எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Thuruvam
துருவம்
செய்திகள் • உடனுக்குடன்
THURUVAM
NEWS
MENU

கடாபி மகனின் 10 மில்லியன் பெறுமதியான வீட்டுக்கு ஆப்பு


லிபியாவின் சர்வாதிகாரியாக கடந்த 32 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த கடாபி புரட்சிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டமை யாவரும் அறிந்ததேஇந்த நிலையில் அவரது குடும்பமே வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளது.

தற்போது லிபியாவை ஆட்சி செய்து வரும் புதிய அரசு கடாபியின் குடும்பத்தினர் மீது ஊழல் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றது.

அரசாங்க பணத்தில் குடும்ப உறுப்பினர்கள் வெளிநாடுகளில் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு அது லிபிய உயர் நீதிமன்றில் விசாரிக்கப்பட்டு வருகின்றது.

கடாபியின் கால்பந்து வீரரான இளையமகன் Saadi Gaddafi வடமேற்கு லண்டனின் Hampstead என்ற பிரதேசத்தில் 10 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்கள் பெறுமதியான ஆடம்பர பங்களாவை வாங்கி இருப்பது லிபியாவின் இடைகால அரசுக்கு உத்தியோக பூர்வமாகத் தெரிய வந்துள்ளது


எட்டு படுக்கை அறைகள், நீச்சல் குளம், தியேட்டர், பெறுமதிமிக்க மரத்தளபாடங்கள் கொண்ட அந்த வீட்டை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என நீதிபதி Popplewell உத்தரவிட்டுள்ளார்.

இந்தச் செய்தியானது கடாபி மகனுக்கு பலத்த் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Sunday, March 11, 2012 |
மேலும் »

பலஸ்தீன் மக்களின் ரசிகன் நான் - மரடோனா


பலஸ்தீன் மக்கள் நடத்தும் போராட்டத்தை நான் மதிக்கிறேன் என்று உலகப்புகழ் பெற்ற முன்னாள் அர்ஜெண்டினா கால்பந்து விளையாட்டு வீரர் மரடோனா கூறியுள்ளார். பலஸ்தீன் மக்களின் மிகப்பெரிய ரசிகன் தான் என்று மரடோனா துபாயில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பலஸ்தீன்  விவகாரத்தில் மரடோனா முதன் முறையாக தனது கருத்தை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மரடோனா கூறியதாவது, பலஸ்தீன் போராட்டத்தை மதிப்பது எனது கருத்தாகும். இக்கருத்து எவருக்கேனும் கோபத்தை ஏற்படுத்தும் என்பதால் அதனை நான் வாபஸ் பெறமுடியாது. ஃபலஸ்தீன் மக்களுக்கு அனைவரின் ஆதரவும் தேவை. அவர்களிடம் எனக்கு மதிப்பும், அனுதாபமும் உண்டு. எனது இரண்டு வயது பேரனைப் போலவே ஃபலஸ்தீன் மக்களுக்கும் எப்பொழுதும் ஆதரவு தேவை. அநீதிக்கு எதிராக பலஸ்தீன் மக்கள் நடத்தும் போராட்டம் குறித்து எனக்கு முழுமையாக தெரியும்’ என்று மரடோனா கூறினார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் பலஸ்தீனைச் சார்ந்த ஒரு ரசிகரிடம் இருந்து கறுப்பு, வெள்ளை நிறத்திலான ஸ்கார்பை மரடோனா பெற்றுக்கொண்டார். அப்பொழுது அவர் வெற்றிச் சின்னத்தை உயர்த்தி காண்பித்து ‘விவா பலஸ்தீனா’ என காமெராவுக்கு முன்னிலையில் கூறினார். பலஸ்தீனுக்கு வருவதாக அந்நாட்டின் கால்பந்து குழுவிற்கு மரடோனா உறுதி அளித்துள்ளார்.
Sunday, March 11, 2012 |
மேலும் »

தொலைத் தொடர்பை பாதிக்கம் காந்த புயல்


சூரிய காந்த புயல் தாக்குதல் தொடரும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். நேற்று முன்தினம் நடந்த காந்த புயல் தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக பூமிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. சூரியனில் ஏற்படும் வேதியியல் மாற்றங்களால் காந்த புயல்கள் உருவாகின்றன. சூரியனின் மேற்பகுதியில் கொந்தளிப்பாக காணப்படும் பகுதி, சில நேரங்களில் அதிக வெப்பத்தால் அதில் இருந்து பிய்த்துக் கொண்டு காந்த புயலாக வெளியேறும். இது பல லட்சம் மைல் வேகத்தில் பூமியை நோக்கி பாயும். 

இதனால் செயற்கைக் கோள், மின்சாரம், விமானப் போக்குவரத்து பாதிக்கப்படலாம் என்று அஞ்சப்படுகிறது. இதுபோல் அவ்வப்போது நடந்தாலும் இதுவரை பூமிக்கு எந்த ஆபத்தும் நிகழவில்லை. இந்நிலையில் மிகப்பெரிய சூரிய புயல் ஒன்று நேற்று முன்தினம் பூமியை தாக்கியது. இது கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப் பெரியது. வழக்கமான சூரிய புயலில் இருந்து இது 10 மடங்கு பெரியது என்று நாசா விஞ்ஞானிகள் கூறினர். 

புயல் தாக்கும் போது, செயற்கை கோள், ஜிபிஎஸ், தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்புகள் பாதிக்கப்படலாம் என்று எச்சரித்திருந்தனர். ஆனால், நேற்று காலை தாக்கிய சூரிய காந்த புயலால் பூமிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று நாசா விஞ்ஞானிகள் கூறினர். சூரிய புயல் தாக்குதலால், பூமியின் காந்த புலத்துக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்று அவர்கள் உறுதிப்படுத்தினர். அதேநேரம், வெப்பம் பூமி நோக்கில் பாய்ந்ததால் அடுத்த சில நாட்களுக்கு சுட்டெரிக்கும் வெயில் இருக்கும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து நாசா விஞ்ஞானிகள் கூறுகையில், ''கடந்த செவ்வாய்க்கிழமை மாலை, சூரியனில் இருந்து பிரகாசமான ஒளி பிய்த்து கொண்டு பூமி நோக்கி அதிவேகமாக புறப்பட்டது. பின்னர் படிப்படியாக சோப்பு நுரையில் இருந்து உருவாகும் உருண்டை போல பெரிதானது. இதுபோன்ற சூரிய புயல் தாக்குதலால் மனிதர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால், காந்த புயல், ரேடியோ அலை புயல், கதிர்வீச்சு புயல் என்ற 3 வகை புயல்களால் தகவல் தொழில்நுட்பங்கள் பாதிக்கப்படும். இதுபோன்ற காந்த புயல் தாக்குதல் தொடரும்'' என்றனர்.
Saturday, March 10, 2012 |
மேலும் »

