(உலகத்திற்கு சாரணிய இயக்கத்தை தோற்றுவித் பேடன் பவளின் பிறந்த தினத்தைக் குறிக்கும் முகமாக அனுஸ்டிக்கப்படும் இத்தினமே பேடன் பவள் தினமாகும். இன்று பெப்ரவரி 22 பேடன் பவள் தினமாகும்)
எஸ். எல். மன்சூர் (கல்விமானி)
“நாட்டுப்பற்றும், எப்போதும் பிறருக்கு உதவுவதுமே என் மூச்சு” எனும் தாரகை மந்திரத்தை உலகுக்கு எடுத்துக்காட்டிய பெரியார் றொபட் ஸ்டீவன்சன் ஸ்மித் பேடன் பவல் பிரபு ஆவார். உலக சாரணீயத்தின் தந்தை என வர்ணிக்கப்படுகின்ற பேடன் பவல்; மனித சமூகத்தின்; மேம்பாட்டிற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்த தலைமகன் 1857 பெப்ரவரி 22 ஆம் திகதி பிறந்த தினமே பேடன் பவல் தினம் அல்லது ஸ்தாபகர் தினமாகும். இங்கிலாந்தில் பிறந்து தனது 19ஆம் வயதில் இராணுவச் சிப்பாயாக பயிற்சி பெற்றதன் பின் இந்தியா மற்றும் ஆபிரிக்கா நாடுகளுக்கு சென்ற வேளைகளில் தான் நேரில் கண்ணுற்ற பல்வேறு மனித இம்சைகளையும், அமைதியற்ற வாழ்வின் விழிம்பில் ஏங்கித் தவித்த மனித அவலங்களையும் பவல் அவர்கள் கண்டு கொண்டதன் பின்னர் மீண்டும் இங்கிலாந்து வந்து இதற்கு விடிவுகாணும் நோக்குடன் 1907 ஆம் ஆண்டில் பிறவுன்ஸி தீவில் 20 மாணவர்களுடன் சிந்தித்ததன் வெளிப்பாடு சாரணிய முதல் ஒன்று கூடலாக மலர்ந்தது. இந்த மலர்வுக்கு காரணமாக இருந்த வெளிப்பாடுகள் உலகமே மூக்கில் விரல்வைக்கும் அளவுக்கு கொண்டுவரக் காரணமாக அமைந்திருந்தவை, ஒரு தனிமனிதன் மதம் கலாச்சாரத்திற்கு அப்பால் ஒரு புதிய சமூகத்தையே வெளிக்கொணர வைத்தத்தற்கு தன்னலமற்ற தியாக உணர்வும், மனித கௌரவத்தினை மதிக்கின்ற பண்பினையும் கொண்டதன் விளைவுகளேயாகும்.

இன்றைய காலகட்டங்களில ஐக்கிய நாடுகளில் அங்கம் வகிக்கும் நாடுகளைவிடவும் அதிகமான நாடுகளுள் சாரணர் இயக்கம் வளர்ச்சியடைந்துள்ளது. 216நாடுகளில் சுமார் 40மில்லியன் சாரணர்களுள் ஆசிய, பசுபிக் பிராந்திய நாடுகளில் சுமார் 18.2பில்லியன் சாரணர்கள் இணைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. இவ்வாறு உள்வாங்கப் பட்டதன் மாயசக்தி பேடன் பவலினது மனிதனை மனிதனாக மதிக்கின்ற சாரணியத் தோற்றுவாய் மிகவும் நேயமுடையதாய் காணப்பட்டதேயாகும். மேலும், பவலின் தூர நோக்குச் சிந்தனை, மனிதர்களிடையே இன்று தேடிக்கொண்டிருக்கும் அமைதி, சாந்தம், ஒற்றுமை, கடமையுணர்வு, பொறுமை, நன்றியுணர்வு, நற்பண்பு, பிறருக்காக வாழ்தல், தலைமைத்துவப் பண்பு, சமயப்பற்று, மனித கௌரவத்திற்கு மதிப்பளித்தல் போன்ற பல விடயங்கள் இந்தச் சாரணியத்தில் தாராளமாகவே குடிகொண்டிருப்பதும் முக்கியமாகும்.
