Published On: Wednesday, January 25, 2012
(சம்யா)
இலங்கை வந்திருந்த இந்திய அறிவியல் ஞானியும் அணு விஞ்ஞானியுமான முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம் கிழக்கு மாகாணத்திற்கு வருகைதராமை கவலையான விடயம் என முன்னாள் வர்த்தக வாணிபத்துறை அமைச்சரான ஏ.ஆர். மன்சூர் தெரிவித்தார். இலங்கையின் தமிழ்பேசும் மக்கள் செறிந்து வாழ்கின்ற கிழக்கு மாகாணத்திற்கும் விஞ்ஞானி அப்துல் கலாம் வருகை தராமை கவலையான விடயமாகும் என்றும் தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் கிழக்கு மாகாணத்தில் கிழக்கு பல்கலைக்கழகம், தென்கிழக்கு பல்கலைக்கழகம் போன்ற உயர்கல்வி பீடங்கள் அமைந்துள்ளன. இங்குள்ள மாணவர்கள் மூவினத்தையும் பிரதிநிதித்துவம் செய்கின்றனர். தற்காலத்தில் விஞ்ஞானி அப்துல் கலாம் அவர்கள் மாணவர்களை சந்தித்து தத்துவார்த்த ரீதியிலான உரையாடல்களை மேற்கொண்டு வருவதையும் காணலாம்.
இந்நிலையில் எதிர்கால இந்தியாவை எவ்வாறு கட்டியெழுப்பலாம் என்பது பற்றிய ஆய்வை மேற்கொண்டு அதில் தீர்க்கதரிசனமாக இயங்கி வருகின்ற பெருமகானாவார். இலங்கையையும் எவ்வாறு மாற்றியமைக்கலாம் என்கிற விடயங்களையும் கிழக்கு வாழ் இளைஞர்கள் மத்தியில் கூறவேண்டிய கடப்பாடும் உண்டு. இப்பிராந்திய மாணவர்கள், அறிஞர்கள், தலைவர்கள், கல்விமான்களை சந்திப்பதற்கான ஏற்பாடொன்றை கிழக்கில் செய்திருக்கலாம். இவரது கருத்துக்களை யுத்தத்தாலும், இன முரண்பாடுகளாலும் தொய்வுற்ற அப்பிராந்திய மக்களுக்கு ஆறுதல் வழங்கியிருக்கும். அதேவேளை புது உத்வேகத்தையும் கொடுத்திருக்கும் எனவும் தெரிவித்தார்.