பின்லேடனின் 3 மனைவிகள் பாகிஸ்தானில் கைது


பாகிஸ்தானில் சட்ட விரோதமாக வசித்ததாக வழக்கு பதிவு செய்யப் பட்டு பின்லேடனின் 3 மனைவிகள் நேற்று கைது செய்யப்பட்டனர். பாகிஸ்தானின் அபோட்டாபாத் நகரில் ராணுவ பயிற்சி மையம் அருகில் உள்ள வீட்டில் ஒசாமா பின்லேடன் வசித்து வந்தார். கடந்த ஆண்டு மே 2ம் தேதி அமெரிக்க அதிரடி படையினர் அந்த கட்டிடத்தை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர். பின்லேடனை சுட்டுக் கொன்றனர். பிறகு அவரது உடல் ஹெலிகாப்டரில் எடுத்து செல்லப்பட்டு கடலுக்கு அடியில் புதைக்கப்பட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்தது.

பின்லேடனுடன் தங்கியிருந்த 3 மனைவிகள், குழந்தைகள், பேரக் குழந்தைகளை அமெரிக்க வீரர்கள் பிடித்து பாகிஸ்தான் போலீசிடம் ஒப்படைத்தனர். அவர்களை ரகசிய இடத்தில் வைத்து, கடந்த 6 மாதங்களுக்கு மேலாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணை முடிந்து 3 பெண்களும் குழந்தைகளுடன் துபாய், ஏமன் செல்ல திட்டமிட்டுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. 

இந்நிலையில், பாகிஸ்தானில் சட்ட விரோதமாக நுழைந்து குடியிருந்ததாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் ரகுமான் மாலிக் நேற்று தெரிவித்தார். ‘‘சட்ட விரோதமாக பாகிஸ்தானில் தங்கியிருந்த குற்றத்துக்கு பின்லேடன் மனைவிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்ட நிபுணர்கள், புலனாய்வு அமைப்பினர் முடிவு செய்தனர். அதன்படி, 3 பேரும் குழந்தைகளுடன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். நீதிமன்ற உத்தரவின்பேரில் விசாரணை காவலில் வைக்கப்பட்டுள்ளனர்’’ என்றார் அவர்.
Friday, March 09, 2012 |
மேலும் »

பின்லேடனின் உடல் அமெரிக்காவில்; வீக்கிலீக்ஸ்


பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்ட அல்-கொய்தா தலைவர் பின்லேட னின் உடல் கடலில் புதைக்கப்பட வில்லை என்றும், உடல் அமெரிக்காவுக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் வீக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது. உலகெங்கும் உள்ள அமெரிக்கத் தூதரகங்களுக்கும், வெள்ளை மாளிகையில் உள்ள வெளியுறவுத்துறை தலைமை அலுவலகத்துக்கும் இடையே நிகழ்ந்த லட்சக்கணக்கான ரகசிய கேபிள் செய்தி பரிமாற்றங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது விக்கிலீக்ஸ். இதையடுத்து பல்வேறு ஐரோப்பிய நாடுகளுடன் இணைத்து அதை முடக்கியது அமெரிக்க அரசு. இதையடுத்து அனானிமஸ், விக்கிலீக்ஸ் என்ற பெயரில் புதிதாக ஒரு இணையத்தளத்தை உருவாக்கி தன்னிடம் உள்ள ரகசிய தகவல்களை வெளியிட்டு வருகிறது விக்கிலீக்ஸ்.

சமீபகாலமாக அமெரிக்க அரசுக்காகவும் இராணுவத்துக்காகவும் உளவுப் பிரிவுக்காகவும் அமெரிக்க நிறுவனங்களுக்காகவும் பல்வேறு நாடுகளில் உளவு பார்த்து வரும் தனியார் அமைப்பான ஸ்ட்ராட்போர் நிறுவனத்தின் ரகசிய ஈமெயில் பரிமாற்றங்களை வெளியிட ஆரம்பித்துள்ளது விக்கிலீக்ஸ். ஸ்ட்ராட்போர் நிறுவனத்தின் இரகசிய பிரிவின் துணைத் தலைவர் பிரட் பர்ட்டன் தனது அதிகாரிக்கு எழுதியுள்ள இமெயிலை இன்று வெளியிட்டுள்ளது விக்கிலீக்ஸ். அதில் பர்ட்டன் எழுதியுள்ளதாவது:

பாகிஸ்தானின் அபோடாபாத் நகரில் கடந்த 2011ம் ஆண்டு மே மாதம் 2ஆம் திகதி சுட்டுக் கொல்லப்பட்ட ஒசாமா பின் லேடனின் உடல் அமெரிக்க அரசு கூறியபடி கடலில் புதைக்கப்படவில்லை. மாறாக அந்த உடல் சிஐஏவின் விமானத்தில் அமெரிக்காவுக்குக் கொண்டு வரப்பட்டது. அந்த உடலை பரிசோதனை செய்ய சிஐஏ முடிவு செய்தது.

இதனால் முதலில் டெல்வேர் மாகாணத்தின் டோவர் நகருக்கு சிஐஏவின் விமானத்தில் அந்த உடல் கொண்டு வரப்பட்டது. பின்னர் மேரிலாண்டின் பெதெஸ்டா பகுதியில் உள்ள ராணுவத்தின் நோய் தடுப்பியல் ஆராய்ச்சி மையத்துக்குக் (Armed Forces Institute of Pathology) கொண்டு செல்லப்பட்டது என்று கூறியுள்ளார். அந்த உடல் இப்போதாவது புதைக்கப்பட்டுவிட்டதா அல்லது இன்னும் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை.

