எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Saturday, May 17, 2025
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Monday, March 05, 2012

ஜெனீவா கூட்டத்தொடரின் கலநிலவரம் - நேரடி ரிப்போர்ட்

Print Friendly and PDF


(ஜெனீவாவிலிருந்து ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்) 
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 19ஆவது கூட்டத்தொடர் சுவிஸ், ஜெனீவா நகரில் கடந்த பெப்ரவரி 27ஆம் திகதி திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. இலங்கை அரசியல் வரலாற்றில் சர்வதேச நிகழ்வொன்றை நாட்டு மக்கள் மிகவும் கூர்ந்து அவதானித்த விடயமாக இந்த மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரை நோக்கினர் என்றால் அது மிகையாகாது.


ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திற்கும் இந்த மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் முக்கியத்துவம் பெற்றதாக அமைந்திருந்ததுடன், அமெரிக்கா தலைமையிலான அரசாங்கத்திற்கும் இது பிரதானமாக நோக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஒருவார காலமாக ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் குறித்து ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

நவநீதம் பிள்ளை ஏமாற்றினாரா..?
ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முதல் அமர்வில் உரையாற்றிய ஆணையாளர் நவநீதம்பிள்ளை, தனதுரையில் போது இலங்கை பற்றி ஒருவரி சொல்லையேனும் குறிப்பிடவில்லை. அவரது உரையின் அநேக பகுதிகள் சிரியாவில் நடைபெற்றுவரும் மோதல் நிலை சம்பவங்கள் தொடர்பிலும், அதனுடன் தொடர்புடைய மனித உரிமை நிலவரம் பற்றியதாகவே இருந்தது. ஜெனீவா வந்திருந்த அரசாங்கத் தரப்பினரும், தமிழர்சார் அமைப்புக்களும் ஊடகவியலாளர்களும் நவநீதம் பிள்ளையின் உரை தொடர்பில் பாரிய எதிர்பார்ப்புகளை கொண்டிருந்தனர். இருந்தபோதும் அந்த எதிர்பார்ப்புகள் எல்லாம் நிறைவேறவில்லை.


மகிந்த சமரசிங்கவும் திகைத்துப்போனார்
ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் முதல்நாள் அமர்விலேயே இலங்கை அரசாங்கத்தின் சார்பில் அமைச்சர் மகிந்த சமரசிங்கவிற்கு உரையாற்ற சந்தர்ப்பம் கிடைத்திருந்தது. தமக்கு முன்னர் உரையாற்றும் நவநீதம்பிள்ளை இலங்கை பற்றி குறிப்பிடுவார் அல்லது விமர்சிப்பார் என மகிந்த சமரசிங்கவும் எதிர்பார்த்திருந்தார். அதற்கு ஏற்றவகையிலயே அவரும் தனது முதல்நாள் அமர்வு உரையை தயாரித்திருந்தார்.

இருந்தபோதும் நவநீதம்பிள்ளை இலங்கை பற்றி எதுவும், குறிப்பிடாமல் போகவே தனது உரையின் சுருதியையும் குறைத்துக்கொள்ள வேண்டிய நிலை மகிந்த சமரசிங்கவிற்கு ஏற்பட்டது. மகிந்த சமரசிங்கவின் ஜெனீவா முதல்நாள் உரையை நோக்குவோமாயின் அவர் ஐ.நா. ஆணைக்குழுவை விமர்சிப்பதை முற்றிலும் தவிர்த்தார். மேற்கு நாடுகளை குறை காண்பதிலிருந்தும் பின்வாங்கிக்கொண்டார். அவரது உரை முழுவதும் ஒரு தற்காப்பு மற்றும் விளக்கம் கொடுத்தல் வகையிலேயே அமைந்திருந்தது. 

யார் உரையாற்றுவது?
ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முதல்நாள் அமர்வை இலங்கை தரப்பில் யார் உரையாற்றுவது என்பதில் சிக்கல் எழுந்ததாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸும் ஜெனீவாவில் தங்கியிருந்தமையால் அவரே முதல்நாள் அமர்வில் உரையாற்ற வேண்டுமென்ற வாதமும் எழுந்துள்ளது. அத்துடன் ஜெனீவாவிலுள்ள ஐ.நா. அலுவலகத்தின் இலங்கைக்கான தூதுவர் தாமர குணநாயகம் முதல்நாள் அமர்வில் உரையற்ற வேண்டுமென்ற வாதத்தையும் சிலர் முன்வைத்துள்ளனர். எனினும் இறுதியில் அமைச்சர் மகிந்த சமரசிங்கவுக்கே அந்த வாய்ப்பு கிட்டியுள்ளது.