இதன் செயற்பாடுகள் உலகளவில் மாபெரும் ஒன்று கூடல்களாக ஐம்போரி என்கிற பேரில் சாரணகள் ஒன்றிணைக்கப்பட்டு வருகின்றார்கள். இந்த ஒழுங்குமுறையில் தேசிய, பிராந்திய, உலகளாவிய ரீதியில் வருடங்கள் தோறும் இந்த ஜம்போரி நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் முதலாவது ஜம்போரி 1920ல் இங்கிலாந்திலும், 1924ல் டென்மார்க்கிலும், 1929ல் மீண்டும் இங்கிலாந்திலும், 1933ல் ஹங்கேரியிலும், 1939இல் 5ஆவது ஜம்போரி ஹொலாந்திலும் நடைபெற்றன. தொடர்ந்து 1947இல் பிரான்சிலும், 1951இல் அவுஸ்திரேலியாவிலும் நடைபெற்றதுடன் 21ஆவது உலக சாரணிய ஜம்போரி இங்கிலாந்தில் 2007ஆம் ஆண்டில் 147 நாடுகளிலிருந்து சுமார் 24000 க்கும் மேற்பட்ட சாரணியர்கள் ஒன்று சேர்ந்தனர். 22வது ஒன்றுகூடல் 2011ல் சுவீடனிலும், 23வது உலக ஜம்போரியானது எதிர்வரும் 2015ஆம் ஆண்டில் ஜப்பானிலும், தொடர்ந்து 2019இல் சிங்கப்பூரிலும் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளுடன் வியாபித்துள்ள பரந்துபட்ட மாபெரும் இயக்கமாக இந்த சாரணர் இயக்கம் வளர்வதற்கு பேடன்பவளினது அயராத முயற்சிதான் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துக்கும் இடமிருக்காது.

இவ்வாறு பரந்தொரு இயக்கத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டபலர் உயர் பதவிகளிலும் தளைத்தோங்கி வரலாறு படைத்துள்ளார்கள். அவர்களில் முதலாவதாக சந்திரனில் கால்வைத்த நீல் ஆம்ஸ்ரோங் உட்பட இற்றைவரை நூற்றுக்கும் மேற்பட்ட விண்வெளிவீரர்களும் சாரணர்களாகவே இருக்கின்றனர். இன்றைய மைக்றோசொப் ஜம்பவான் பில்கேட்ஸ்உம் ஒரு சாரணனே என்று கூறுவதில் சாரணியத்திற்குப் பெருமையல்லவா.
சாரணியம் அன்றிலிருந்து மாணவர்களின் இணைப்பாடவிதானத்தில் முக்கியத்துவம் பெற்று வருவதனால்தான் நாட்டின் ஜனாதிபதி தொடக்கம் பள்ளி மாணவன்; வரையிலும் அதன் தாக்கம் காணப்படுகிறது. கல்வியின் நோக்கங்களில் மிகவும் பிரதானமானவை “நாட்டுக்குகந்த சிறந்த நற்பிரஜையை தோற்றுவிப்பதேயாகும்.” இதுவே சாரணியத்தின் அடிப்படைத் தத்துவங்களில் காணப்படுகின்ற ஒரு சிறப்பம்சமாகவும் கொள்ளலாம். சமயத்தில் பற்று, நாட்டுப்பற்று, உலக சகோதரத்துவம், பிறருக்கு சேவையாற்றல், சாரண விதிகளை மதித்து நடத்தல், அரச சார்பற்ற சமூக மேம்பாட்டுக்கு உழைத்தல், நாட்டிற்குகந்த நற்பிரஜையாக தன்னை உருவாக்கிக் கொள்ளல் போன்றன சாரண அமைப்பின் அடிப்படை தத்துவங்களாக கடைப்பிடிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஒரு சாரணன் தனது வாக்குறுதியினை எடுக்கின்ற முறையோ மிக வித்தியாசமான முறையாக கொள்ளப்படுகிறது. இவற்றின் பிரகாரம் தனது கட்டை விரலையும் சுண்டு விரலையும் மடித்து மற்ற மூன்று விரல்களையும் விரித்து(நேராக நிமிர்த்தி ஒட்டியவாறு) சாரண வாக்குறுதி பெறல் வேண்டும். “என்னால் கூடுமானவரை என் சமயத்திற்கும், நாட்டிற்கும், என் கடமைகளைச் செய்வேன் எனவும், எக்காலத்திலும் பிறருக்கு உதவிபுரியவும், சாரண விதிகளுக்கு அமைவாக பணிந்து நடப்பேன் எனவும், என் கௌரவத்தின் மீது சத்தியம் செய்கி றேன்” என வாக்குறுதி பெறுவதன் ஊடாக சாரண இயக்கம் மாணவர்களையும் வளர்ந்தோரையும் ஏன் சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் சமூகத்தின் நலனே தனது நலன் எனக் கருதி தொண்டு செய்வதற்கு அர்ப்பணித்துள்ளது.

