Published On: Sunday, March 04, 2012
பெங்களூர் நீதிமன்றில் கலவரம்; 144 தடை உத்தரவு
(இந்தியாவிலிருந்து சாஹுல் ஹமீது)
பெங்களூர் நீதிமன்றத்தில் வக்கீல்களுக்கும் பத்திரிகையாளர் களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து நகரம் முழுவதும் 144 தடை உத்தரவு நேற்றும் நீட்டிக்கப்பட்டது. பதற்றமான சூழ்நிலையில் முதல்வர் சதானந்த கவுடாவை சந்தித்து பத்திரிகையாளர்கள் சி.பி.ஐ. விசாரணைக்கு வலியுறுத்தினர். பதிலுக்கு வக்கீல் சங்க நிர்வாகிகளும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதனால் கர்நாடகாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி, குவாரி மோசடி தொடர்பாக நேற்று பெங்களூர் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதுபற்றி செய்தி சேகரிக்க பத்திரிகையாளர்கள், டிவி சேனல் நிருபர்கள் திரண்டனர். அவர்களை கோர்ட்டுக்குள் விடாமல் வக்கீல்கள் தடுத்ததுடன் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். வக்கீல்களுக்கு எதிராக செய்திகள் வெளியிடுவதாக கூறி சரமாரியாக கல்வீச்சில் ஈடுபட்டனர். டி.வி. சேனல் வாகனங்கள் எரிக்கப்பட்டன. போலீஸ் ரோந்து வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது.
கலவரத்தை அடக்க வந்த போலீசார் மீதும் வக்கீல்கள் தாக்குதல் நடத்தினர். சிவில் நீதிமன்றத்தில் தொடங்கிய இந்த மோதல், உயர் நீதிமன்றம் வரை பரவியது. கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். வக்கீல்கள் தாக்கியதில் 2 டிவி நிருபர்கள் உள்பட 18 பத்திரிகையாளர்கள், துணை போலீஸ் கமிஷனர் ரமேஷ் உள்பட 25க்கும் மேற்பட்ட போலீசார் காயம் அடைந்தனர். வக்கீல்கள் தரப்பில் 7 பேருக்கு காயம் ஏற்பட்டது. அனைவரும் பவுரிங் மருத்துவமனையிலும், அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளிலும் சேர்க்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தால் பெங்களூர் முழுவதும் பதற்றம் ஏற்பட்டது. கலவரம் பரவாமல் இருக்க சிவில் நீதிமன்ற வளாகத்துக்குள் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. நிலைமை பதற்றமாக இருப்பதால் நகரம் முழுவதும் தடை உத்தரவு இன்றும் நீடிக்கப்பட்டது. இதற்கிடையில் கோர்ட்டில் நடந்த சம்பவங்கள் குறித்து தனி நீதிபதி விசாரணைக்கு முதல்வர் சதானந்த கவுடா நேற்று இரவு உத்தரவிட்டார். இதை பத்திரிகையாளர்கள் ஏற்கவில்லை. இன்று காலை 8 மணி அளவில் முதல்வரின் அரசு இல்லமான அனுகிரஹாவில் பெங்களூரில் உள்ள அனைத்து பத்திரிகை மற்றும் டிவி நிருபர்களுடன் முதல்வர் சதானந்த கவுடா அவசர ஆலோசனை நடத்தினார்.
அப்போது, பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று முதல்வரை வலியுறுத்தினர். கலவரத்தை அடுத்து இன்று கோர்ட் அலுவல்கள் எதுவும் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வக்கீல்களை கண்டித்தும், சிபிஐ விசாரணை கோரியும், பாதுகாப்பு கேட்டும் பத்திரிகையாளர்கள் இன்று காலை விதான் சவுதா முன்பு தர்ணா நடத்தினார்கள். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பத்திரிகையாளர்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு முதல்வர் சதானந்தா கூறியதாவது:
எதிர்காலத்தில் உங்கள் சேவை சுதந்திரமாக தொடர அரசு உறுதி தருகிறது. இவ்விஷயத்தில் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள். தர்ணா போராட்டத்தை கைவிடுங்கள். இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்த ஒய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. நீதிபதி யார் என்பதை இன்று மாலைக்குள் அறிவிக்கிறேன். விசாரணை தொடங்கியவுடன் தினமும் அன்று நடந்த விசாரணை பற்றி அரசுக்கு தெரிவிக்க அறிவுறுத்தப்படும் என்று முதல்வர் கூறினார்.
இதற்கிடையில் மதியம் 1 மணிக்கு பெங்களுர் வழக்கறிஞர் சங்க தலைவர் சுப்பாரெட்டி தலைமையில் வக்கீல் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடக்கிறது. அதில் நிறைவேற்றப்படும் தீர்மானம் குறித்து முதல்வரை சந்தித்து தெரிவிக்க திட்டமிட்டுள்ளனர். பிரச்னையை சுமூகமாக முடிக்க, ஐகோர்ட் தலைமை நீதிபதி விக்ரம் ஜித்சென்னுடன் முதல்வர் சதானந்த கவுடா ஆலோசனை நடத்துகிறார்.