முன்னதாக ஒசாமாவின் உடலை இஸ்லாமிய முறைப்படி இறுதிச் சடங்குகள் செய்து அரபிக் கடலில் புதைத்தாக அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்திருந்தார். ஆனால், அது பொய் என்பது இப்போது உறுதியாகிவிட்டது. ஒசாமாவின் உடல் புதைக்கப்பட்ட இடம் தெரிந்தால் அதை தீவிரவாதிகள் னைவுச் சின்னமாக்கிவிடுவர் என்பதாலும், ஒசாமா இறந்தாலும் அவரது கொள்கைகளைப் பரப்ப அது ஒரு மையமாகமும் அடையாளமாகவும் ஆகிவிடும் என்பதாலும் ஒசாமாவை கடலில் புதைத்ததாக அமெரிக்கா சொல்லி வருவதாகத் தெரிகிறது.
Thursday, March 08, 2012 |
மேலும் »

பாகிஸ்தானை விட்டு போகும் பின்லேடன் குடும்பம்


ஒசாமா பின்லேடனின் மனைவிகள், குழந்தைகள் பாகிஸ்தானில் இருந்து வெளியேறி ஏமன், துபாய்க்கு செல்ல தயாராகி வருகின்றனர். அல்&கய்தா அமைப்பை சேர்ந்த சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடன், பாகிஸ்தானின் அபோட்டாபாத் பகுதியில் வசித்து வந்தார். இதை கண்டுபிடித்த அமெரிக்க படையினர், கடந்த ஆண்டு மே 2ம் தேதி திடீர் தாக்குதல் நடத்தி பின்லேடனை கொன்றனர். அவரது உடல்  கடலுக்கு அடியில் புதைக்கப்பட்டது.

தாக்குதலின்போது அவருடன் தங்கியிருந்த 5 மனைவிகள், குழந்தைகள், பேரக் குழந்தைகளை பாகிஸ்தான் போலீசிடம் அமெரிக்க வீரர்கள் ஒப்படைத்தனர். ரகசிய இடத்தில் அவர்களை தங்க வைத்து கடந்த சில மாதங்களாக தீவிர விசாரணை நடத்தப்பட்டது. 

பின்லேடன் குடும்பத்தினரிடம் விசாரணை முடிந்ததாக பாகிஸ்தான் போலீசார் தெரிவித்ததையடுத்து, ஏமன், துபாய்க்கு அவர்கள் ஓரிரு நாளில் புறப்படுவதாக பாகிஸ்தான் நாளேடு நேற்று செய்தி வெளியிட்டது. பின்லேடன் மனைவிகளில் சிலர் ஏமன் நாட்டை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் தாயகம் திரும்புகின்றனர். பின்லேடனுடன் ரகசிய வீட்டில் 5 ஆண்டுகள் வசித்த கடைசி மனைவி துபாயை சேர்ந்தவர். எனவே, அவர் துபாய் செல்வதாக நாளேடு தெரிவித்துள்ளது.
Wednesday, March 07, 2012 |
மேலும் »

புடின் பெற்றது திணிக்கப்பட்ட வெற்றி


ரஷ்ய அதிபர் தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. அதில் பதிவான ஓட்டு எண்ணிக்கை முடிவில் பிரதமர் விளாடிமிர் புடின் 63 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதையடுத்து, அவர் 3வது முறையாக ரஷ்ய அதிபராகிறார். கடந்த டிசம்பரில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் சொற்ப ஓட்டுகள் வித்தியாசத்தில் புடின் கட்சி வெற்றி பெற்றது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. தேர்தல் முறைகேடுகள் மூலம் வெற்றி பறிக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. புடினுக்கு எதிராக மாஸ்கோவில் பிரம்மாண்ட பேரணிகள் நடத்தப்பட்டன.

இந்த சூழ்நிலையில், அதிபர் தேர்தலை உன்னிப்பாக கவனிக்க ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்புக்கான அமைப்பின் சார்பில் சர்வதேச பார்வையாளர்கள் ரஷ்யா வந்திருந்தனர். அதிபர் தேர்தலை அவர்கள் கண்காணித்தனர். புடினுக்கு எதிராக அதிபர் தேர்தலில் போட்டியிட மிகைல் கோடர்காவ்ஸ்கி என்பவர் திட்டமிட்டிருந்தார். முன்னாள் எண்ணெய் வர்த்தக தொழிலதிபரான அவருக்கு ரஷ்யாவில் கடந்த சில ஆண்டுகளாக செல்வாக்கு அதிகரித்து வந்தது. பல்வேறு குற்றச்சாட்டுகள் அடிப்படையில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

அரசியல் கைதியான அவரது தண்டனையை மறுபரிசீலனை செய்வதாக தேர்தலுக்கு முன் அதிபர் மெத்ததேவ் உறுதி அளித்திருந்தார். எனவே, மிகைல் வெளியே வந்து போட்டியிடுவார் என்ற நம்பிக்கையில் விடுதலை கட்சியினர் புடினுக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தவில்லை. ஆனால், தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகும் மிகைலை ரஷ்ய அரசு விடுதலை செய்யவில்லை.

எனவே, எதிர்த்து போட்டியிட வலுவான தலைவர் இல்லாத நிலையில் புடினின் வெற்றி எளிதானதாக சர்வதேச பார்வையாளர்கள் புகார் கூறியுள்ளனர். இது மக்கள் மீது திணிக்கப்பட்ட வெற்றி என்று அவர்கள் வர்ணித்துள்ளனர். இதையடுத்து, ரஷ்யாவில் எதிர்க்கட்சிகள், புடின் எதிர்ப்பாளர்கள் மீண்டும் போராட்டத்தில் குதிக்கலாம் என்ற சூழ்நிலை நிலவுகிறது.
Tuesday, March 06, 2012 |
மேலும் »

3ஆவது முறையாக அதிபராகும் விளாடிமிர் புடின்


ரஷ்யாவில் மூன்றாவது முறையாக விளாடிமிர் புடின் அதிபராக தேர்வாகும் சூழல் உள்ளது. ரஷ்யாவில் நேற்று அதிபர் தேர்தல் நடந்தது. ஐக்கிய ரஷ்ய கட்சி சார்பில் பிரதமர் புடின் மூன்றாவது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிட்டுள்ளார். கடந்த 2000 முதல் 2008ம் ஆண்டு வரை இரண்டு முறை புடின் அதிபராக பதவி வகித்துள்ளார்.

மூன்றாவது முறை அவர் அதிபராக முடியாது என்பதால், தன் ஆதரவாளர் திமித்ரி மெத்வதேவை அதிபராக்கினார். இவர், பிரதமராக பொறுப்பு வகித்தார். மூன்றாவது முறை அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஏற்ப சட்டதிருத்தம் கொண்டு வந்தார். இதைத் தொடர்ந்து, நேற்று நடந்த அதிபர் தேர்தலில், புடின் போட்டியிட்டார். மாஸ்கோவில் மனைவி லுத்மிலாவுடன் வந்து அவர் ஓட்டுப் போட்டார். அப்போது, அவர் குறிப்பிடுகையில், "மக்கள் பொறுப்புடன் ஓட்டளிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. நிச்சயம் இத் தேர்தலில் வெற்றி பெறுவேன்' என்றார்.