சமூகத்தின் பார்வை சிறுவயது முதல் நற்கல்வியை கற்று சீறும் சிறப்புமிக்கதான ஒழுக்க விழுமியமுள்ள, பண்பாளனாக வரவேண்டும் என்பதேயாகும். நெஞ்சமுள்ள நேர்மையாளனாக, பண்பும் பாசமும் கொண்டமைந்த முழு மனிதனை மாற்றுகின்ற, தங்கத் தொட்டிலிட்டுத் தாலாட்டுகின்ற கைங்கரியத்தினை இன்று சாரண இயக்கம் வளர்த்துள்ளது. “சாரணன் நம்பத்தகுந்தவன், பற்றுருதியாளன், நேசமும் மரியாதையும் கொண்டவன், மற்ற சாரணனுக்கு சகோதரன், வீரம் தெரிந்தவன், பிராணிகளின் தோழன், ஒத்துழைப்பவன், மகிழ்ச்சியுடையவன், சிக்கனமானவன், தனது எண்ணம், சொல், செயல் போன்றவைகளில் மிகவும் தூய்மையானவனாக காணப்படுபவனே சிறந்த சாரணன்” என சாரண விதிகள் கூறுகின்றன.
உலகில் மதிக்கப்படுகின்ற மிகப்பெரியதோர் அமைப்பாக இன்று வளர்ச்சிபெற்றுள்ள இச்சாரணர் இயக்கத்தை தோற்றுவித்த பேடன்பவல் பிரபு அவர்கள் தனது இளமைக் காலத்தில்; உதைப்பந்து, நடிப்பாற்றல், சித்திரம், சங்கீதம் போன்ற துறைகளில் ஆர்வம்மிக்கவராகவும் காணப்பட்டார். தனது 26ஆவது வயதில் இராணுவத்தில் உயர்பதவி பெற்று ஆபிரிக்கா சென்றவேளை இரு பிரிவினருக்கிடையில் ஏற்பட்ட சண்டையின் போது ஸுலு இனத்தலைவனைப் பிடிப்பதில் வெற்றி கண்டதன் விளைவு மிகவும் பாராட்டுக்குரியவராக பேடன் பவல்பிரபு அவர்கள் திகழ்ந்தார். முதலாவது இளைஞர் சாரணியத்தை 1908ம் ஆண்டிலும், 1909ம் ஆண்டில் முதலாவது சாரண விழாவை நடாத்தியதன் பின்னர் சாரணிய இயக்கத்தில் பல்வேறு சாரணர் பிரிவுகளையும் ஆரம்பித்த பவல் பிரபு அவர்கள் 1920ஆம் ஆண்டில் ஒலிம்பியா நகரில் முதலாவது ஜம்போரியை வெற்றிகரமாக அரங்கேற்றினார். அதே ஆண்டில் லண்டன் மாநகரில் உலக சாரணர் சபையை நிறுவினார். பின்வு கனடாவின் ஒட்டாவா நகரிலும், தன்போது ஜெனீவா நகரில் இதன் தலைமைக் காரியாலயத்தைக் கொண்டுள்ள உலக சாரணர்சபை 5கண்டங்களுக்குமான 5பிரிவுகளைக் கொண்டு இயங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

1921ஆம் 1934ஆம் ஆகிய ஆண்டுகளில் இரண்டு தடவைகள் இலங்கைக்கு வருகை தந்திருந்த பேடன் பவல் அவர்கள், அவர்களது சிந்தனையின் வடிவமான சாரணர் இயக்கம் 1912ம் ஆண்டில் எமது நாட்டில் உருவாக்கம் பெற்று கொழும்பில் 1957ம் ஆண்டில் முதலாவது உலக ஜம்போரி நடைபெற்றது. சாரணியத்தின் தார்ப்பரியம் உணரப்பட்டதன் காரணமாக இதேயாண்டில் பாராளுமன்ற 13ஆம் இலக்கச்சட்டத்தின் பிரகாரம் சாரணர் சங்கம் ஒரு அங்கிகாரம் பெற்ற அமைப்பாக நிறுவப் பட்டது. இவ்வாண்டு இலங்கையைப் பொறுத்தளவில் நூற்றாண்டு காலமாகும். இதனை சிறப்பிக்க தேசிய சாரணர் சங்கம் பலதரப்பட்ட செயற்பாடுகளை மேற்கொண்டுவருகின்றது. அத்துடன் சாரணர் இயக்கத்தைப் பயன்படுத்தி சிலர் தங்களை இனங்காட்டிக் கொண்டு