அமைச்சர்களிடையே லடாய்..?
ஜெனீவாவிற்கு இம்முறை 52 பேரடங்கிய அரசாங்கத் தூதுக்குழு வந்திருந்தது. இக்குழுவில் இடம்பிடித்திருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் சிறப்பு ஆலோசகர் சஜின்வாஸ் குணவர்த்தனா ஜெனீவாவில் நடக்கும் நிலவரங்களை உடனுக்குடன் இலங்கைக்கு அனுப்பிவைத்துள்ளார். 

ஜெனீவா வந்திருந்த இலங்கைக் குழுவில் இடம்பெற்ற அமைச்சர்களிடையே சில முரண்பாடுகள் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஆபிரிக்க நாடுகளுக்கு அவசரமாக அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அமைச்சர்களிடையே முரண்பாடுகள் ஏதேனும் நிலவியதா என ஜெனீவா வந்திருந்த அமைச்சர்களிடம் வினவியபோது, அவர்கள் சிரித்துக்கொண்டு அப்படி முரண்பாடுகள் எதுவும் நிலவவில்லை, அமைச்சர்களிடையே முரண்பாடுகள் எதுவும் நடைபெறவில்லையெனவும் குறிப்பிட்டனர்.

காட்டிக்கொடுத்தது இந்தியா
இம்முறை ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இந்தியா எந்தப்பக்கம் என்ற கேள்வி பல்வேறு தரப்பினரிடையேயும் நிலவியது. இந்நிலையில் ஜெனீவா வந்திருந்த அமைச்சர் மகிந்த சமரசிங்கவை பெப்ரவரி 25ஆம் திகதி (அமர்வு ஆரம்பமாகும் 2 தினங்களுக்கு முன்னர்) தொடர்புகொண்டபோது அவர் மிக உறுதியாக இந்தியா இலங்கைக்கே ஆதரவளிக்கும் என தெரிவித்தார். மேலும் இலங்கை தரப்பினர் தமக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டுள்ள நாடுகளின் பிரதிநிதிகளுக்கு பெப்ரவரி 24ஆம் திகதி விருந்துபசாரம் வழங்கினர். இதன்போதும் இந்தியா, தாம் இலங்கைக்கே ஆதரவளிப்போமென பகிரங்கமாக தெரிவித்தது.


அத்துடன் முதல்நாள் அமர்வில் தாய்லாந்து வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு ஆதரவாக உரையாற்றியிருந்தார். பிரித்தானிய பிரதிநிதி இலங்கைக்கு எதிராக உரையற்றியிருந்தார். இதனால் தாய்லாந்து  தமக்கு ஆதரவாகவே செயற்படுமென இலங்கை அரசாங்கத் தரப்பினர் நம்பிக்கொண்டிருந்தனர். இந்நிலையில் இலங்கை அரசாங்கத் தரப்பினரை சந்தித்த ஜெனீவாவுக்கான இந்தியாவின் பிரதித் தூதுவர் டாக்டர் பாட்டசாரியார், தற்போது தாய்லாந்து இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டை மேற்கொண்டுள்ளதாகவும், தாய்லாந்து பிரதிநிதி தம்முடன் பேசும்போது இலங்கைக்கு எதிராகவே கருத்துக்களை முன்வைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்காவே முன்நின்று கொண்டு வருவதால் இதுவிடயத்தில் மிகுந்த அவதானமாக செயற்படுவதுடன், ஏனைய நாடுகளின் ஆதரவை திரட்டுவதிலும் தொடர்ந்து செயற்படுமாறும் அவர் இலங்கை அரசாங்கத் தரப்பினருக்கு உபதேசம் செய்துள்ளார். தாய்லாந்து தமக்கே ஆதரவளிக்குமென நம்பிக்கொண்டிருந்த இலங்கை, இந்தியாவின் தாய்லாந்து பற்றிய காட்டிக்கொடுப்பின் பின்னர் இலங்கைக்கு முன்னர் ஆதரவு தெரிவிப்பதாக கூறிய பல்வேறு நாட்டுப் பிரதிநிதிகளையும் மீண்டும் சந்தித்து கலந்துரையாடி தமக்கான ஆதரவை உறுதிப்படுத்திக் கொண்டுள்ளனர்.


அச்சப்பட்ட இலங்கை
ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கைக்கு எதிராக இம்முறை அமெரிக்காவே தீர்மானம் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுவதால் அதற்கு அதரவாக பல்வேறு பிரசாரங்களையும் அந்நாடு ஜெனீவாவில் ஆரம்பித்துள்ளது. இதன்பொருட்டு அமெரிக்காவிலிருந்து அந்நாட்டின் பொதுமக்கள் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான கீழ்நிலைச் செயலாளர் மரியா ஒரேரேயும் ஜெனீவா வந்துள்ளார்.

