பொறுப்பு வகித்தார். மூன்றாவது முறை அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஏற்ப சட்டதிருத்தம் கொண்டு வந்தார். இதைத் தொடர்ந்து, நேற்று நடந்த அதிபர் தேர்தலில், புடின் போட்டியிட்டார். மாஸ்கோவில் மனைவி லுத்மிலாவுடன் வந்து அவர் ஓட்டுப் போட்டார். அப்போது, அவர் குறிப்பிடுகையில், "மக்கள் பொறுப்புடன் ஓட்டளிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. நிச்சயம் இத் தேர்தலில் வெற்றி பெறுவேன்' என்றார்.
ஏராளமான தில்லுமுல்லு: கடந்த டிசம்பர் மாதம் நடந்த ரஷ்ய பார்லிமென்ட் தேர்தலில், ஏராளமான தில்லு முல்லு நடந்ததால், எதிர்க்கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, நேற்றைய தேர்தலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஒரு லட்சம் வெப் கேமராக்கள் ஓட்டுச் சாவடிகளில் பொருத்தப்பட்டிருந்தன. பல்வேறு நாடுகளை சேர்ந்த, 250 பார்வையாளர்கள் நேற்றைய தேர்தலைக் கண்காணித்தனர். தற்போது, அதிபர் தேர்தலில் இவருக்கு எதிராகப் போட்டியிடும் நான்கு பேரில், மூன்று பேர் ஏற்கனவே இவரை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரான், அணு ஆயுதங்கள் குவிப்பதை நிறுத்தாவிட்டால், கடைசி அஸ்திரமாக அதன் மீது போர் தொடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உலக அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் ஈரான் தொடர்ந்து அணு ஆயுதங்களை உற்பத்தி செய்வதாக அமெரிக்கா, ஐரோப்பா குற்றம் சாட்டி வருகின்றன. இதை ஈரான் பொருட்படுத்தவில்லை. இதையடுத்து, ஈரான் மீது பொருளாதார தடை விதித்ததுடன், உலக நாடுகள் ஈரானுடன் வர்த்தக தொடர்பு வைக்கக் கூடாது என்று அமெரிக்கா வலியுறுத்தியது. எனினும், இந்தியா, சீனா நாடுகள் ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்கி வருகின்றன. இந்நிலையில், வாஷிங்டனில் வெளியாகும் தி அட்லாண்டிக் பத்திரிகைக்கு அமெரிக்க அதிபர்
ஒபாமா அளித்துள்ள பேட்டி வருமாறு:
ஈரான் அணுஆயுதம் குவிப்பதை ஏற்று கொள்ள முடியாது. இந்த நடவடிக்கையை அந்நாடு கைவிட வேண்டும். பொருளாதார தடை, தூதரக நடவடிக்கை போன்றவற்றின் மூலம் ஈரானை நிர்ப்பந்திப்போம். ஆனாலும், வேறு எல்லா வாய்ப்புகளும் உள்ளன. ஈரானின் அணு ஆயுதங்களை அழிக்க, கடைசி அஸ்திரமாக போர் புரியவும் வாய்ப்பு உள்ளது. இதை ஈரான் புரிந்து கொள்ள வேண்டும். அதே போல், ஈரான் மீது போர் தொடுக்க இஸ்ரேல் அவசரப்படக் கூடாது என எச்சரித்து வருகிறோம். அப்படி இஸ்ரேல் அவசரமாக தாக்குதல் நடத்தினால், அது ஈரானுக்கு அனுதாபம் தேடி வந்து விடக் கூடும். இவ்வாறு ஒபாமா கூறியுள்ளார்.
சிரியா அதிபரின் நாட்கள் எண்ணப் படுவதாக அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஒபாமா அளித்த பேட்டியில் கூறுகையில், சிரியாவில் கடந்த சில மாதங்களாக அதிபர் பஷார் அல்,ஆசாத்துக்கு எதிராக போராட்டம் நீடிக்கிறது. அவர் பதவி விலக மறுத்து வருகிறார். அவரை பதவியிலிருந்து அகற்றி விட்டு அமைதியான ஜனநாயக அடிப்படையில் புதிய அரசை அமைப்பது குறித்து உலக நாடுகளுடன் பேசி வருகிறேன். லிபியாவை போல சிரியா விவகாரத்தில் செயல்பட முடியவில்லை. சிரியாவுக்கு எதிராக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை சீனாவும் ரஷ்யாவும் தோற்கடித்து விட்டதுதான் காரணம். எனினும், அதிபரின் நாட்கள் எண்ணப்படுகின்றன என்றார்.