Published On: Wednesday, February 15, 2012
பகலி்ல் ஓர் இருள்; கொழும்பில் அசாதரண காலநிலை

நேற்று பிற்பகல் 3.15 மணியளவில் கொழும்பு, அதன் சுற்றுப்புறங்களில் உள்ள பெரும்பாலான பிரதேசங்கள் திடீரென இருளடைந்து சென்றன. ஆரம்பத்தில் மழைக்கால இருள்போன்று ஆகாயம் இருளடையத் தொடங்கியது. வழமைபோன்ற மழைக்கால இருள் மிக வேகமாக மாற்றமடைந்தது. ஆகாயம் முழுமையாக இருண்டு போனது. பின்னர், எங்குமே இருள் பரவியது. எதிரே வருபவரை அடையாளம் காண்பதும் சிரமமாக இருந்தது. பிற்பகல் 3.15 மணியானதும் இரவு 7.30 மணிபோன்ற தோற்றத்தைத் தந்தது.
திடீரென அசாதாரணமாக உருவாகிய இந்நிலைமையினால் மக்கள் ஓரளவு பரபரப்படைந்தனர். கொழும்பில் பிற்பகல் 3.30 மணியளவில் வீதிவிளக்குகளும் எரிய விடப்பட்டன. வீதிகளில் வாகனங்கள் விளக்குகளை ஒளிரவிட்டபடியே சென்றன. சற்று நேரத்தின் பின்னர் இடிமுழக்கத்து டன் பலத்த மழையும் ஆரம்பமானது. கொழும்பு, நீர்கொழும்பு, வத்தளை, தெஹிவளை போன்ற ஏராளமான பிரதேசங்களில் மழை பொழிந்தது.
வீதிகளில் வாகனங்கள் தடைப்பட்டு நின்றதால் வாகன நெரிசல் ஏற்பட்டது. அரைமணிநேர மழையே பெரும் வெள்ளத்தை ஏற்படுத்தியது. கொழும்பில் நேற்று பகலில் திடீரெனத் தோன்றிய இருள் சுமார் அரைமணித்தியாலம் சென்ற பின்னரே படிப்படியாக நீங்கத் தொடங்கியதுடன், வானமும் சிறிது வெளுக்கத் தொடங்கியது.