(அமைச்சின் ஊடகப் பிரிவு)
உலகலாவிய பொருளாதார பிரச்சினைகள் நிலவிவரும் அதேவேளையில், மறுபக்கத்தில் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுவரும் குழப்பமான அரசியல் நிலைகள் எங்களுக்கு ஒரு சவாலாகவும் அமைகின்றது என கைத்தொழில், வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். பாகிஸ்தான் இஸ்லாமபாத்தில் இடம்பெற்ற 6ஆவது தெற்காசிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான அமைச்சர்களின் மாநாட்டில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்; உலக பொருளாதாரம் ஒரு இக்கட்டான சூழ்நிலையினை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில் தெற்காசிய வர்த்தக அமைச்சர்கள் ஒன்று கூடியுள்ளமை மிகவும் காலத்தின் தேவையென்று கருதுகின்றேன். உலகின் பல பாகங்கள் குறிப்பாக மேற்குலகின் வளர்ந்த நாடுகள் வேளையில்லா திண்டாட்டம். கடன்சுமை, வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை ஆகிய பொருளாதார பிரச்சினைகளால் தவிர்த்துக் கொண்டிருக்கின்றன. இப்பிரச்சினைகளிலிருந்து மீள்வதற்கு அந்தந்த நாடுகள் பல முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், இந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சி அடி மட்ட நிலையிலேயே உள்ளது.
உலகில் உள்ள நாடுகள் இன்று ஒன்றோடு ஒன்று தங்கியிருப்பதால் இந்த பொருளாதார மந்த நிலையிலிருந்து நாங்கள் இலகுவாக மீள்ச்சி பெறமுடியாது. பொருளாதார கஷ்டத்திலுள்ள நாடுகளுக்கே நாங்கள், எங்களின் பொருட்களை ஏற்றுமதி செய்வதால், அந்த நாடுகளில் தற்போது நிலவி வரும் பொருளாதார மந்த நிலை எங்கள் நாடுகளையும் பாதிக்க செய்கின்றது. இந்த பொருளாதார மந்த நிலை தொடர்ந்து நீடிக்குமாயின் நாடுகள், பாதுகாப்பு, கொள்கைகளை கடைபிடிக்க நேருமிடத்து சுதந்திர வர்த்தகம் என்ற கோட்பாட்டை தீவிரமாக பாதிக்கும்.
ஒரு பக்கத்தில் உலகலாவிய பொருளாதார பிரச்சினைகள் நிலவி வரும் அதேவேளையில் மறு பக்கத்தில் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுவரும் குழப்பமான அரசியல் நிலைகள் எங்களுக்கு ஒரு சவாலாகவும் அமைகின்றது. உலகத்துக்கு எரிபொருள் வழங்கும் பிரதான வழங்குநராக மத்திய கிழக்கு பிரதேசம் விளங்குகின்றது. அத்துடன் எங்களது ஏற்றுமதிகளும் அந்த நாடுகளுக்கு பெருமளவில் சென்றடைகின்றன. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்படும் அரசியல் குழப்பங்கள், இறுதியில் உலக பொருளாதாரத்தையே பெருமளவில் பாதிக்கக் கூடும்.
இந்த சூழ்நிலையில் தற்போது உள்ள ஏற்றுமதி சந்தைகள், எதிர்காலத்திலும் தொடர்ந்து இருக்குமென எங்களால் அறுதியிட்டு கூறமுடியாது. ஆகவே, இந்த அமைச்சர்களின் கூட்டத்தை நாங்கள் உச்ச அளவுக்கு பயன்படுத்தி எமது பிராந்தியத்திலேயே சுதந்திர வர்த்தகத்தையும் முதலீடுகளையும் அதிகரிப்பதற்கான யுத்திகளை அடைவதற்கு யதார்த்தமாக செயற்படல் வேண்டும்.
சுதந்திர வர்த்தகத்திற்கான தெற்காசியாவின் முதலாவது கூட்டத்தில் தெற்காசிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் பிராந்தியங்களுக்கிடையில் வர்த்தகத்தை அதிகரிப்பதற்கு வழிவகுக்கும் என நாங்கள் எதிர்பார்த்தோம். இந்த நோக்கத்துக்காக நாங்கள் ஒரு சிறப்பான ஒழுங்கு கட்டமைப்பினையும்,வழிமுறைகளையும் உருவாக்கிய போதிலும் நாங்கள் எதிர்பார்த்த அளவிற்கு, தெற்காசிய நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் வளர்ச்ச்சியடையவில்லை. இதற்கான முக்கிய காரணம், பொருட்களின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகளில் சில கட்டுப்பாடுகளை பேணிவருவதாகவும் தெற்காசிய நாடுகளிடையே வர்த்தகத்தை வளர்ப்பதற்கு வரிகளை இல்லாமல் செய்தோ அல்லது குறைப்பதாலோ வர்த்தகத்தினை அதிகரிக்க முடியாது. பயன்தரத்தக்க முறையில் இப்பிராந்தியத்தின் வர்த்தகத்தை அதிகரிப்பதாயின் நாங்கள் மேலும் பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதில் மாறுபட்ட கருத்துகிடையாது என நம்புகின்றேன்.