ஏராளமான தில்லுமுல்லு: கடந்த டிசம்பர் மாதம் நடந்த ரஷ்ய பார்லிமென்ட் தேர்தலில், ஏராளமான தில்லு முல்லு நடந்ததால், எதிர்க்கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, நேற்றைய தேர்தலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஒரு லட்சம் வெப் கேமராக்கள் ஓட்டுச் சாவடிகளில் பொருத்தப்பட்டிருந்தன. பல்வேறு நாடுகளை சேர்ந்த, 250 பார்வையாளர்கள் நேற்றைய தேர்தலைக் கண்காணித்தனர். தற்போது, அதிபர் தேர்தலில் இவருக்கு எதிராகப் போட்டியிடும் நான்கு பேரில், மூன்று பேர் ஏற்கனவே இவரை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Monday, March 05, 2012 |
மேலும் »

ஈரான் மீது கடைசியாக போர் தொடுக்கப்படும் - ஒபாமா


ஈரான், அணு ஆயுதங்கள் குவிப்பதை நிறுத்தாவிட்டால், கடைசி அஸ்திரமாக அதன் மீது போர் தொடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். 

உலக அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் ஈரான் தொடர்ந்து அணு ஆயுதங்களை உற்பத்தி செய்வதாக அமெரிக்கா, ஐரோப்பா குற்றம் சாட்டி வருகின்றன. இதை ஈரான் பொருட்படுத்தவில்லை. இதையடுத்து, ஈரான் மீது பொருளாதார தடை விதித்ததுடன், உலக நாடுகள் ஈரானுடன் வர்த்தக தொடர்பு வைக்கக் கூடாது என்று அமெரிக்கா வலியுறுத்தியது. எனினும், இந்தியா, சீனா நாடுகள் ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்கி வருகின்றன. இந்நிலையில், வாஷிங்டனில் வெளியாகும் தி அட்லாண்டிக் பத்திரிகைக்கு அமெரிக்க அதிபர் 

ஒபாமா அளித்துள்ள பேட்டி வருமாறு: 
ஈரான் அணுஆயுதம் குவிப்பதை ஏற்று கொள்ள முடியாது. இந்த நடவடிக்கையை அந்நாடு கைவிட வேண்டும். பொருளாதார தடை, தூதரக நடவடிக்கை போன்றவற்றின் மூலம் ஈரானை நிர்ப்பந்திப்போம். ஆனாலும், வேறு எல்லா வாய்ப்புகளும் உள்ளன. ஈரானின் அணு ஆயுதங்களை அழிக்க, கடைசி அஸ்திரமாக போர் புரியவும் வாய்ப்பு உள்ளது. இதை ஈரான் புரிந்து கொள்ள வேண்டும். அதே போல், ஈரான் மீது போர் தொடுக்க இஸ்ரேல் அவசரப்படக் கூடாது என எச்சரித்து வருகிறோம். அப்படி இஸ்ரேல் அவசரமாக தாக்குதல் நடத்தினால், அது ஈரானுக்கு அனுதாபம் தேடி வந்து விடக் கூடும். இவ்வாறு ஒபாமா கூறியுள்ளார்.
Sunday, March 04, 2012 |
மேலும் »

நாட்களை எண்ணுகிறார் சிரியா அதிபர் - ஒபாமா



சிரியா அதிபரின் நாட்கள் எண்ணப் படுவதாக அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஒபாமா அளித்த பேட்டியில் கூறுகையில், சிரியாவில் கடந்த சில மாதங்களாக அதிபர் பஷார் அல்,ஆசாத்துக்கு எதிராக போராட்டம் நீடிக்கிறது. அவர் பதவி விலக மறுத்து வருகிறார். அவரை பதவியிலிருந்து அகற்றி விட்டு அமைதியான ஜனநாயக அடிப்படையில் புதிய அரசை அமைப்பது குறித்து உலக நாடுகளுடன் பேசி வருகிறேன். லிபியாவை போல சிரியா விவகாரத்தில் செயல்பட முடியவில்லை. சிரியாவுக்கு எதிராக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை சீனாவும் ரஷ்யாவும் தோற்கடித்து விட்டதுதான் காரணம். எனினும், அதிபரின் நாட்கள் எண்ணப்படுகின்றன என்றார்.
Saturday, March 03, 2012 |
மேலும் »

ஜெருசலேமில் இயேசுநாதரின் கல்லறை?


இஸ்ரேலில் உள்ள ஜெருசலேம் நகரில் ஒரு மிகப் பழமையான கல்லறையை அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர். இது கிபி முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று தெரிய வந்துள்ளது. இது இயேசுநாதர் உடல் அடக்கம் செய்யப்பட்ட கல்லறையாக இருக்கலாம் என்றும் அகழ்வாராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இயேசுநாதரின் உடல் இங்குதான் அடக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர்கள் உறுதியாக கூறுகின்றனர்.

ஒரு நவீன அடுக்குமாடி வளாகத்தின் அடியில் அமைந்திருக்கிறது இந்தக் கல்லறை, கி.பி. 70-ம் ஆண்டுக்கு முந்தையதாகக் கருதப்படுகிறது. இயேசு நாதரின் ஆரம்ப கால சீடர்கள் இதை அமைத்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. கல்லறையில் இருக்கும் சுண்ணாம்புக் கல்லால் ஆன பெட்டியில் "புனித ஜெகோவா விழித்தெழு' என்று கிரேக்க மொழியில் குறிப்பிடப்பட்டிருப்பதை ரிமோட் கன்ட்ரோல் கேமரா உதவியுடன் ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர்.

இதேபோன்ற மற்றொரு பெட்டியில் பெரிய மீனின் வாயில் மனிதன் சிக்கியிருப்பதைப் போன்ற உருவம் பொறிக்கப்பட்டிருக்கிறது. இது பைபிளில் கூறப்பட்டிருக்கும் ஜோனா என்கிற தேவதூதரின் கதையாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. ஜோனாவை விழுங்கிய பெரிய மீன் அல்லது திமிங்கலம், பிறகு அவரை விட்டுவிட்டதாக பைபிளில் கூறப்பட்டிருக்கிறது. மீனின் உருவத்தை கணினியின் உதவியுடன் பெரிதாக்கிப் பார்த்தபோது, அது ஜோனாவின் கதையைப் பிரதிபலிப்பதாக இருப்பது தெரியவந்தது.

