Published On: Saturday, December 31, 2011
(எம்.ஐ.எம்.அஸ்ஹர், எஸ்.எம்.அறூஸ்)
கல்முனை இறைவெளி கண்டத்திலுள்ள 'கிறீன் பீல்ட்' வீட்டுத்திட்டத்தில் றோயல் வித்தியாலயம் என்ற பெயரில் புதிய பாடசாலையொன்று கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கிறீன் பீல்ட் வீட்டுத்திட்டத்திற்கான பெயர்பலகையை திரைநீக்கம் செய்த பின்னர் புதிய பாடசாலையை உத்தியோக புர்வமாக திறந்து வைத்தார்.
பிரதம அதிதியாக வருகை தந்த இவ்வித்தியாலயத்தின் காரணகர்த்தா பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ், கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ. தௌபீக், பாடசாலை அதிபர்கள், கல்முனை கிறீன் பீல்ட் கூட்டு ஆதன முகாமைத்துவ சபையின் தலைவர் கே. பசீர், உட்பட அதிதிகள் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டனர். பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் நாடாவினை வெட்டி படசாலையினை திறந்து வைத்தார்.
சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு தற்போது 7 ஆண்டுகள் நிறைவுபெறும் இக்காலப் பகுதியில் இப்பாடசாலை திறந்து வைக்கப்படுவதன் மூலம் இங்கு வாழும் சுமார் 3,000 மக்களின் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் நன்மையடையவுள்ளனர். இந்நிகழ்வில் கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.தௌபீக், பிரதி கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.எம். ஜலீல், கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பாடசாலை அதிபர்கள் கலந்து கொண்டனர்.