அமெரிக்கா குழுவினர் இலங்கைக்கு முன்னர் ஆதரவு தெரிவித்த நாடுகளின் பிரதநிதிகளையும், இதுவரை எந்தப் பக்கம் சாய்வது என்ற தீர்மானத்தை மேற்கொள்ளாமலும் இருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பு நாடுகளையும் கட்டம் கட்டமாக சந்தித்தது.

ஜெனீவா வந்துள்ள வெளிநாட்டுப் பிரதிநிதிகள் தங்கியிருக்கும் ஹோட்டல்களுக்குச் செல்லும் அமெரிக்கப் பிரதிநிதிகள் இலங்கைக்கு எதிரான பிரசாரத்தை மேற்கொண்டு, தமக்கு ஆதரவு திரட்டுவதில் தீவிரம் காட்டியுள்ளனர். ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகம் மற்றும் மண்டபத்திற்குள்ளும் அமெரிக்கா தனது பிரசாரத்தை முடுக்கி விட்டிருந்ததாக இலங்கை அரசாங்கப் பிரதிநிதிகள் தெரிவித்தனர். அமெரிக்காவின் பிரசார நடவடிக்கையானது ஒரு மேலாதிக்கத்துடன் காணப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.


கேள்விகளும், பதில்களும்
இதேவேளை, இலங்கைத் தரப்பினர் இலங்கை தற்போது அடைந்துள்ள முன்னேற்றங்கள், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த மேற்கொள்ளப்பட்டிருக்கும் செயற்பாடுகள் உள்ளிட்ட நடவடிக்கைகளை சர்வதேச சமூகத்திற்கும், புலம்பெயர்ந்த தமிழர் சார்பு பிரதிநிதிகளுக்கு விளக்கிக் கூறுவதிலும் கடந்த வியாழக்கிழமை 01ஆம் திகதி ஈடுபட்டிருந்தனர்.

இதில் சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். அவர்களே இலங்கைத் தரப்பினரிடம் பல்வேறு கேள்விகளையும் தொடுத்தனர். புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் விளக்கங்களை கோரியுள்ளனர். எதிர்பார்க்கப்பட்டதைவிட இந்நிகழ்வு சுமூகமாகவே நடைபெற்று முடிந்ததாக இலங்கையிலிருந்து ஜெனீவா வந்து இந்நிகழ்வில் பங்கேற்ற ஆங்கில ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்தார்.


இலங்கையின் நேரம் முடிந்து விட்டதா..?
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வு ஆரம்பமான பெப்ரவரி 27ஆம் திகதி தொடக்கம் இலங்கை தரப்பினர் பரவலாகவே வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கு தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியும், அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மானத்தை எதிர்க்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுமே பொதுவான பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.

நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரு முக்கிய உரைகள் நடைபெற்றன. ஆமெரிக்காவின் பொதுமக்கள் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான கீழ்நிலைச் செயலாளர் மரியா ஒரேரே ஜெனீவா மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை ஆகிய இருவரும் இலங்கை செயற்பாடுகளை விமர்சித்தனர்.


இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்காக சர்வதேசம் 3 வருடங்களாக காத்திருந்ததாகவும் அதற்கான நேரம் தற்போது நழுவி விட்டதாகவும் நல்லிணகத்தை ஏற்படுத்தாமலும் பொறுப்புக் கூறப்படாமலும் இறுதியான சமாதானத்தை பெறமுடியாது என்பதை அனுபவத்தில் இருந்து அறிந்து கொண்டதாகவும் இங்கு உரையாற்றி மரியா ஒரேரே தெரிவித்தார். ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு எடுக்கப்போகும் நடவடிக்கையானது இலங்கையில் நிரந்தரமான அமைதி விதைகளை விதைக்க வேண்டுமெனவும் அவர் தனதுரையின்போது குறிப்பிட்டார்.

இதேவேளை நேற்று வெள்ளிக்கிழமை ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தில் நவநீதம்பிள்ளையும் உரையாற்றினார். இலங்கை நல்லிணக்க ஆணைக்குழவின் அறிக்கையை தாம் வரவேற்பதாகவும் இருந்தபோதும் ஐ.நா. நிபுணர் குழு சுட்டிக்காட்டியுள்ள விவகாரங்கள் பற்றி நல்லிணக்க ஆணைக்குழு பதில் வழங்கவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.


ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆற்றப்பட்ட இந்த இரு முக்கிய உரைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவோ அல்லது பிரதிபலிப்புகளை வெளிப்படுத்தவோ இலங்கை அரசாங்கத்தினால் முடியவில்லை. இலங்கை அரசாங்கத் தரப்பினர் தமது ஜெனீவா விஜயத்தை முடித்துக்கொண்டு இலங்கை திரும்பிவிட்டதே இதற்குக் காரணமாகும். எனினும் ஜெனீவாவில் இலங்கை இராஜதந்திரிகளில் ஒருதொகையினர் தொடர்ந்தும் தங்கியிருப்பரெனவும் அவர்கள் சர்வதே சமூகத்தை தெளிவுபடுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுவரெனவும் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.