கல்லறைப் பெட்டிகளில் செதுக்கப்பட்டிருக்கும் வாசகம், மீனின் உருவம் ஆகியவை "உயிர்த்தெழுதல்' என்கிற கிறிஸ்தவ நம்பிக்கையைக் காட்டும் வகையில் அமைந்திருப்பதாக "லைவ் சயின்ஸ்' பத்திரிகை குறிப்பிட்டிருக்கிறது. பெரும்பாலான கிறிஸ்தவர்களின் கல்லறைகளில் ஜோனாவின் கதை பொறிக்கப்படுவது வழக்கமானதுதான் என்றாலும், அவற்றில் எதுவும் முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்தவையல்ல.

முதலாம் நூற்றாண்டுக் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டிருப்பது பற்றிய தகவலை இணையதளத்தில் "பைபிளும் விளக்கமும்' என்கிற தலைப்பில் அகழ்வாராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். "இயேசுவின் கல்லறை' என்பது பற்றிய தங்களது விளக்கம் சர்ச்சைக்கு இடமாகக்கூடும் என்பதையும் அவர்கள் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.

இருப்பினும் இப்போது ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடும் இந்தக் கல்லறை 1981-ம் ஆண்டிலேயே கண்டுபிடிக்கப்பட்டதாகும். ஆனால், கல்லறைகளைத் தோண்டுவதை எதிர்க்கும் யூதக் குழுக்கள் அதை ஆய்வு செய்வதை எதிர்த்தனர். இதனால், ஆய்வாளர்கள் அந்த இடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். பின்னர் அந்தக் கல்லறை சீலிடப்பட்டு இப்போது இருக்கும் இடத்தில் புதைக்கப்பட்டது.

சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதைய அகழ்வாராய்ச்சிக் குழுவின் தலைவரான தபோரும் அவரைச் சேர்ந்தவர்களும் கல்லறையைத் தோண்டுயெடுப்பதற்கு அனுமதி பெற்றனர். யூத அமைப்புகளின் கடும் எதிர்ப்பையடுத்து, கல்லறையைத் தோண்டுவதற்குப் பதிலாக ரிமோட் கண்ட்ரோல் உதவியுடன் இயங்கும் இயந்திரக் கைகள் பொருத்தப்பட்ட கேமராக்களை துளைகள் வழியாக கல்லறைப் பகுதிக்குள் அனுப்பி ஆய்வு மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு இயேசு நாதர் வாழ்ந்த வீடு என்று கூறி ஒரு மிகப் பழமையான வீட்டை பெத்லகேமில் அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர் என்பது நினைவிருக்கலாம். தற்போது இயேசுநாதரின் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Friday, March 02, 2012 |
மேலும் »

பின்லேடன் இருந்த வீட்டில் பைபிள் கண்டுபிடிப்பு


பாகிஸ்தானில் ஒசாமா பின்லேடன் பதுங்கியிருந்த வீட்டில், 2 பைபிள் பிரதிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் பதுங்கி இருந்த அல் குவைதா தீவிரவாத தலைவர் ஒசாமா பின்லேடனை, கடந்த ஆண்டு மே மாதம் அமெரிக்க கடற்படையினர் சுட்டுக் கொன்றனர். அந்த வீட்டை பாகிஸ்தான் அதிகாரிகள் சில நாட்களுக்கு முன்பு இடித்து தள்ளினர். அப்போது, வீட்டில் இருந்த 2 பைபிள் பிரதிகளை கைப்பற்றி உள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

பின்லேடனை சுட்டுக் கொன்ற பின்னர், அந்த வீட்டில் இருந்த பொருட்கள் எல்லாவற்றையும் அப்புறப்படுத்தி விட்டோம். எனினும், வீட்டை இடிக்கும் போது மறைவிடத்தில் வைக்கப்பட்டிருந்த 2 பைபிள் பிரதிகளை கைப்பற்றினோம். அந்த பைபிள்கள் ஆங்கில மொழியில் உள்ளன. அந்த பைபிளில் சில பக்கங்கள் மடித்து வைக்கப்பட்டிருந்தன. மேலும், பைபிளில் பல வாசகங்கள் அடிகோடிட்டு இருந்தன என்றனர். பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐஎஸ்ஐ அதிகாரிகள் கூறுகையில், அடுத்த தாக்குதலின் போது அதற்கு நியாயம் சொல்ல பைபிளின் சில பகுதிகளை குறிப்பிட்டு வைத்துள்ளதாக தெரிகிறது. 

அந்த வாசகங்களை வைத்து, அல் குவைதாவின் திட்டம் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். இடிக்கப்பட்ட வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 ரேடியாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்றனர். பின்லேடன் தங்கியிருந்த வீடு இடிக்கப்பட்டதால், அந்த இடத்தில் மருத்துவமனை கட்ட அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு மதவாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அந்த இடத்தில் மசூதி அல்லது மதரசா பள்ளிகள் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
  
Thursday, March 01, 2012 |
மேலும் »

ஆண்கள் கழிவறைக்குள் பெண்கள் போராட்டம்


சீனாவில் பெண்களுக்கான கழிவறைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க கோரி, ஆண்களின் கழிவறைகளை பயன்படுத்தும் போராட்டத்தில் பெண்கள் ஈடுபட்டுள்ளனர். உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவில் பெண்களுக்கான கழிவறைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இதனால் பொது கழிவறைகளில் பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால் நாட்டில் பெண்களுக்கான கழிவறைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க கோரி, ஆண்களின் கழிவறைகளை பெண்கள் பயன்படுத்த துவங்கி உள்ளனர். இதற்காக ஆண்கள் கழிவறைகளின் முன் போராட்ட பேனர்களை கட்டிவிட்டு, அவற்றை பெண்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

போராட்ட பேனர்களில், பெண்களுக்கு அதிக வசதிகள் தேவை. அவளை நேசிப்பதாக இருந்தால், அவளை காக்க வைக்காதே போன்ற வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது. இது குறித்து கல்லூரி மாணவிகள் சிலர் கூறியதாவது, நாட்டில் உள்ள ஆண்கள் கழிவறைகளின் எண்ணிக்கையை காட்டிலும் பெண்களின் கழிவறைகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதனால் ஆண்கள் கழிவறைகளில் செலவிடும் நேரத்தை காட்டிலும், பெண்கள் 2 அல்லது 3 மடங்கு நேரம் அதிகம் செலவிட வேண்டியுள்ளது. இயற்கை உபாதைகளை அடக்கி வைப்பது ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு மிக கடினம். பெண்களின் கழிவறைகளுக்காக காத்திருப்பதை காட்டிலும், ஆண்களின் கழிவறைகளை பயன்படுத்துவதால் நேரம் வீணாவதை தவிர்க்க முடிகின்றது என்றனர். 