அடையாளப்படுத்துவதும், பெயர்களுக்கு முன்னால் சங்கத்தினால் வழங்கப்படாத பதவிகளை இடுவதும் சாரணிய இயக்கத்தின் எழுச்சிக்கு தடையாக அமையும் எனவும் கூறப்படுகின்றது. இதனைத் தவிர்க்கும் முகமாக வலயக்கல்விப் பணிப்பாளர்கள் ஊடாக பிராந்திய ரீதியில் அதிகாரிகளை நியமித்து சாரணியத்தின் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லுவதும் முக்கியமாகும். குறிப்பாக கல்முனை கல்விப் பிராந்தியத்தில் மாவட்ட ஆணையாளர் எம்.ஐ.எம். முஸ்தபா அவர்கள் நீண்டகாலமாக இந்த அமைப்பின் செயற்பாடுகளுக்குள் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி வருகின்றார். இப்பகுதியில் சாரணியம் என்றால் அது முஸ்தபா ஸேர் என்கிற அளவுக்கு சாரணியத்தில் அதிதீத பற்றுமிக்கவராக திகழ்கின்றார்.
மேலும், சாரணியத்தின் செயற்பாடுகள் இன, மத, மொழி, சாதி வேறுபாடுகளுக்கப்பால் நல்லபல பண்புகளை இளம் வயதிலிருந்தே வளர்த்துக்கொள்ள சாரணர் பாசறைகளும், ஒன்றுகூடல்களும் வழிகாட்டுகின்ற பயிற்சிக்களமாகவும் காணப்படுகின்றன. வெறும் புத்தகக்கல்வியினால் பயனேதுமில்லை செயற்பாட்டுடனான தேர்ச்சிமையக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்;துள்ள இன்றைய கல்விப்புலத்தில் சாரணியத்தின் வேரூண்டலானது முக்கியத்துவமிக்கதாய் உணரப்பட்டுள்ளமையினால் சாரணியத்தில் மாணவர்கள் பெறுகின்ற உயர் விருதான ஜனாதிபதிவிருது கிடைக்கின்ற மாணவர்களின் உயர்கல்விக்கு அதாவது பல்கலைக்கழக நுழைவுக்கு துணைபுரியவும் சாரணியம் உதவுகின்றது.

இலங்கையின் அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் பதவிவழியாக வருகின்ற தலைவராக கொண்டமைந்துள்ள இலங்கையின் சாரணர்சங்கம் மாகாண மட்டத்தில் மாகாண சாரண ஆணையாளர்கள், மாவட்டங்கள் தோறும்; மாவட்ட ஆணையாளர்களும் நியமிக்கப்பட்டு பயிற்சி மற்றும் நிருவாக நடவடிக்கைகளுக்காக உதவி மாவட்ட ஆணையாளர்களும் நியமிக்கப்பட்டு நாடுமுழுவதும் பாடசாலைகள் மட்டத்திலும், வெளியிலும் இன்று சாரணிய செயற்பாடுகள் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றமையை காணலாம். தனிமனிதனாக இற்றைக்கு 155 ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்த பேடன் பவல் பிரபுவினது அயராத முயற்சியின் பலாபலன் விருட்சமாக உயர்ந்து வளர்;வதற்கு சாரணியத்தின் அனைத்து அம்சங்களிலும் மனிதாபிமானம் குடிகொண்டிருப்பதே ஆகும். இந்நாளில் அன்னாரது சமூகத்தொண்டினை அரங்கேற்றி சாரணியம் என்றும் வாழ ஸ்தாபகரை நினைவு கூர்ந்து சிறுபராயத்திலிருந்தே இதன் பலாபலனை வாழ்வில் இணைத்துக் கொள்ள ஒவ்வொரு மாணவனும் உறுதியெடுப்பதன் மூலம் சாரணியத்தி;ற்கும், அதன் ஸ்தாபகருக்கும் செய்யும் நன்றிக் கடனாகும்.