Published On: Thursday, March 01, 2012
கூடங்குளம் விவகாரத்தில் 12 கோடி சப்ளை அம்பலம்

(இந்தியாவிலிருந்து சாஹுல் ஹமீது)
நாகர்கோவில் லாட்ஜில் தங்கி இருந்த ஜெர்மன் ஆசாமி ஹெர்மன் ரூ.12 கோடி வரை தொண்டு நிறுவனங்களுக்கு பணம் சப்ளை செய்தது அம்பலமாகியுள்ளது. இதையடுத்து கூடங்குளம் விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க கூடாது என்பதை வலியுறுத்தி கடந்த 7 மாதமாக தொடர் போராட்டம் நடந்து வருகிறது. போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமாருக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வருவதாக காங்கிரசார் குற்றம் சாட்டி வந்தனர். பிரதமர் மன்மோகன்சிங், மத்திய அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் தவறான தகவல்களை பரப்பி வருவதாக கூறி, உதயகுமார் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதற்கிடையே கூடங்குளம் போராட்டத்துக்கு உதவியதாக தொண்டு நிறுவனங்கள் மீதும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நாகர்கோவில் லாட்ஜில் தங்கி இருந்த ஜெர்மன் ஆசாமி சன்டெக் ரெய்னர் ஹெர்மனை கடந்த 26ம் தேதி மத்திய உளவு பிரிவு போலீசார், கியூ பிரிவு போலீசார் பிடித்து சென்னைக்கு அழைத்து சென்றனர். கூடங்குளம் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை தலைவர் லால்மோகன் ஆகியோருடன் இவருக்கு தொடர்பு இருந்ததாகவும், இதற்கான ஆதாரங்கள் இவரின் லேப்டாப், செல்போனில் இருப்பதாகவும் கூறினர். பின்னர் அவரை ஜெர்மனிக்கே திருப்பி அனுப்பினர்.
இதுகுறித்து உளவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஹெர்மனிடம் பறிமுதல் செய்யப்பட்ட லேப்டாப், மொபைல் போனை ஆய்வு செய்தோம். கூடங்குளம் தொடர்பான சில வரைபடங்கள் லேப்டாப்பில் இருந்தன. மேலும் நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள சில தொண்டு நிறுவனங்களுக்கு ரூ.12 கோடி அளவிலான பணபரிவர்த்தனை செய்ததற்கான ஆதாரங்களும் கிடைத்திருக்கின்றன.
கூடங்குளம் போராட் டம் தொடங்கிய 4 மாதங்களில் ரூ.4 கோடி பணபரிவர்த்தனை நடந்திருக்கிறது. இந்த காலக்கட்டத்தில் 12 முறை ஹெர்மன், நாகர்கோவிலுக்கு வந்து சென்றுள்ளார். இந்த ரூ.12 கோடி பணபரிவர்த்தனை கடந்த 6 வருடங்களுக்குள் நிகழ்ந்ததாகவும் அதற்கான ஆதாரங்கள் அதில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பணப்பரிவர்த்தனை அனைத்தும் பினாமி பெயர்களில்தான் வந்திருக்கின்றன. ஹெர்மன் அமெரிக்காவின் உளவாளியாக இருக்கலாம் என்ற சந்தேகமும் தற்போது எழுந்துள்ளது. இதன் அடிப்படையில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது இவ்வாறு அவர் கூறினார்.