Published On: Sunday, March 04, 2012
மன்னார் நகர மையத்தில் அமைந்திருந்த தினச்சந்தை கட்டிடம் எரியுண்ட சம்பவம் குறித்து ஏற்பட்ட பதற்றம் தணிக்கப்பட்டு மன்னார் வழமை நிலைக்கு திரும்பியுள்ளது. வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாருக் தலைமையில் மன்னார் அரசாங்க அதிபர் பணிமனையில் இடம்பெற்ற உயர்மட்ட அதிகாரிகளின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தையடுத்து பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் சில நிவாரணங்களை வழங்குவதென இக்கூட்டத்தின் போது முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.
எரிந்து சாம்பரான கடைகளை தற்காலிகமாக நிர்மாணித்துக் கொள்ளும் வகையில் மன்னார் நகர சபை ஒவ்வொருவருக்கும் தலா 25 ஆயிரம் ரூபா வீதம் வழங்குவதென்றும் அதற்கு மேலதிகமாக பாதிக்கப்பட்ட வர்த்தகர்களின் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள கடனடிப்படையில் தலா 2 இலட்சம் ரூபாவினை பெற்றுக் கொடுத்தல் என்றும் இக்கடை பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து நிரந்தர பிரச்சினைக்கான தீர்வை வழங்கும் வகையில் அரசாங்க அதிபர் தலைமையில் பல்துறை சார்ந்தவர்களை கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டதுடன், இரு மாதங்களுக்குள் அவர்கள் அறிக்கைகளை சமர்ப்பிப்பது என்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
இந்த தீ விபத்தினால் சுமார் 3 கோடி ரூபர வரை சேதம் ஏற்பட்டிருக்கலாம் எனவும் 35 வர்த்தக நிலையங்கள் முழுமையாக தீயில் எரிந்துள்ளதாகவும் இதன் கூலம் சுமார் 350 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எடுத்துரைத்துள்ளார். வெள்ளிக்கிழமை கொழும்பிலிருந்து அரச இரசாயன பகுப்பாய்வு அதிகாரிகள் மன்னாரை வந்தடைந்துள்ளதுடன், விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மன்னார் பொலீஸார் தெரிவித்தனர்.
மன்னார் நகரில் ஏற்பட்ட அசம்பாவித சம்பவத்தால் வழமையான நிலைய பாதிக்கப்பட்டிருந்த போதும் வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன் வடமாகாண ஆளுநர் சந்திரசிறி ஆகியோர் எடுத்துக் கொண்ட முயற்சியினாலும் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் ஸ்தலத்திற்கு விஜயம் செய்து பாதிக்கப்பட்டவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளினையடுத்து அசம்பாவித சம்பவங்கள் தடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் உதவி அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், வடமாகாண உள்ளுராட்சி ஆணையாளர், மன்னார் மாவட்ட உதவி உள்ளுராட்சி ஆணையாளர் பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகள், மன்னார் நகர சபை தலைவர் ஞானப்பிரகாசம், உறுப்பினர்கள், வடமாகாண ஆளுநரின் ஆணையாளர் எஸ்.எல்.டீன், வர்த்தக சங்கப் பிரதிநிதிகளும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.