கடந்த 19ஆம் திகதி முதல் இப்போராட்டம் நடைபெற்று வருகின்றது. இதனையடுத்து தற்போது குவான்ஷு நகரில் பெண்களுக்கு கூடுதல் கழிவறைகளை கட்டப்பட்டு வருகின்றது. குவான்ஷு நகரில் கல்லூரிகளில் உள்ள பெண்கள் கழிவறைகள் ஏற்கனவே விரிவுப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு நாட்டிலும் ஒரு பிரச்சினை.
Thursday, March 01, 2012 |
மேலும் »

பாகிஸ்தானுக்கு பின்லேடன் பற்றி தெரியும் - விக்கிலீக்ஸ்


பாகிஸ்தானில் அபோதாபாத் நகரில் பதுங்கியிருந்த பின்லேடன் கடந்த ஆண்டு மே மாதம் அமெரிக்க படையி னரால் சுட்டுக் கொல்லப்பட்டான். இந்த சம்பவம் நடந்த ஓரிரு நாளில் ஸ்ட்ராட்பர் என்ற புலனாய்வு நிறுவனத்தின் துணைத் தலைவர் பிரட் பர்டன் என்பவர், அதே நிறுவனத்தின் தெற்கு ஆசிய பிராந்திய இயக்குநருக்கு ஒரு இ,மெயில் அனுப்பி உள்ளார். 

அதில், பாகிஸ்தானின் ராணுவம் மற்றும் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உயர் அதிகாரிகள்தான், ஒசாமா தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். குறிப்பாக ஓய்வுபெற்ற மேஜர் ஒருவர், ஒசாமாவுடன் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசி உள்ளார் என அந்த இ,மெயிலில் கூறியிருந்ததாக விக்கிலீக்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
Wednesday, February 29, 2012 |
மேலும் »

ரஷ்ய பிரதமரை கொல்ல தீவிரவாதிகள் சதித்திட்டம்


ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடினை கொல்ல செசன்ய தீவிரவாதிகள் சதிதிட்டம் தீட்டியது கண்டுபிடிக்கப்பட்டது. 2 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். ரஷ்யாவில் வரும் மார்ச் 4ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போது பிரதமராக உள்ள விளாடிமிர் புடின், இந்த தேர்தலில் போட்டியிடுகிறார். இந்நிலையில், உக்ரைன் நாட்டில் துறைமுக நகரமான ஒடேசாவில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் குண்டு வெடித்தது. இதில், ஒருவர் உயிரிழந்தார். அங்கிருந்த மற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். மூவரும் தீவிரவாதிகள் என்பதும், அவர்கள் வெடிகுண்டு தயாரிக்கும் போது தவறுதலாக குண்டு வெடித்து விட்டது என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

கைதானவர்களில் மட்யேவ் என்பவன் ரஷ்யாவை சேர்ந்தவன். இன்னொருவன் பியான்சின். இருவரும் துருக்கியில் இருந்து அரபு எமிரேட் நாடு வழியாக உக்ரைன் வந்ததாக கூறினர். மேலும், ரஷ்யாவை சேர்ந்த செசன்யா தீவிரவாதி டோக்கு உமரோவ் உத்தரவுப்படி, பிரதமர் புடினை கொலை செய்ய சதி திட்டம் வகுத்து வந்ததாகவும் கூறியுள்ளனர். இந்த 2 தீவிரவாதிகளும் தற்கொலை படையாக உருவெடுத்து, ரஷ்யாவில் அதிபர் தேர்தல் முடிந்ததும் புடினை கொல்ல திட்டமிட்டிருக்கின்றனர்.

இதையடுத்து, ரஷ்ய உளவு படையிடம் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. இந்த செய்தியை ரஷ்யாவில் ‘சேனல் ஒன்’ என்ற டி.வி. நேற்று வெளியிட்டது. இதனால், ரஷ்யாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எனினும், இது தேர்தலில் வெற்றி பெறுவதற்காக நடத்தப்படும் நாடகம் என்று எதிர்க்கட்சியினர் வர்ணித்துள்ளனர்.
Tuesday, February 28, 2012 |
மேலும் »

பாகிஸ்தானில் பின்லேடன் வசித்த கட்டிடம் இடிப்பு


பாகிஸ்தானில் அல்கய்தா தலைவன் ஒசாமா பின்லேடன் பதுங்கியிருந்த 3 மாடி கட்டிடம் நேற்று முன் தினம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்கு மூளையாக இருந்த பின்லேடனை அமெரிக்க படை வலைவீசி தேடியது. அவன் பாகிஸ்தானின் அபோதாபாத் பகுதியில் பதுங்கியிருப்பதை அமெரிக்க உளவு படை கண்டுபிடித்தது. இதையடுத்து, கடந்த ஆண்டு மே 2ம் தேதி பின்லேடன் பதுங்கியிருந்த 3 மாடி கட்டிடத்தை சுற்றி வளைத்த அமெரிக்க படையினர், அவரை சுட்டுக் கொன்றனர். பின்னர், அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்ட பின்லேடன் உடலை கடலில் புதைத்ததாக அமெரிக்கா தெரிவித்தது.

பின்லேடன் கொலைக்குப் பின்பு, அவன் வசித்த கட்டிடத்தை ஏராளாமானோர் சென்று பார்வையிட்டனர். அங்கு தீவிரவாத இயக்கத்தினர் நினைவு சின்னம் அமைத்து விடும் வாய்ப்புள்ளதால், அதை இடிக்க வேண்டும் என்று பாகிஸ்தானை அமெரிக்கா வற்புறுத்தி வந்தது. இதனால், 3,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள அந்ந கட்டிடம் இடிக்கப்பட்டது. அங்கு எந்த அசம்பாவிதம் நடக்காத வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
Monday, February 27, 2012 |
மேலும் »

ஈரானைத் தாக்க அமெரிக்க படைகள் தயார்


பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ள ஈரான், அந்தக் கடுப்பில், ஹோர்முஸ் நீரிணையை மூட எத்தனித்தால், அதைத் தடுக்கும் விதத்தில், அமெரிக்கா தனது தரை மற்றும் கடற்படைகளை அப்பகுதியில் அதிகமாகக் குவிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது.