வெற்றிபெறப் போவது யார்..?
ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 19ஆவது கூட்டத்தொடரில் எம்மால் இங்கு ஒருவிடயத்தை தெளிவாக அவதானிக்ககூடியதாக இருந்தது. அதாவது ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பு நாடுகளை இலங்கை விவகாரத்தில் 3 வகையாக வகைப்படுத்தலாம்.

1 - இலங்கைக்கு எதிரான நாடுகள்
2 - இலங்கைக்கு ஆதரவான நாடுகள்
3 - இதுவரை தீர்மானம் மேற்கொள்ளாத நாடுகள்


மேற்சொன்ன 3 வகை நாடுகளின் வரிசையில் மேற்கு நாடுகளின் ஒட்டுமொத்த எதிர்ப்பு இலங்கைக்கு உண்டு. எனவே, மேற்கு நாடுகளில் எந்தவொரு நாடும் இலங்கைக்கு ஆதரவாக செயற்படப்போவதில்லை. அதேபோன்று அமெரிக்காவுக்கு எதிரான நாடுகளும் அனேக அணிசேரா மற்றும் அரபு நாடுகளும் இலங்கைக்கு ஆதரவாகவே உள்ளன. இந்நாடுகள் இலங்கைக்கு ஆதரவாகவே வாக்களிக்கும் வாய்ப்புகள் உள்ளன.

இங்கு முக்கியத்துவம் பெறுவது மூன்றாவது வகை நாடுளேயாகும். இந்நாடுகள்தான் இலங்கைக்கு ஆதரவளிப்பதா அல்லது அமெரிக்கா பக்கம் சாய்வதா என்ற தீர்மானத்தை இதுவரை மேற்கொள்ளவில்லை. இந்நாடுகள் மேற்கொள்ளும் தீர்மானம்தான் ஐ.நா. சபையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள பிரேரணை வெற்றிபெறுமா அல்லது தோல்வியடையுமா என்பதை தீர்மானிக்கும் நாடுகளாகும்.


ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவில் 47 நாடுகள் அங்கம் வகிக்கும் நிலையில் எதிர்வரும் 23ஆம் திகதி, மாலை 6 மணியுடன் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 19ஆவது கூட்டத்தொடர் நிறைவடைகிறது. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 10ஆவது சரத்தின்படி ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டுமாயின், கூட்டத்தொடர் நிறைவடைய 72 மணித்தியாலங்களுக்கு முன்னதாக தீர்மானத்தை சமர்ப்பிக்கவேண்டும்.

அந்தவகையில ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இதுவரை தீர்மானம் மேற்கொள்ளாமல் மௌனம் சாதிக்கும் நாடுகளின் பக்கமே எல்லோருடைய கவனமும் திசை திரும்பியுள்ளது.

அமெரிக்க தீர்மானத்திற்கு புலம்பெயர் தமிழர்களும் எதிர்ப்பு

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர் பான தீர்மான நகல் வரைபானது அமெரிக்க அரசாங்கத்தின
மேலும் »

பிரதான செய்திகள்
சர்வதேச செய்திகள்

கடாபி மகனின் 10 மில்லியன் பெறுமதியான வீட்டுக்கு ஆப்பு

லிபியாவின் சர்வாதிகாரியாக கடந்த 32 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த கடாபி புரட்சிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்... மேலும் »

சிறப்புக் கட்டுரை
சினிமா செய்திகள்

டெல்லியில் இன்று காதலனை கரம் பிடித்தார் ரீமா சென்

நடிகை ரீமா சென், காதலன் சிவ் கரண் சிங் திருமணம் டெல்லியில் இன்று நடந்தது. ‘மின்னலே, தூள், செல்லமே, ‘ஆயிரத்தி... மேலும் »

வர்த்தக செய்திகள்

டேவிட் பீரிஸ் கம்பனியின் அலுவலகம் இடமாற்றம்

(கலாநெஞ்சன்) வரையறுக்கப்பட்ட டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனியின் நீர்கொழும்பு பிரதேச அலுவலகம் புதிய இடத்த... மேலும் »

மண்டு வாத்தியார்

என்னடா இது? இந்த மாதம் ஆர்ப்பாட்ட சீசனா?

எப்புடி சுகமா இருக்கிறியளோ? நமக்குத்தான் அது கொஞ்சம் பஞ்சமாக் கெடக்கு. அதுதான் கனநாளா என்னக் காணல. இப்ப என்ன... மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452