சுங்க நடைமுறைகளை இலகுவாக்குதல், தரங்களை பேனுதல், பரிசோதித்தல், மதிப்பீடு செய்வதில் இணக்கப்பாடு, போக்குவரத்து வசதிகள் ஆகியனவைகளில் நாங்கள் முக்கிய கவனம் செலுத்த வேண்டியுள்ளது. மேலும் வெளிப்பாடு இல்லாமை, நடைமுறை தாமதங்கள், செயற்திறனற்ற நிர்வாக நடைமுறைகள் ஆகியனவும் மறைமுகமான தடைகளாக திகழ்ந்து வருகின்றன. நாங்கள் இவ்விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்தி விரைவான நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே. எங்களது பிராந்தியத்தில் வர்த்தகத்தை அதிகரித்து முதலீடுகளை கவர முடியும். தெற்காசிய பிராந்தியத்துக்கு அப்பாலும் உள்ள சந்தைகளை நாங்கள் சென்றடைந்து எமது ஏற்றுமதிகளை அதிகரிப்பதற்கு ஒரு உபாய இணக்கப்பாடுகளை அடைதல் வேண்டும்.
மூன்று தசாப்த காலம் பயங்கரவாதத்தின் பின்பு இலங்கையின் பொருளாதாரம், ஒரு புதிய யுகத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. உதாரணமாக கடற்றொழில் துறை நாட்டில் நிலவிய அசாதாரண சூழல் காலத்தில் மிகவும் இக்கட்டான நிலையில் இருந்துவந்த போதிலும் இப்போது புத்துயிர் பெற்று விரைவாக வளர்ச்சியடைந்து வருகின்றது. இலங்கையில் சமாதானம் ஏற்பட்டதை தொடர்ந்து வடக்கிலும், கிழக்கிலும் விவசாயத் துறையும் பெரும் வளர்ச்சியை கண்டுவருகின்றது. அந்த பின்னயில் பாதிக்கப்படும் பொருட்களின் நிரலிலிருந்து அகற்றப்பட வேண்டிய பொருட்களை இனம் கானும் நோக்கத்துடன் பங்குரித்தானவர்களுடன் எனது அமைச்சு பல சுற்று பேச்சுக்களை நடாத்தியது.
இதன் காரணமாக பாதிக்கப்படும் பொருட்களின் நிரலை தயாரிப்பதில் தாமதம் ஏற்பட்டது. இலங்கை ஒரு சிறிய மற்றும் பாதிப்படையக் கூடிய பொருளாதாரத்தை கொண்ட நாடாக இருப்பதால் சில பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள் என நான் நம்புபகின்றேன். எனவே, எங்களது எதிர் கால பேச்சு வார்த்தைகளிலும் நீங்கள் ஒரு புரிந்துணர்வையும் நெகிழ்வுத் தன்மையினையும் காட்டுவீர்கள் என எதிர்பார்க்கின்றேன்.
சேவைகள் வழங்குதல் தொடர்பாக தாராளத் தன்மை வழங்கப்படல் வேண்டும் என்பது ஒரு அண்மைக்கால தொனியாக இருப்பதுடன், இது 1994 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. எங்களது பொருளாதாரத்தின் அண்மைக்கால வளர்ச்சியை உற்று நோக்கும்போது, எங்களது சகல பொருளாதாரத் துறைகளிலும் சேவைத் துறை ஒரு முக்கியமான பங்கினை ஆற்றிவருகின்றது. தெற்காசிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ், சேவைகள் தொடர்பான வர்த்தகம் பற்றிய பிராந்திய ஆய்வறிக்கையில் தெற்காசிய பொருளாதாரங்களின் வளர்ச்சிக்கு சேவைகளும் ஓர் இயந்திரமாக அமைந்துள்ளது என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே, தெற்காசிய உறுப்பினர்களை கொண்ட நாங்கள் எங்களின் நாடுகளுக்கு பொறுத்தமான முறையில், சேவைகளின் வளர்ச்சியை கருத்திற்கொள்ள வேண்டியது அத்தியவசியமாகும். இது ஒரு இலகுவான பணியல்ல. தெற்காசிய நாட்டின் மக்கள் தொகை ஏறக்குறைய 1.6 பில்லியனாகும். இது உலக சனத்தொகையில் ஜந்தில் ஒரு பகுதியாகும். எமது நாடுகள் வேறுபட்ட மட்டங்களில் வளர்ச்சியடைந்து வருகின்ற போதும் நாங்கள் ஒரே மாதிரியான சேவைகளை வழங்கிவருகின்றோம். எமது உள்ளுர் சந்தையில் இச்சேவைகளை விரிவுபடுத்துவதற்கு நாங்கள் நடவடிக்கையெடுப்பதுடன், அவைகளின் ஏற்றுமதி திறனையும் அதிகரித்தல் வேண்டும்.
இந்த இலக்கை நாங்கள் அடைவோமானால் எங்களுக்கிடையே அந்த சேவைகளை நாங்கள் வழங்கிக் கொண்டு ஏனைய நாடுகள் மீது தங்கியிருப்பதை குறைத்துக் கொள்ளலாம். தெற்காசிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கீழான முழு பயன்களையும் அடைவதற்கு இலங்கை கடற்பாட்டுடனும், முழுமையான ஈடுபாட்டுனும் செயற்பட்டுவருகின்றது என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தமதுரையில் குறிப்பிட்டார்.