எண்ணெய் நிறுத்தம்:
ஈரானின் அணுசக்தி திட்டங்கள் மீது, அமெரிக்கா மற்றும் மேற்குலகம் சந்தேகம் கொண்டுள்ளன. அதனால், அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதிக்கு, ஐரோப்பிய யூனியன் தடை விதித்துள்ளது. ஈரானும், பிரான்ஸ் மற்றும் பிரிட்டனுக்கு எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்தி வைத்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணை விவகாரம்:
தன் மீது மேலும் மேலும் நெருக்கடி அதிகரிக்கும் பட்சத்தில், உலகின் 20 சதவீத எண்ணெய் போக்குவரத்து நடக்கும் ஹோர்முஸ் நீரிணையை மூடி விட நேரிடும் என, ஈரான் ஏற்கனவே எச்சரித்துள்ளது. அது நிகழ்ந்தால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும்.

படைக் குவிப்பில் அமெரிக்கா:
ஈரான், ஹோர்முஸ் நீரிணையை மூடுவதைத் தடுப்பதற்காக, அந்நாட்டை மிரட்டும் வகையில், அப்பகுதியில் அமெரிக்கா, தனது தரை மற்றும் கடற்படைகளைக் குவிப்பதிலும், வியூகங்கள் வகுப்பதிலும் தீவிரம் காட்டி வருவதாக அமெரிக்காவில் இருந்து வெளியாகும் "வால்ஸ்ட்ரீட் ஜர்னல்' தெரிவித்துள்ளது.

போர்க் கப்பல்கள் தயார்:
அதன்படி, பெர்ஷிய வளைகுடாவில் நிறுத்தப்பட்டிருக்கும் அமெரிக்கப் போர்க் கப்பல்களில் உள்ள ஆயுதங்கள், நவீனப்படுத்தப்பட்டு வருகின்றன. கரையில் உள்ள இலக்குகளைத் தாக்கும் ஏவுகணைகள், பூமிக்கு அடியில் உள்ள சுரங்கங்களைக் கண்காணிக்கும் நவீன கருவிகள் பொருத்தப்பட்டு வருகின்றன.

சிறப்புப் பயிற்சிகள்:
ஹோர்முஸ் நீரிணையைச் சுற்றிலும் அமெரிக்க ராணுவம், தனது கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது. அதோடு, ஐக்கிய அரபு நாடுகளில், அமெரிக்காவின் சிறப்பு அதிரடிப் படைக் குழுக்கள் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆபத்துக்கு உதவுவதற்காக, ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் பஹ்ரைன் படைகளுக்கு, இந்த சிறப்பு குழுக்கள் பயிற்சி அளித்து வருகின்றன.ஹோர்முஸ் நீரிணையில், ஈரானின் அதிவேக தாக்குதல் படகுகள் சுற்றி வருவதால், அவற்றைத் தாக்கும் விதத்தில், அமெரிக்க போர்க் கப்பல்களில் ஆயுதங்கள் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன.

உளவு நிறுவனங்களின்தகவல்கள்:
இதற்கிடையில், ஐ.நா.,வின் சர்வதேச அணுசக்தி ஏஜென்சியின் பிரதிநிதிகள் குழு, ஈரானின் அணுசக்தி திட்டங்கள் குறித்து, இரு முறை ஆய்வுகள் நடத்திய பின், வெளியிட்ட அறிக்கைகளுக்கு மாறாக, அமெரிக்க உளவு நிறுவனங்கள் வேறு விதமான தகவல்களை அளித்துள்ளன.அவற்றின்படி, அணு ஆயுதங்கள் தயாரிப்பை ஈரான் கைவிட்டு விட்டது. அணு ஆயுதத் தயாரிப்பிற்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. அதேநேரம், யுரேனியம் செறிவூட்டலை ஈரான் அதிகரித்திருப்பதில், அமெரிக்க, இஸ்ரேலிய மற்றும் ஐரோப்பிய உளவு நிறுவனங்களுக்கு இடையில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.ஆனால், யுரேனியச் செறிவூட்டலை அதிகரித்த கையோடு, அணு ஆயுதத் தயாரிப்பை மேற்கொள்வது குறித்து, ஈரான் இன்னும் முடிவெடுக்கவில்லை எனவும், அண்டை நாடுகளை ஒருவித பீதியிலேயே வைத்திருப்பதற்காக ஈரான் இதுபோன்ற தகவல்களைக் கசிய விடுவதாக, அமெரிக்க உளவு நிறுவனங்கள் கருதுகின்றன.

ஐ.ஏ.இ.ஏ., அறிக்கை என்ன சொல்கிறது?
ஈரானின் அணுசக்தி திட்டங்கள் மற்றும் அவற்றின் ராணுவ ரீதியிலான பரிமாணங்கள் குறித்து இதுவரை சர்வதேச அணுசக்தி ஏஜென்சி (ஐ.ஏ.இ.ஏ.,) பிரதிநிதிகள் குழு இரு முறை ஈரானில் ஆய்வுகள் மேற்கொண்டது.இரு முறையும், கோம் நகரின் போர்டோ பகுதியில் உள்ள அணுசக்தி நிலையத்திற்குள் சென்று ஆய்வு மேற்கொள்ள ஈரான் அக்குழுவை அனுமதிக்கவில்லை என ஐ.ஏ.இ.ஏ., குற்றம்சாட்டியுள்ளது. அங்கு தான் அணு ஆயுதத் தயாரிப்பிற்கான சில குண்டுவெடிப்புகள் நடந்ததாக ஐ.ஏ.இ.ஏ., ஏற்கனவே கூறியிருந்தது.

இந்த இரு ஆய்வுகள் குறித்து, ஐ.ஏ.இ.ஏ., வெளியிட்ட 11 பக்க அறிக்கையின் சாராம்சம்:
*அணுசக்தி திட்டங்களின் ராணுவப் பரிமாணங்கள் குறித்து ஏஜென்சி கவலை கொண்டிருக்கிறது.
*போர்டோ அணுசக்தி நிலையத்தில் உள்ள 696 மையவிலக்கு விசை கருவிகள் மூலம், 20 சதவீத யுரேனியச் செறிவூட்டலை ஈரான் மும்மடங்கு அதிகரித்துள்ளது.

*அதேநேரம் அணு ஆயுதத் தயாரிப்பிற்கு உதவும் வகையில், 90 சதவீதம் வரை யுரேனியத்தை ஈரான் செறிவூட்டி வருகிறது.

*கடந்த ஆண்டு ஆகஸ்டில் மேற்கொண்ட ஆய்வின்படி, 19.8 கிலோ யுரேனியம், டெஹ்ரானின் ஜாபர் இபின் ஹயான் ஆய்வகத்தில் இருந்தது. ஆனால் அதை விடக் குறைவான யுரேனியம் தான் கணக்கில் காட்டப்பட்டிருந்தது. இதை வைத்து அணு ஆயுதம் தயாரிக்க முடியாது என்றாலும், இவை ஆயுதப் பரிசோதனைகளுக்குப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது. இந்த முரண்பாடுகள் குறித்து ஈரான் விளக்கம் அளிக்கவில்லை.

*1995 - 2002 காலகட்டத்தில் யுரேனிய செறிவூட்டலில் இந்த ஆய்வகத்தில் பணியாற்றிய ஊழியர்கள் பற்றிய விவரங்களை ஈரான் தரவில்லை.
Sunday, February 26, 2012 |
மேலும் »

சிகிச்சைக்காக வெனிசுலா அதிபர் கியூபா பயணம்


வெனிசுலா அதிபர் ஹிகோ சாவெஸ், புற்றுநோய் கட்டியை அகற்றும் ஆபரேஷன் செய்து கொள்ள கியூபா புறப்பட்டு சென்றார். வெனிசுலா அதிபர் ஹிகோ சாவெஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த 13 ஆண்டுகளாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். 57 வயதாகும் சாவெஸ், கடந்த ஆண்டு புற்றுநோய்க்கு கியூபாவில் சிகிச்சை பெற்றார். அப்போது பேஸ்பால் அளவுக்கு இருந்த புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது. இப்போது மீண்டும் புற்றுநோய்க்கு ஆபரேஷன் செய்து கொள்ள நேற்று கியூபா புறப்பட்டு சென்றார். 

கடந்த முறை போல் இல்லாமல், இந்த முறை 2 சென்டிமீட்டர் அளவுக்குதான் கட்டி உள்ளது என்று டாக்டர்கள் கூறுகின்றனர். கியூயா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ அவரது தம்பியும் தற்போதைய அதிபருமான ரவுல் காஸ்ட்ரோவுடன், வெனிசுலா அதிபருக்கு நல்ல நட்புறவு உள்ளது. அதனால் கியூபாவில் சிகிச்சை பெற்று வருகிறார். கியூபா புறப்படும் முன்பு அதிபர் மாளிகையில் உரை நிகழ்த்தினார் சாவெஸ். அப்போது, பிரச்னை இல்லாத மனிதர்கள் இல்லை. 

நானும் பிரச்னைகளுடன் வாழ்ந்து வருகிறேன். புற்றுநோய் இருந்தாலும், இல்லாவிட்டாலும்.. மழை, இடி, மின்னல் வந்தாலும், அக்டோபர் 7ம் தேதி வெற்றியை யாரும் தடுக்க முடியாது என்று பேசினார். அதை கேட்டு அங்கிருந்தவர்கள், வாழ்க அதிபர் என்று உற்சாகமாக ஆரவாரம் செய்தனர். பின்னர் அதிபர் மாளிகையில் இருந்து விமான நிலையத்துக்கு புறப்பட்டு சென்றார். அவரை ஏராளமான பொதுமக்கள் வாழ்த்து வழியனுப்பினர்.
Saturday, February 25, 2012 |
மேலும் »

சாக்லேட் சாப்பிட்டதற்கு பரிகாரம் ஒரு உயிரா?


சாக்லேட் சாப்பிட்டதற்காக 9 வயது சிறுமியை தண்டிக்க அவரை 3 மணி நேரம் நிற்காமல் ஓடும்படி செய்து ள்ளனர். இதனால் நா வறண்டு மயங்கிய சிறுமி பரிதாபமாக உயிர் இழந்தார்.

அமெரிக்காவின் அலபாமா பகுதியைச் சேர்ந்த சிறுமி சவன்னா ஹார்டின் (வயது 9). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வந்தாள். அவளது மாற்று தாய் ஜெசிகா மே ஹார்டின் (வயது 27), பாட்டி ஜாய்ஸ் ஹார்டின் காரட் (வயது 47). கடந்த வெள்ளிக்கிழமை சவன்னா சாக்லேட் சாப்பிட்டுவிட்டு பாட்டியிடம் இல்லை என்று பொய் சொல்லியிருக்கிறாள். இதனால் ஆத்திரமடைந்த ஜெசிகாவும், ஜாய்ஸும் சவன்னாவை 3 மணிநேரம் நிற்காமல் ஓடச் செய்துள்ளனர்.

ஓடிக் கலைத்த சிறுமி இறுதியில் மயங்கி விழுந்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் கடந்த திங்கட்கிழமை சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் ஜெசிகா மற்றும் ஜாய்ஸை கைது செய்தனர். சவன்னாவை மிரட்டி ஓடச் செய்தார்களா, அல்லது அடித்து ஓட விட்டார்களா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Friday, February 24, 2012 |
மேலும் »

அமெரிக்காவில் இரு உலங்கு வானூர்திகள் மோதல்


அமெரிக்காவின் அரிசோனாவில் புதன் இரவு இரு உலங்கு வானூர்தி கள் மோதிய விபத்தில் ஏழு அமெரிக்க கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. கடற்படையின் பறக்கும் பிரிவைச் சேர்ந்த கோப்ரா மற்றும் ஹ்யூ ரக உலங்கு வானூர்திகள் ஜுமா நகரின் அருகில் இராணுவப் பயிற்சியை மேற்கொண்டிருந்த வேளை இந்த அனர்த்தம் நடந்ததாக அமெரிக்கக் கடற்படை தெரிவித்தது.

இவ்விபத்து ஜுமா பயிற்சி வளாகத்திலிருந்து தொலைதூரத்தில் நடந்துள்ள அதேவேளை விபத்து எவ்வாறு நடந்தது என்பது குறித்து விசாரணை பல வழிகளில் இடம்பெறுகிறது. கடந்த செப்டெம்பரில் கலிபோர்னியாவில் ஓர் உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளானதில் இரு கடற்படையினர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 
Friday, February 24, 2012 |
மேலும் »
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452